தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கூட்டணிகள் அந்தந்த சந்தர்ப்ப சூழழ்நிலைகளுக்கு ஏற்ப மாறியிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத உற்சாகத்தை தற்போது அதிமுக – பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தபோது பார்க்கமுடிகிறது.
இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே பரஸ்பரம் காரசாரமாக விவாதிக்கிறார்கள். இரு இயக்கங்களின் தொண்டர்களும் பட்டாசு வெடித்துக் கொண்டாடுகிறார்கள்.
மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட விரிசலைப் போல இரு கட்சிகளுமே இந்த விரிசலை எதிர்கொண்டிருக்கின்றனர். இந்தச் சூழ்நிலை எப்படி உருவானது?
அதிமுகவின் தலைமைப் பொறுப்பில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இருந்தபோது அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை அவ்வப்போது விமர்சித்தே வந்திருக்கிறார்.
தனிப்பட்ட முறையில் அவர் பக்தியுணர்வை கொண்டிருந்தாலும் அதை பொதுவெளியில் கட்சியின் கொள்கையோடு இணைக்கவில்லை.
அண்ணா சொன்னபடியே ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்ற கொள்கைப்படி தான் அவருடைய அணுகுமுறை இருந்தது. சிலசமயம் தமிழ்நாட்டில் சாதி, சமய பூசல்கள் எழுந்தபோது கூட அவர், எந்த விதமான சார்புகள் அற்ற நிலையையே கடைப்பிடித்தார்.
ஜெயலலிதா தமிழ்நாடு முதல்வரான பிறகு ராமர்கோவில் கட்டுவதற்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது அப்போது சலசலப்பை ஏற்படுத்தியது.
1998-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக.
பாஜக அப்போது தமிழ்நாட்டில் பெற்ற தொகுதிகள் மூன்று. பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த நிலையிலும்கூட திடீரென்று 1999-ல் தான் அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றார் ஜெயலலிதா.
அதனாலேயே மிகக் குறுகிய காலத்திற்குள் வாஜ்பாய் தலைமையிலான ஆட்சி கவிழ வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டது.
நிலைமை இப்படியிருந்தாலும், 2004-ம் ஆண்டு மீண்டும் அதே பாஜகவுடன் கைகோர்த்தது அதிமுக. ஆனால் போட்டியிட்ட அனைத்து தொகுகளிலுமே அந்தக் கூட்டணி தோல்வியையே சந்தித்தது.
அதற்குபிறகு சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக மாநாட்டில் கலந்து கொண்ட ஜெயலலிதா, “இனி எந்தக் காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டேன்” என்று உறுதிபடத் தெரிவித்தார்.
அதை நிரூபிக்கும் விதத்தில் 2014-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணி பலமும் இல்லாமல் தனித்து போட்டியிட்டது அதிமுக. அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர் முன் வைத்த முழக்கம்தான் “மோடியா இந்த லேடியா“.
இந்த முழக்கத்தை முன் வைத்த நிலையில் 37 தொகுதிகளை அதிமுக கைப்பற்ற முடிந்தது. அதை ஒட்டியே 2016 சட்டமன்றத் தேர்தலிலும் அதிமுக யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே போட்டியிட்டு வெற்றி பெற்றது.
ஆனால், ஜெயலலிதா மறைந்தபிறகு அதன் நிரந்தரத் தலைவராக சொல்லப்பட்ட ஜெயலலிதாவின் அணுகுமுறையை அதற்கு பிறகு தலைமைப் பொறுப்பிற்கு வந்த தலைவர்கள் கடைபிடிக்கவில்லை என்பதுதான் விநோதம்.
2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்தது அதிமுக. ஆனால், அந்தத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட பாஜகவால் வெற்றிபெற முடியவில்லை.
2021-ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலிலும் அதே கூட்டணி தொடர்ந்தது. அதிமுக 68 தொகுதிகளைப் பெற்றது. பாஜக வெற்றி பெற்றது வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே.
தற்போதைய பாஜக தலைவரான அண்ணாமலை, தான் போட்டியிட்ட சொந்தத் தொகுதியிலேயே தோல்வியை சந்திக்க வேண்டியிருந்தது.
இதையடுத்து கடந்த ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக இரு கட்சிகளுமே கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட்டன.
தமிழக பாஜக தலைவராக தமிழிசை சௌந்திராஜனும் எல்.முருகனும் இருந்தபோது அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையிலான கூட்டணியில் பெரிய அளவில் விரிசல்கள் விழவில்லை.
ஆனால், தமிழக பாஜக தலைவராக இல.கணேசன் இருந்தபோதிருந்தே தமிழக பாஜக அடிக்கடி முன்வைத்த முழக்கம் “திராவிடம் இல்லாத தமிழகம்”.
தமிழக பாஜக முன்வைத்த அந்த முழக்கத்தை அவர்களே சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றபடி மறந்து திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்திருக்கிறார்கள் மிகக் குறைவான தொகுதிகளையும் பெற்றிருக்கிறார்கள்.
