நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

தாய் தலையங்கம்:

மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள்.

அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது என்ற குற்றச்சாட்டுக்கு எதிராகத்தான் நீட் தேர்வை அறிமுகப்படுத்துகிறோம் என்றும் சொல்லப்பட்டது.

நீட் தேர்வுக்கு அப்போதிருந்தே எதிர்ப்பு தெரிவித்த மாநிலமாக தமிழகம் இருந்திருக்கிறது. தமிழகத்தில் அனிதா உள்ளிட்ட பல்வேறு மாணவ – மாணவிகள் தங்கள் உயிரைக் கொடுத்து நீட் தேர்வுக்கான எதிர்ப்பை இங்கு பதிவு செய்திருக்கிறார்கள்.

இந்தவிதமான உயிரிழப்புகள் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் நடந்திருக்கின்றன. சமீபத்தில் கூட குறிப்பிட்ட ஒரு மாநிலத்தில் அதிகப்படியான எண்ணிக்கையில் நீட் தேர்வுக்காக மாணவ மாணவிகள் உயிரிழந்திருப்பது தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில்தான் நீட் தேர்வுக்கான மாணவர் சேர்க்கையில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக நிர்ணயிக்கப்பட்டு அதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

எந்த அரசு தகுதித் தேர்வு என்பதை முன்னிறுத்தி தேர்வு முறையை உருவாக்கியதோ, அதே அரசுதான் தற்போது கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியம் என்பதை நிர்ணயித்து இப்போது மாணவர் சேர்க்கை என்பதையே இலகுவாக்கி இருக்கிறது.

மத்திய அரசின் இந்த நடவடிக்கை தற்போது பலத்த விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது. பல கட்சிகள் தங்களுடைய அதிருப்தியை தெரிவித்திருக்கின்றன.

குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை பாஜக அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

இதனால் நீட் தேர்வைக் கொண்டு உயிர்களை பறித்ததற்காகவே பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றியாக வேண்டும் என்று கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து இருக்கிறார்.

இந்தியாவில் உள்ள இதரக் கட்சிகளின் தலைவர்களும் இதே கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார்கள்.

மத்திய அரசு எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வை அறிமுகப்படுத்தி கடும் எதிர்ப்புக்கிடையில் அப்போது அமலுக்குக் கொண்டு வந்தது? ஏன் அதனால் இத்தனை உயிர்கள் பறிபோயின? தற்போது அதே சேர்க்கையை இவ்வளவு எளிதாக்கியது எதனால்? என்கின்ற கேள்விகள் எழுகின்றன.

இதற்கு சொல்லப்படும் ஒரே பதில் போதுமான அளவுக்கு மருத்துவச் சேர்க்கையில் மாணவர்கள் சேரவில்லை என்பதும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக பணம் கொடுத்து சேரும் மாணவ மாணவிகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்பதாலேயே தற்போது நீட் தேர்வில் இந்த மாற்றத்தை மத்திய அரசு செய்திருக்கிறது என்கின்ற விமர்சனம் தற்போது பரவலாக இருக்கின்றது.

இந்திய அளவில் அரசு தரப்பிலான மருத்துவக் கல்லூரிகள் மிகக்குறைவு. தனியார் மருத்துவக் கல்லூரிகள் தான் அதிகம்.

எப்போதுமே பாஜக அரசு, அரசு நிறுவனங்களை விட தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதையே முதன்மையான கடமையாக தற்போது ஆற்றிக் கொண்டிருக்கிறது.

தனியார் நிறுவனங்கள் தான் தற்போதைய ஆட்சியில் முன்னிலைப்படுத்தப்படுகின்றன.

அதேபோக்குதான் நீட் தேர்விலும் பிரதிபலித்திருக்கிறதா? ஏன் இத்தனை குளறுபடிகள்? எதற்காக இத்தனை உயிர்கள் பலியாக வேண்டும்? இத்தனை உயிர்களை விலையாக கொடுத்து தான் நீட் தேர்வில் இத்தகைய முடிவிற்கு ஒன்றிய அரசு வர வேண்டுமா? இப்படி பல கேள்விகள் எழுகின்றன.

இதில் இன்னொரு கேள்வியும் எழுகின்றது. தற்போதைய நீட் தேர்வு குறித்த ஒன்றிய அரசின் முடிவுக்கும் இனிமேல் நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்கும் தொடர்பு இருக்கிறதா? என்கின்ற கேள்வியையும் எழுப்ப வேண்டி இருக்கிறது. இது இப்போதைக்கு ஒரு அத்தியாவசிய கேள்வி.

Comments (0)
Add Comment