விக்ரம் நடித்து கடைசியாக வெளியான திரைப்படம் ‘பொன்னியின் செல்வன்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெற்றி பெற்றன. வசூலையும் வாரிக் குவித்தன.
இப்போது பா.ரஞ்சித் டைரக்ஷனில் ‘தங்கலான்’ படத்தில் விக்ரம் நடித்து வருகிறார். கோலார் தங்கவயலை கதைக்களமாகக் கொண்டு இந்தப்படம் உருவாகிறது.
படப்பிடிப்பு முடிந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வரும் தங்கலான் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாக விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ படம் வெளியாக உள்ளது.
இந்தப் படம் கடந்த 6 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்தது. விக்ரம் நாயகனாக நடிக்க கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ கடந்த 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
நியூயார்க் உள்ளிட்ட இடங்களில் ஷுட்டிங் நடைபெற்றது. 2018 ஆம் ஆண்டே படத்தை ரிலீஸ் செய்ய கவுதம் திட்டமிட்டார்.
சினிமாவில் நினைப்பது எதுவும் நடப்பதில்லை. துருவ நட்சத்திரம் படமும் அதற்கு விதி விலக்கல்ல.
பணப்பிரச்சினை உள்ளிட்ட விவகாரங்களால் படம் முடங்கியது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கொஞ்ச நாட்கள் நடித்தார். பாடல் காட்சி ஒன்றிலும் அவர் ஆடினார்.
ஆனால், என்ன காரணத்தாலோ ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் இருந்து நீக்கப்பட்டார். திரில்லர் படமான துருவ நட்சத்திரத்தில் கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார்.
சிம்ரன், பார்த்திபன், திவ்யதர்ஷினி, அர்ஜுன் தாஸ், விநாயகன், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமும் உள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.
பல்வேறு தடைகள், சிக்கல்களை எதிர்கொண்ட துருவ நட்சத்திரம் நவம்பர் மாதம் 24 ஆம் தேதி வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் விக்ரம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். பொன்னியின் செல்வன் போன்று இந்தப் படமும் அமோக வெற்றி பெறும் என நம்புகிறார் விக்ரம். துருவ நட்சத்திரம் ரிலீஸ் காரணமாக தங்கலான் வெளியீடு தள்ளிப்போகிறது.
-பாப்பாங்குளம் பாரதி