ஆனால், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையும் தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவியும் நியமிக்கப்பட்ட பிறகு அடிக்கடி திராவிட கருத்தியல் குறித்த விமர்சனங்கள் பலமாக முன்வைக்கப்பட்டன.
பெரியார் சிலைகள் மீதும் ஏன் எம்.ஜி.ஆர். சிலைகள் மீதும் கூட சில அவமதிக்கத்தக்க காரியங்கள் இதே தமிழகத்தில் நடந்தன.
தான் பதவியேற்றதிலிருந்து உபநியாசம் செய்பவரைப்போல சனாதனம் பற்றி அடிக்கடி பேசிக் கொண்டேயிருந்தார் ஆளுநரான ஆர்.என்.ரவி.
அது ஏதோ அரசியலை சாம்பிராணி போட்டதுபோன்று அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.
தமிழக ஆளுநரான ஆர்.என்.ரவி சனாதனத்திற்கு ஆதரவாக தொடர்ந்து ஆதரவு கொடுத்து வந்த நிலையில் எழாத எதிர்ப்புணர்வு தமிழ்நாடு அமைச்சரான உதயநிதி சனாதனத்திற்கு எதிராகப் பேசியபோது எழுந்தது.
உதயநிதியின் பேச்சு பாஜக மொழியில் வேறுவிதமான திரிப்புக்கு உள்ளாக்கப்பட்டு வடமாநிலங்கள் வரை பரவியது.
பிரதமர் மோடியும் அமித்ஷாவும் கூடச் சட்டென்று சனாதன உணர்வைப் பெற்று பேச்சில் தீவிரம் காட்டினார்கள். தனது சகாக்களை சனாதனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கச் சொல்லி கட்டளையிட்டார் பிரதமர் மோடி.
பிரதமரே கட்டளையிட்ட பிறகு அடுத்தடுத்த செயல்பாடுகளுக்கு குறைவே இல்லை. சில வடமாநில சாமியார்கள் விசேஷ சாமியாட்டமே ஆடினார்கள். உதயநிதியின் தலைக்கெல்லாம் சிறப்புக் கட்டணத்தை நிர்ணயித்தார்கள்.
மத்திய அமைச்சர் ஒருவரும் பிரதமரின் கட்டளைக்கு அடிபணிந்து கடுமையான வார்த்தைகளைப் பேசியது வடமாநிலங்கள் சர்ச்சைப் பொருளானது.
தமிழக அமைச்சரான உதயநிதி வடமாநில காவிச் சாமியார்களின் வாயிலெல்லாம் புகுந்து விதவிதமாக வெளியே வந்தார்.
வடமாநில ஊடகங்களில் உதயநிதி பேசுபொருளானார். காவிச் சட்டைக்காரார்கள் ஆக்ரோஷமாக தொலைக்காட்சி விவாதங்களில் சூடு பறக்கப் பேசினார்கள்.
இப்படியெல்லாம் காவிமயமான சுற்றுச் சூழல் இருக்கும்போது, முன்னாள் காவல்துறை அதிகாரியும் அடிக்கடி துப்பாக்கிப் பிடித்ததைப் பற்றி மறக்காமல் பேசுபவருமான தமிழக பாஜக அண்ணாமலை சும்மாயிருப்பாரா?
அவரும் முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தின் வார்த்தைகளில் சொன்னால், நடைவண்டிப் பயணத்தின்போது ஒவ்வொரு ஊரைக் கடக்கும்போதும் அந்தந்த இடங்களில் பேச்சில் மிளகாய்ப் பொடியைத் தூவினார். மீடியாக்களுக்கு செமத்தியான தீனி கிடைத்தது.
தொலைக்காட்சியைப் பார்ப்பவர்கள் ஒவ்வொருவதும் அலர்ஜியாகி ஒவ்வொருவரும் தும்மாத குறைதான்.
சிவகங்கையைக் கடந்துவரும்போது சட்டென்று கடந்தகாலம் மங்கலான பிளாஷ்பேக் நினைவுக்கு வந்து அண்ணாவைப் பற்றியும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றியும் சரியான ஆதாரத்தை முன்வைக்காமல் பேசியதும் தமிழக அரசியல் களம் சூடானது.
வழக்கமாக ஊடகங்களுக்கு முன்னால் பேசும்போது சுறுசுறுப்பு காட்டும் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார், அண்ணாமலையின் பேச்சுக்கு விசேஷமான சுறுசுறுப்பைக் காட்டி ஊடகங்களுக்கு முன்னால் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தினார்.
பாஜக – அதிமுக உறவு துண்டிக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமற்ற ஒரு குரலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பதிலுக்கு நடைவண்டிப் பயணத்தில் வந்துகொண்டிருந்த அண்ணாமலையும் பெருங்கொந்தளிப்பை கடுமையான ஆக்ரோஷத்துடன் வெளிப்படுத்தினார். ஜெயக்குமாரையும் சி.வி.சண்முகத்தையும் கடுமையாக கண்டித்தார்.
அதோடு இன்றைய சினிமா ஹீரோக்களைப் போல துப்பாக்கியையும் தனது கடந்தகால நேர்மையையும் வெளிப்படுத்தினார்.
