இந்தப் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலில் ‘தமிழ் கலை மாநாடு’ நடத்தியபோது, அதில் பேரறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம், உடுமலை நாராயண கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நால்வரும் தனித்தனியே திறமை படைத்தவர்கள், துறை சார்ந்த வல்லவர்கள் என்றாலும் இந்த நால்வருக்கும் உள்ள ஒற்றுமை தமிழ்ப்பற்று. அவர்களைப் பற்றித் தனித்தனியாகப் பார்ப்போம்.
1948 ஆம் ஆண்டு ‘நல்லதம்பி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த்திரைக்கு அறிமுகமானார் பேரறிஞர் அண்ணா.
இதேபோல் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையின் மலைக்கள்ளன் நாவல் தான் எம்.ஜி.ஆர் நடித்து மலைக்கள்ளன் என்ற பெயரிலேயே திரைப்படமாக வந்தது. “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்று முழங்கியவர்.
இதேபோல் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் பல பாடல்கள், ‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன.
உடுமலை நாராயணகவியை கிராமபோன் கம்பெனிக்கு பாட்டெழுதித் தர வருமாறு இயக்குநர் ஏ.நாராயணன் சென்னைக்கு அழைத்தார். அப்படியே திரைப்படப் பாடல் உலகிலும் கவிராயர் நுழைந்தார்.
முதன்முதலாக கவிதை எழுதிய திரைப்படம் “சந்திர மோகனா அல்லது சமூகத் தொண்டு” ஆகும்.
“கவிராயர்” எனத் திரையுலகத்தினரால் அழைக்கப்பட்ட இவரிடம் பாடல்களைப்பெற அந்நாளில் திரைப்படத் தயாரிப்பாளர்கள் நடையாய் நடந்தார்கள்.
அந்நாளில் புகழ்பெற்ற கவிஞர் பாபநாசம் சிவனைவிட அதிகமாகப் பாடல்களை எழுதியவர் நாராயண கவியாவார்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன் போன்றோர் இவருக்குப் பின்னர் வந்தவர்கள்.
அன்றைக்கு இவரால் எழுதப்பட்ட பாடல்கள் கருத்துக் கருவூலங்களாக இருந்தன. புதிய உத்திகளைக் கையாண்ட நாராயணகவி, உழைப்பாளர்களைப் பற்றியும் ஏராளமான பாடல்களை எழுதியுள்ளார்.
தமிழ்த் திரைப்படத்தில் அறிவைப் புகுத்தி மக்களைப் பண்பட வைத்த கவிஞர், நல்ல செய்திகளை மட்டுமே நாட்டுக்குச் சொல்லி உலகை உயர்த்தப் பாடுபட்டார் ‘பகுத்தறிவு கவிஞர் உடுமலை நாராயணகவி.
இப்படி தமிழையும், தமிழரையும் போற்றியதோடு, தமிழர்கள் தன்மானத்தோடும், கம்பீரத்தோடும் இருக்க வேண்டும் என முழங்கியவரின் நினைவைப் போற்றுவோம்.