லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது ஏன்?

அரசியலில் குதிக்க ஆயத்தமாகி வரும் விஜய்க்கு இப்போதே நெருக்கடிகள் ஆரம்பமாகி விட்டன. அவரது ‘லியோ’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் இன்றைய தினம், ஷங்கர், மணிரத்னத்தை விட சந்தை மதிப்பு மிக்க இயக்குநராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.

மாநகரம், கைதி ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அவர், விஜய் ஹீரோவாக நடித்த மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியால், ‘மோஸ்ட் வாண்டட்’  டைரக்டர் ஆனார்.

உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் ஆகியோரே அவர் இயக்கத்தில் நடிக்க ஆர்வம் காட்டினர். இருவருமே லோகேஷ் கனகராஜை அழைத்துப் பேசினர்.

உடனடியாக கமல் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார். அதுதான் ‘விக்ரம்-2’. கமலஹாசன் தயாரித்த அந்தப்படம், அவருக்கு 100 கோடி ரூபாய் லாபத்தை அள்ளித் தந்தது.

விஜயுடன் ‘லியோ’ படத்தில் மீண்டும் இணைந்துள்ள லோகேஷ் கனகராஜ், இதனையடுத்து, ரஜினி நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தை இயக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

‘லியோ’ படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் இந்தி நடிகர் சஞ்சய் தத், தமிழில் அறிமுகம் ஆகிறார்.

அர்ஜுன், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார். ‘லியோ’ அடுத்த மாதம் 19 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் சனிக்கிழமை சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறுவதாக இருந்தது.

விழாவில் பங்கேற்க தமிழகம் முழுவதிலும் இருந்து ரசிகர்களை வரவழைக்க விஜய் மக்கள் இயக்கம் திட்டமிட்டிருந்தது. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

‘லியோ’ பட இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என அந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் அறிவித்துள்ளது.

இது குறித்து தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவு இது.

“லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்கிறோம். நிகழ்ச்சியைக் காண வரும் ரசிகர்களின் டிக்கெட் கோரிக்கைகள் எதிர்பார்த்ததை விட அதிகமாக வருகின்றன.

எனவே பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் மற்றும் ரசிகர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளோம். பலர் நினைப்பது போல், இது அரசியல் அழுத்தங்களினாலோ அல்லது வேறு காரணங்களினாலோ அல்ல” எனச் சொல்கிறது அந்த அறிக்கை.

‘எங்க அப்பன் குதிருக்குள் இல்லை’ என்பது போல் ‘அரசியல் காரணங்களால் விழாவை ரத்து செய்யவில்லை’ என பட நிறுவனம் கூறியிருப்பதை தமிழ் சினிமா உலகம் மட்டுமல்ல, அரசியல் உலகமும் நகைப்பாகவே பார்க்கிறது.

லியோ ஆடியோ வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட உண்மையான காரணம் என்ன?

அந்தப் படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கேட்டுள்ளது. ஆனால் பட நிறுவனம் கொடுக்க மறுத்து விட்டது.

இந்தப் பின்னணியில் தான் விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கோடம்பாக்கத்தில் செய்திகள் உலா வருகின்றன.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியின்போது நிகழ்ந்த களேபரங்களை சுட்டிக்காட்டி, விழாவுக்கு போலீசார் அனுமதி மறுத்ததாக இன்னொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

எது உண்மை?

விஜய் தரப்பு ஆட்கள் மழுப்பலாக பதில் சொல்கிறார்கள்.

விஜய்யின் மேனஜரும், ‘லியோ’ படத்தின் இணைத் தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பழனிச்சாமி, “இது எங்களுக்கு கடினமான முடிவுதான். ரசிகர்களுக்கு இருக்கும் ஏமாற்றம், எங்களுக்கும் இருக்கிறது. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் எதுவும் சரியாகக் கைகூடி வரவில்லை.

டிக்கெட்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் அனைவரின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்தோம்’ என தெரிவித்துள்ளார்.

இசை வெளியீட்டு விழா ரத்தானதால் விஜய் ரசிகர்கள் சோக கீதம் இசைக்கின்றனர் என்பது உண்மை.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment