அரசியல் தலைவர்களில் சிலர் மட்டுமே வாரிசுகளை, தங்கள் பாதையிலேயே பயணம் செய்ய வைக்கிறார்கள்.
ஆனால், சினிமா உலகில் பெரும்பாலான நட்சத்திரங்கள், தங்கள் வாரிசுகளை திரைத்துறையிலேயே களம் இறக்கி விட்டுள்ளனர். சிலர் ஜெயித்தனர். பலர் தோற்றனர்.
கமலஹாசனுக்கு ஸ்ருதி, அக்ஷரா என இரண்டு மகள்கள். இருவருமே நடிகைகள் ஆகி விட்டார்கள். கமலைப் போலவே ரஜினிகாந்துக்கும் இரண்டு மகள்கள் தான். ஆனால் அவர்களை நடிப்புப் பக்கம் நெருங்க விடவில்லை ரஜினி.
மூத்த மகள் ஐஸ்வர்யா, டைரக்ஷன் துறையில் கவனம் செலுத்தி வருகிறார். 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ள அவர், இப்போது ‘லால் சலாம்’ எனும் படத்தை இயக்கியுள்ளார்.
கிரிக்கெட்டை மையமாக கொண்ட இந்தப் படத்தில் ரஜினி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். ரஜினியின் இரண்டாவது மகள் சவுந்தர்யாவுக்கு இயக்கம், தயாரிப்பு ஆகிய இரு இலாக்காக்களிலும் விருப்பம்.
தனது தந்தை ரஜினி நடித்த, கோச்சடையான் ’படம் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆனார்.
இதனைத் தொடர்ந்தை தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை டைரக்ட் செய்தார்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமா பக்கம் தலை காட்டியுள்ளார், சவுந்தர்யா.
அவர், அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து ‘கேங்க்ஸ்’ என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.
நோவா ஆபிரஹாம் இயக்கும் இந்தத் தொடரில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார்.
‘கேங்க்ஸ்’ வெப்தொடரின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியுள்ளது.
இதனை தனது சமூக வலைதளத்தில் சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
அந்த வலைதளப் பதிவில், “2010-ம் ஆண்டு கோவா திரைப்படத்தை தயாரித்தேன். 13 வருடங்கள் கழித்து மீண்டும் தயாரிப்பாளர் நாற்காலியில் அமர்ந்துள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அப்பாவை வைத்து ‘ஸ்டார்ட்.. கட்’ சொல்வது எப்போ?
-பாப்பாங்குளம் பாரதி.