தொலைக்காட்சிகளில் அப்போது பங்கேற்றவர்களும் தங்கள் பங்குக்கு சளைக்காமல் தொலைக்காட்சி அரங்கையே சூடாக்கினார்கள். இந்த தொடர் நிகழ்வுகளை பார்த்துக் கொண்டிருந்தவர்களுக்கும் காதுகள் சூடானதுதான் மிச்சம்.
இதற்கிடையில் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜுவும் தன் பங்குக்கு எதோ களையெடுப்பதைப் போல அறுத்துவிடுவோம் என்று பேசினார்.
மாறி மாறி அரசியல் களம் வெப்பமான நிலையிலும்கூட அதிமுகவின் முக்கிய புள்ளிகள் டெல்லிக்குச் சென்று பாஜக தலைவர் ஜெபி.நட்டாவையும் பியூஸ் கோயலையும் சந்தித்து தங்கள் குமுறலை பரிமாறிவிட்டு சென்னை திரும்பினார்கள்.
எடப்பாடியும் டெல்லிக்குப் போய்வந்தும் கூட தமிழக பாஜக தலைவரான அண்ணாமலையின் பேச்சின் தொனி சற்றும் குறையவில்லை.
பெரியாரைப் பற்றியும் அதிமுக பற்றியும் தொடர்ந்து விமர்சனம் செய்துவந்த நிலையில் அடுத்தவர இருக்கிற சட்டமன்றத் தேர்தலுக்கு முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழசனிசாமியை ஏற்க முடியாது என்பதையும் ஆருடம் குறித்த மாதிரி தெளிவுபடுத்தியவுடன் அதிமுகவினருக்கு கொஞ்சம் பார்வை தெளிந்திருக்கிறது.
தொடர்ந்து பெரியார், அண்ணா, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களை பற்றி கடுமையாக விமர்சித்துவரும் அண்ணாமலையை மாற்றக் கோரி என்னென்ன எச்சரிக்கைகள் விடுத்தும் அதற்கு பாஜகவின் அகில இந்திய தலைமை சற்றும் செவிசாய்க்காதது குறித்த வருத்தத்தை, அண்மையில் சென்னையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சாவகாசமாக அலசி ஆராய்ந்திருக்கிறார்கள் அதிமுக தலைவர்கள்.
அதன்பிறகே அதிமுக பாஜகவுக்கு இடையிலான கூட்டணி முறிந்தது என்பதை ஒட்டுமொத்தமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இந்த அறிவிப்பைத்தான் அதிமுக பாஜக என்கின்ற இரு இயக்கங்களின் தொண்டர்களுமே பட்டாசு வெடித்துக் கொண்டாடி இருக்கிறார்கள்.
இரு இயக்கங்களும் ஒருவேளை தனித்துப் போட்டியிட்டால் யாருக்கு லாபம் என்பது இந்த இரு இயக்கங்களுக்குமே தெரியாத ஒன்றல்ல.
2011-ல் 2.2 சதவீத வாக்குகளையும் 2014-ல் 5.5 சதவீத வாக்குகளையும் 2016-ல் 2.8 சதவீத வாக்குகளையும் பெற்றிருக்கிற பாஜகவுக்கு தமிழ்நாட்டில் இருக்கிற சராசரியான வாக்கு வங்கி 3.5 சதவீதம்.
அதேசமயத்தில் அதிமுகவுக்கு இருக்கிற வாக்குவங்கி 38.4 சதவீதம். இந்த நிலையில் மிகக் குறைவான வாக்கு வங்கி உள்ள பாஜக எப்படி தனித்து நின்று அல்லது அதிமுக தவிர்த்த மற்றக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து பெரும் வெற்றியைப் பெற முடியும்.
தங்களுடைய இந்த முடிவால் தங்களுக்கு நட்டம் என்பதை உணர்ந்திருப்பவர்கள் கண்டிப்பாக இந்தப் பிரிவினால் ஏற்படக்கூடிய அதிர்வு திமுகவையே பலப்படுத்தும் என்பது அவர்களுக்கு தெரியாக ஒன்றல்ல.
ஆனாலும் தேர்தலுக்கு இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. போதுமான கால இடைவெளி இருக்கிறது.
அதற்குள் தமிழக அரசியலை ஒன்றிய அரசியலில் இருக்கிற சிலபேர் பொம்மாலட்டத்தைப் போல ஆட்டிவைக்கிற நிலையில் தமிழக அரசியலில் எதுவும் நிரந்தரமல்ல.
எந்த நிலையிலும் யாரும் நேற்றை மறந்து இன்றைய நிலைக்காக எந்த முடிவையும் எடுப்பதற்கான வாய்ப்புகள் கூடுதலாகவே இருக்கின்றன.
அதனால் தேர்தல் அறிவிக்கிற வரை எந்த இயக்கத் தொண்டர்களும் அநாவசியமாக குழம்பிக்கொள்ள வேண்டியதில்லை.
அதேசமயம் மேலும் குழம்புவதற்கான சந்தர்ப்பங்கள் தொடர்ந்து இருந்து கொண்டிருக்கின்றன என்பது எதார்த்தம்.
– யூகி