லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி’ விஜய் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்த மாதம் 19 ஆம் தேதி படம் ரிலீஸ்.
இதனை தொடந்து விஜய்யின் 68-வது படத்தை ‘மங்காத்தா’ புகழ் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரத்தின் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்துக்கு ‘தளபதி 68’ என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக அமெரிக்க சென்றிருந்த விஜய் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.
விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் திரிஷாவும், சினேகாவும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோரும் நடிப்பதாக கூறப்படுகிறது.
கேஜிஎஃப்-2, கேம் சேஞ்சர் போன்ற படங்களின் ஸ்டண்ட் மாஸ்டர்களான அன்பறிவ், இந்தப் படத்துக்கு சண்டை காட்சிகளை அமைக்க உள்ளனர்.
‘தளபதி 68’ படத்தின் பூஜை அடுத்த மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஷுட்டிங்கும் உடனே ஆரம்பமாகும்.
‘தல’ அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்ததும், லைகா நிறுவனத்துக்கு கால்ஷீட் கொடுத்தார்.
அந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்தது. பல காரணங்களால் அந்த திட்டம் கை விடப்பட்டது.
இந்நிலையில், இயக்குநர் மகிழ் திருமேனி அஜித்திடம் சொன்ன கதை அவருக்கு பிடித்திருந்தது.
ஓகே சொல்லி விட்டு, பைக் பயணம் மேற்கொள்ள வெளிநாடுகளுக்கு பறந்து விட்டார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் படத்துக்கு ‘விடாமுயற்சி’ என பெயர் சூட்டப்பட்டது. அனிருத்தை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்தனர்.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது.
ஒரு கட்டத்தில் ‘விடா முயற்சி’ கை விடப்பட்டு விட்டதாக ஒரு செய்தி பரவியது. அதனை லைகா மறுத்தது இந்நிலையில், ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் 4 ஆம் தேதி அஜர்பைஜானில் பூஜையுடன் தொடங்க உள்ளதாக தெரிய வந்துள்ளது.
அங்கு 15 நாட்கள் அஜித் பங்கேற்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.
இதனை தொடர்ந்து அபுதாபி பாலைவனத்தில் ஆக்ஷன் காட்சிகளை எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார்.
ஷுட்டிங் ஏற்பாடுகளை தொடங்க, விடாமுயற்சி படக்குழு அபுதாபி புறப்பட்டுச் சென்றுள்ளது. அஜர்பைஜான், அபுதாபி தவிர பல்வேறு வெளிநாடுகளிலும் படப்பிடிப்பை நடத்தத் திட்ட மிட்டுள்ளனர்.
இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லனாக நடிக்க இந்தி நடிகர் சஞ்சய் தத்திடம் பேசிவருகின்றனர். இவர் லியோ படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.
கடந்த பொங்கல் திருநாளில் விஜயின் வாரிசும், அஜித்தின் துணிவும் ஒரே நாளில் வெளியானது.
இப்போது இருவரது பட பூஜைகளும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெற உள்ளது. இரு படங்களும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகுமா எனத் தெரியவில்லை.
-பாப்பாங்குளம் பாரதி.