நினைவில் நிற்கும் வரிகள்:
***
வசனம்:
ஊருக்கு நீ உழைத்தால்
உன்னருகே அவன் இருப்பான்
உண்மையிலும் அன்பினிலும்
ஒன்றாய்க் கலந்திருப்பான்
பசித்தவர்க்கு சோறிடுவோர்
பக்கத்தில் அவன் இருப்பான்
கருணையுள்ள நெஞ்சினிலே
தினமும் குடியிருப்பான்.
பாடல்:
ஆதிக் கடவுள் ஒன்றேதான்
அதைக் காண முடியாது
ஆண்பெண் ஜாதி இரண்டுதான்
இதில் பேதம் கிடையாது
உயர்வு தாழ்வு என்பதெல்லாம்
உள்ளத்தால் வரும் மாற்றம் தான்
(ஆதிக் கடவுள்…)
உள்ளத்தில் உள்ளவனை
ஒளிவிளக்காய் நிற்பவனை
ஊரெங்கும் தேடினாலும்
ஒரு நாளும் காண்பதில்லை
கண்டவரும் சொன்னதில்லை
சொன்னவரும் கண்டதில்லை
காற்றைப் போல் பூமியிலே
கலந்திருப்பான் ஆண்டவனே
(ஆதிக் கடவுள்…)
மதம் என்ற சொல்லுக்கு
வெறி என்றோர் பொருளும் உண்டு
மனிதராய் பிறந்தவர்கள்
மதத்தால் பிரிந்து விட்டார்
மதத்தால் பிரிந்தவர்கள்
அன்பினால் ஒன்றுபட்டு
ஒன்றே குலமாக
ஒற்றுமையாய் வாழ்ந்திருப்போம்!
(ஆதிக் கடவுள்…)
– 1960-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘ராஜா தேசிங்கு’ திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயணகவி.