மேகங்களே தரும் ராகங்களே – எந்நாளும் வாழ்க!

காட்டையே தீக்‍கிரையாக்‍கி விடும் ஆற்றல் பெற்ற ஒரு தீக்‍குச்சி, ஒரு சின்ன தீப்பெட்டிக்‍குள் அடக்‍கமாய் அடைக்‍கலமாகி கிடப்பது போல, தமிழ் திரை இசையில் ஒரு சாதனை சாம்ராஜ்ஜியத்தை உருவாக்‍கிவிட்டு, அமைதியாய், அடக்‍கத்தோடு உலா வந்த இசை மேதை இவர்.

பல திரை இசை வல்லரசுகளுடன் இணைந்து பணியாற்றிய அந்த மேதை மனது மறக்‍காத பல இனிய பாடல்களை தமிழ் திரையுலகிற்கு வழங்கியிருக்‍கிறார். அந்த மேதைதான் ஜி.கே. வெங்கடேஷ் (Gurusala Krishnadas Venkatesh).

இந்த இசை மேதை உருவாக்‍கிவிட்டுப் போன சாதனை சாம்ராஜ்ஜியத்தின் பெயர்தான் இசைஞானி இளையராஜா.

ஐதராபாத்தில் தெலுங்கு குடும்பம் ஒன்றில் பிறந்த ஜி.கே. வெங்கடேஷ், இளம் வயதிலேயே இசையை தம் வாழ்வில் ஒரு அங்கமாக ஏந்திக்‍ கொண்டார்.

இவரது இசைத் திறமையை பொப்பிலி ராஜா பாராட்டியுள்ளார்.

வீணை இசையை விரும்பிய வெங்கடேஷ், அதை தனது மூத்த சகோதரர் ஜி.கே.எஸ். பதியிடம் கற்றுக்‍ கொண்டார்.

இவர் மீட்டிய வீணையில் நரம்புகள், இசை ரசனையால் முறுக்‍கேறிய இவரது உடல் நரம்புகளால் படைக்‍கப்பட்டிருக்‍க வேண்டும்.

அதனால்தான் அதிலிருந்து அப்படியொரு ராக ஆலாபனை, ரசனையோடு புறப்பட்டது.

புகழ்பெற்ற திரை இசை மேதைகள் எஸ்.வி. வெங்கட்ராமன், எஸ்.எம். சுப்பையா நாயுடு, சி.ஆர். சுப்பராமன் ஆகியோருக்‍கு வெங்கடேஷ் வீணை வாசித்துள்ளார்.

திரைத்துறைக்‍கு வருவதற்கு முன் பெங்களூரு வானொலியில் பணியாற்றினார்.

சுப்பையா நாயுடுவிடம், மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன், ஜி.கே. வெங்கடேஷ் ஆகியோர் உதவியாளர்களாக இருந்தனர்.

ஜுபிட்டர் பிக்சர்சில் பணியாற்றியபோது எம்.எஸ்.வி.யும் வெங்கடேசும் ஒரே அறையில் தங்கியதால், இருவரும் தொழில்முறையிலும் சரி, தனிப்பட்ட நட்பிலும் மிகவும் நெருக்‍கமாகினர்.

கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், விஸ்வநாதன் – ராமமூர்த்திக்‍கு ‘பணம்’ என்ற படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தபோது, அந்தக்‍ குழுவில் ஜி.கே. வெங்கடேசும் இருந்து சிறப்பான முறையில் பாடல்கள் வெற்றி அடைய உதவினார்.

கன்னட மற்றும் தெலுங்கு திரையுலகிலும் பல படங்களுக்‍கு ஜி.கே. வெங்கடேஸ் இசையமைத்தார்.

1964ம் ஆண்டு வெளியான ‘மகளே உன் சமத்து’ என்ற படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகில் மறு பிரவேசம் செய்த வெங்கடேஷ், நானும் மனிதன்தான், சபதம், பொண்ணுக்‍கு தங்க மனசு, காஷ்மீர் காதலி உள்ளிட்ட பல படங்களுக்‍கு இசையமைத்தார்.

இசைஞானி என்ற இசை சாம்ராஜ்ஜியத்தை வளர்த்தெடுத்தவர், வார்த்தெடுத்தவர் ஜி.கே. வெங்கடேஷ்.

200 படங்களுக்கு மேல் இளையராஜா, ஜி.கே. வெங்கடேசிடம் உதவியாளராக இருந்தார். எல். வைத்தியநாதன் என்ற இசை மேதையையும் உருவாக்‍கியவர் ஜி.கே. வெங்கடேஷ்.

சில கன்னட படங்களை தயாரித்துள்ள திரு. ஜி.கே. வெங்கடேஷ், மெல்ல திறந்தது கதவு என்ற திரைப்படத்தில் முக்‍கிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்தும் உள்ளார்.

இந்தப் படத்தில் அவருக்‍கு பின்னணி குரல் கொடுத்தது, பழம்பெரும் நடிகர் கோபால கிருஷ்ணன்.

இசையமைப்பாளர்களில் நிறைய வாத்திய கருவிகளை வாசிக்‍கும் திறமை பெற்றவர் ஜி.கே. வெங்கடேஷ்.

திரை இசையில் தொழில்நுட்பத்தை புகுத்திய ஜி.கே. வெங்கடேஷ், ரீ-ரெக்‍கார்டிங்கில் பல புதுமைகளை புகுத்தியவர்.

அடக்‍கத்துடன் காணப்பட்டாலும், பல இசைக்‍ கலைஞர்களுக்‍கு இவர் ஒரு இசை அகராதி. திரை இசை நுணுக்‍கங்களை பல கலைஞர்களுக்‍கு கற்றுத் தந்த இசை அதிகாரி.

(பழம் பெரும் திரைப்பட இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளர் ஜி.கே. வெங்கடேஷ் பிறந்த நாள் (செப்டம்பர் 21, 1927) இன்று)

✍️ லாரன்ஸ் விஜயன்.

Comments (0)
Add Comment