பிரபல பின்னணிப் பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரல் மிக மெல்லிய நூலிழைபோல் மென்மையானது.
ஆனால் ஆங்காங்கே சிறிது அசைவு, பிருகா, குழைவு, மென்மை, ஒரு லேசான குலுக்கல் இவை கலந்த அவரது பாணி நம்மை கிறங்க வைக்கும்.
ஜெமினி கணேசன் தவிர பாலாஜி, முத்துராமன் போன்ற பலருக்கு பின்னணி பாடியிருக்கிறார் பி.பி.எஸ்.
சத்யனுக்கு குரல் கொடுத்த “அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா” என்ற பாடல் மிக அருமையாக இருக்கும்.
எம்ஜிஆர் ‘திருடாதே’ என்ற படத்தில் சரோஜாதேவியின் காலை எடுத்து தன் மடியில் வைத்துக் கொண்டு வாயசைக்கும் “என்னருகே நீ இருந்தால்” என்னும் பாடல் இவர் பாடியதுதான்.
‘பாதை தெரியுது பார்’ என்ற படத்தில் அவர் பாடியுள்ள “தென்னங்கீற்று ஊஞ்சலிலே, தென்றலில் நீந்திடும் சோலையிலே, சிட்டுக் குருவி பாடுது தன் பெட்டைத் துணையைத் தேடுது” என்ற பாட்டு செம ஸ்லோ டெம்போவில் நம்மை வருடிக் கொண்டே கிறங்க வைக்கும்.
“சூப்பர் சிங்கர்” போட்டிகளில் இன்றும் இவரது எவர்கிரீன் பாடல்கள் பல ஒலித்துக் கொண்டிருப்பதும், அவருடைய பாடல்கள் அடங்கிய சிடிக்கள் நிறைய விற்றுக் கொண்டிருப்பதும் அவர் பெருமையை தொடர்ந்து பறைசாற்றும்!
கண்ணதாசனின் செறிவுமிக்க தத்துவப் பாடல்கள் பலவற்றை பாடியவர் என்ற பெருமை பி.பி.ஸ்ரீனிவாஸ் அவர்களுக்கு உண்டு.
“ஆத்தோரம் மணலெடுத்து அழகழகாய் வீடு கட்டி… தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருந்தோம்” – அப்படியே நம்மை சோகத்தில் உருக வைக்கும். இதுபோல் ஏராளமான பாடல்கள் உள்ளன.
“பிரதிவாதி பயங்கர ஸ்ரீனிவாஸ்” என்ற பட்டப்பெயர் யரோ அவருக்கு சூட்டியிருந்தாலும் அவர் மிகவும் மென்மையானவர். பழகுவதற்கு எளிமையானவர். அவருடைய குல்லாவைப் பற்றிக் கேட்டபோது “நான் எனக்கு மட்டும்தான் குல்லா போட்டுக் கொள்வேன். பிறருக்கு போட மாட்டேன்” என்றார்.
நிறைய நோட்டுப் புத்தகங்களை வைத்துக் கொண்டு ஏதாவது எழுதிய வண்ணம் இருப்பார். கலர் கலராக பலவித பேனாக்களை பாகெட்டில் சொறுகி வைத்திருப்பார்.
தி.நகர் பஸ் நிலையத்திலிருந்து நந்தனம் செல்லும் போது வழியில் வெஸ்ட் சி.ஐ.டி நகரில் உள்ள அவருடைய வீட்டு வாசலில் இருந்த பெயர்ப் பலகை அறிவித்த அவருடைய கல்வி “B.Com, Hindi Paravin” (or, is it Visharad?) என்று இருக்கும்.
ஒரு பன்முக சாதனையாளராக விளங்கினார் பி.பி.எஸ் அவர்கள். மேளகர்த்தா ரகங்களையும், ஜன்ய ராகங்களையும் எளிதில் புரிந்துகொள்ள ஏதுவாக “வைர ஊசி” என்னும் ஒரு “Info-graphics” ஒன்றை உருவாக்கினார்.
“எதிர் நீச்சல்” படத்தில் நாகேஷுக்கு அவருடைய குரல் ஒத்து வரவில்லை (“தாமரை கன்னங்கள்”). தொடக்கத்தில் அவர் கொடுக்கும் ஹம்மிங் கொஞ்சம் நாகேஷின் முகத்தோற்றத்திற்கு பொருத்தமில்லாமல் இருக்கும்.
தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் மற்றும் ஹிந்தியிலும் ஆயிரக்கணக்கில் பாடியவர்; அதுவும் கன்னட எம்.ஜி.ஆர். ராஜ்குமாருக்கு முழுதுமே இவர்தான் பாடியிருக்கிறர். கஜல்கள் பல இயற்றியவர்.
காற்றில் மிதந்து வருகின்றன இவ்வரிகள் அவருடைய வெல்வெட் போன்ற குரலில்:
“எங்கே வாழ்கை தொடங்கும்,
அது எங்கே எவ்விதம் முடியும்?
இது தான் பாதை, இது தான் பயணம்
என்பது யாருக்கும் தெரியாது!”
– நன்றி: முகநூல் பதிவு