நாடாண்ட தலைவர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில், பொதுமக்கள் பலன்பெறும் வகையில் ஏராளமான காரியங்களை செய்திருப்பார்கள்.
ஒவ்வொரு தலைவரும், தங்கள் வாழ்நாள் கனவாக ஒரு ‘மாஸ்டர் பீஸ்’ திட்டத்தை செயல்படுத்தி இருப்பார்கள்.
தமிழக முதலமைச்சர்கள் சிலரின் பேர் சொல்லும் திட்டங்களை இங்கே பார்க்கலாம்.
காமராஜர்
காமராஜர், படிக்காத மேதை என தமிழர்களால் போற்றப்பட்டவர். அவர் அதிகம் படிக்கவில்லை. இளமையில் அவரது வீட்டுச்சூழல் அப்படி இருந்தது.
சிறு வயதில் தன்னால் பெற முடியாத கல்வியை, தனது சந்ததியினராவது பெறவேண்டும் என சபதம் செய்து அவர் முதலைமைச்சராக இருந்த காலத்தில் கட்டாய ஆரம்பக் கல்வித் திட்டத்தைத் தொடங்கினார்.
ஏராளமான பள்ளிகள் புதிதாய் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர் சேர்க்கை பெருகவில்லை. விசாரித்தபோது தான் காரணம் தெரிந்தது.
ஒரு வேளை உணவுக்குக் கூட வழி இல்லாத ஏழைகள், தங்கள் குழந்தையை எப்படிப் பள்ளிக்கு அனுப்புவார்கள்?
பள்ளியிலேயே ஒரு வேளை உணவு கொடுத்தால், குழந்தைகளைப் பெற்றோர்கள் பள்ளிக்கு அனுப்பி வைப்பார்கள் என காமராஜர் உணர்ந்தார். இதனை உடனே செய்தார். இலவச மதிய உணவுத் திட்டத்தை 1956 ஆம் ஆண்டு செயல்படுத்தினார்.
லட்சக்கணக்கான குழந்தைகளை, அந்தத் திட்டம், பள்ளிகளுக்கு அழைத்து வந்தது.
மதிய உணவுத் திட்டத்திற்கான பால் பவுடர், சோள மாவு, தாவர எண்ணை ஆகிய பொருட்களை அமெரிக்காவைச் சேர்ந்த ‘கேர்’ நிறுவனம் நன்கொடையாக அளித்தது.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தில் 7 சதவீதம் பேரே கல்வி அறிவு பெற்றிருந்தார்கள்.
காமராஜர் ஆட்சியில் இது, 37 சதவீதமாக உயர்ந்தது. இலவச மதிய உணவுத் திட்டம் தான், இந்த சாதனையை எட்டுவதற்கு ஏணியாக அமைந்தது.
எம்.ஜி.ஆர்.
முதலமைச்சராக இருந்தபோது எம்.ஜி.ஆர். செயல்படுத்திய திட்டங்களில் முதன்மையானது, சத்துணவுத் திட்டம்.
‘இளமையில் வறுமையின் கொடுமையை’ அனுபவித்தவர் அவர். இதனால் சின்ன குழந்தைகளுக்குச் சத்துள்ள உணவு அளிக்க வேண்டும் என்ற வேட்கையில் இதனை நிறைவேற்றினார்.
காமராஜரின் மதிய உணவுத் திட்டத்தில் இருந்து, எம்.ஜி.ஆர். திட்டம் வேறுபட்டது. திட்டம் செயல்பட ஆரம்பித்த 1982 ஆம் ஆண்டு, இதற்காக ஒரு துறையே தனியாக உருவாக்கப்பட்டது. பிரபலங்கள், சத்துணவுத் திட்ட உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
காமராஜர் ஆட்சிக் காலத்தில் பள்ளி நாட்களில் மட்டுமே மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கப்பட்டது.
எம்.ஜி.ஆர். ஆட்சியில், பள்ளி நாட்களை தவிர மற்ற நாட்களிலும் – அதாவது விடுமுறை நாட்களிலும் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க உத்தரவிட்டார்.
கருணாநிதி ஆட்சிக் காலத்தில், இந்தத் திட்டத்தில் முட்டை சேர்த்துக் கொள்ளப்பட்டது.
ஜெயலலிதா ஆட்சியில், கலவை சாதமாகவும், முட்டையில் வெவ்வேறு வகை உணவாகவும் இது மாற்றம் செய்யப்பட்டது.
தற்போது ‘புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம்’ என்ற பெயரில் இந்தத் திட்டம் தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளிலும், அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் பின்பற்றப்பட்டு வருகிறது.
ஜெயலலிதா
எம்.ஜி.ஆருக்கு பின் அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதா, தனது ஆட்சிக் காலத்தில் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தினாலும், என்றென்றும் அவரது பெயர் சொல்லும் திட்டமாக இருப்பது அம்மா உணவகம்.
விலைவாசி உயர்வின் தாக்கத்தில் இருந்து ஏழை, எளியோரை மீட்கும் வகையில் அம்மா உணவகம் ஆரம்பித்தார் ஜெயலலிதா.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19-ம் தேதி 15 உணவகங்களுடன் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
பின்னர் இந்தத் திட்டம் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் விரிவுபடுத்தப்பட்டது.
அதன் பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டன.
இந்த உணவகங்களில் இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படுகின்றன.
மேலும் கலவை சாதங்களும் மாலையில் சப்பாத்தியும் மலிவு விலையில் கிடைக்கின்றன.
ஸ்டாலின்:
இப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள ‘மகளிர் உரிமைத் தொகை’ திட்டம் அவரது பெயரை காலாகாலத்துக்கும் பேச வைக்கும் திட்டமாக இருக்கும் எனலாம்.
இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஒரு கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் தோறும் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். ஆண்டுக்கு 12 ஆயிரம் ரூபாய்.
‘பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக இருந்து, வறுமையை ஒழித்து, வாழ்க்கை தரத்தை உயர்த்தி, சமூகத்தில் பெண்கள் சுயமரியாதையோடு வாழ்வதற்கு இந்த உரிமைத் தொகை உறுதுணையாக இருக்கும்’ என ஸ்டாலின் விழா மேடையில், அந்தத் திட்டத்தின் மைய நோக்கத்தை ரத்தின சுருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
‘பெண்களுக்காக இந்த அரசு எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதற்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் அமைந்திருக்கிறது, மகளிர் உரிமைத் தொகை திட்டம்’என்றும் அவர் பெருமிதம் அடைந்தார்.
உண்மைதான்.
ஸ்டாலினுகு, இந்தத் திட்டம் மகுடம் சூட்டி அழகு பார்க்கிறது.
– பி.எம்.எம்.