ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த தருணத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த்.
அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டார்.
ஆனால், சொல்லாமல் கொள்ளாமல் திடீரென தேமுதிக எனும் கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த், மெச்சத் தகுந்த வெற்றியைப் பெற்றார். அவரது ஆரோக்கியக் குறைவால், கட்சியும் படுத்த படுக்கையாகி விட்டது.
இந்த நிலையில் தான் கமல்ஹாசன், யாரும் எதிர்பாரத வகையில் அரசியல் களத்தில் குதித்தார்.
கடந்த 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியைத் தொடங்கினார். 2019 ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிட்டது.
சென்னை, கோவை போன்ற நகரங்களில் அவரது கட்சி வேட்பாளர்கள் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்றனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி வைத்தார்.
இரு கட்சிகளும் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை. அதேநேரம் 180 தொகுதிகளில் போட்டியிட்ட கமல் கட்சி 2.6 சதவீத வாக்குகளைப் பெற்றது.
கோவை தெற்குத் தொகுதியில் போட்டியிட்ட கமல், பாஜகவின் வானதி சீனிவாசனிடம் 1700 வாக்கு வித்தியாசத்தில் தோற்றுப்போனார்.
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்தில் களம் கண்டது தவறு என பின்னர் உணர்ந்தார், கமல். அந்த மாவட்டத்தில் திமுக கூட்டணியும் ஒரு தொகுதியிலும் ஜெயிக்கவில்லை.
இப்போது மக்களவைத் தேர்தல் நெருங்கி வருகிறது. தனித்து போட்டியிட கமல் விரும்பவில்லை. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாதயாத்திரையில் கலந்து கொண்டு, அவரது நட்பை கமல் பெற்றுள்ளார்.
இதனால் காங்கிரஸ்-தி.மு.க. அங்கம் வகிக்கும் ’இந்தியா’ கூட்டணியில் இணைந்து போட்டியிடலாம் என கமலுக்குள் ஒரு திட்டம் இருந்தது.
தமிழகத்தில் ‘இந்தியா’ அணி ‘ஹவுஸ்ஃபுல்’லாக உள்ளது. அங்கே தனக்கு இடம் கிடைக்குமா? கிடைத்தாலும், தான் விரும்பும் தொகுதியை திமுக தருமா? எனும் சந்தேகம் கமலுக்கு இருந்தது.
இந்த நிலையில், தமிழக அரசியல் காற்று இப்போது திசை மாறியுள்ளது
பாஜகவை கூட்டணியில் இருந்து அதிமுக கழற்றி விட்டுவிட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் சேரலாம் என கட்சி நிர்வாகிகள் கமலுக்கு யோசனை சொல்லி உள்ளனர். கமலுக்கு அதில் ஆட்சேபனை இல்லை.
மக்களவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து கோவையில் நடைபெறும் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு ஆகிய 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மண்டல நிர்வாகிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
அவர்களிடம் ஆலோசனை நடத்தி கமல் தனது முடிவை அறிவிப்பார் என மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவையில் போட்டி?
கோவை, தென்சென்னை அல்லது மதுரை ஆகிய 3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் கமல் போட்டியிட்டால் வெற்றி பெற்று விடலாம் என்பது கட்சி நிர்வாகிகள் எண்ணம்.
கோவை தெற்கு சட்டசபைத் தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிட்டு உள்ளதால், தொகுதி மக்களுக்கு நெருக்கமானவராக உள்ளார்.
இதனால் கோவை தொகுதியே கமல்ஹாசனின் ‘சாய்ஸ்’.
முடிவு, நாளை தெரியும்.
– பி.எம்.எம்.