ரசிகர்களை மிரள வைத்து ரசித்த நம்பியார்!

எம்.என். நம்பியார் குறித்து சில சுவாரஸ்ய தகவல்கள்:

எம்.என்.நம்பியார் மிமிக்ரி செய்வதிலும் வல்லவர். எம்.ஜி.ஆர், சிவாஜி, பி.எஸ்.வீரப்பா போல் மட்டுமல்ல; சரோஜாதேவி போலவே இமிடேட் செய்து நடித்துக் காட்டி அந்த இடத்தையே கலகலப்பாக்கிவிடுவார்.

ஒருமுறை பத்திரிகை புகைப்படக்காரர் உங்கள் வாளுடன் ஒரு போஸ் தாருங்கள் என்றபோது, “அது வீட்டில் இருந்தால் தலையில் கர்வம் ஏறிவிடலாம். ஆகவே, பயிற்சி வகுப்புக்குப் போனால் வாளை அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவேன்” என்றார்.

ஆனால், பிஸியாக இருந்த காலத்தில் தற்காப்புக்காகக் குறுவாள் ஒன்றைத் தன்னுடன் வைத்திருக்க வேண்டிய கட்டாயம் நம்பியாருக்கு ஏற்பட்டது.

தன்னிடம் யார் ஆசீர்வாதம் வாங்க வந்தாலும், பட்டு வேட்டி, அங்கவஸ்திரம், பட்டுப் புடவை அணிந்து தம்பதி சமேதரராக மலர்தூவி ஆசீர்வதிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளனர் நம்பியார் தம்பதியினர்.

சென்னையில் இடப்புறம் கலைஞர் மு.கருணாநிதியின் வீடும் வலப்புறம் ஜெ.ஜெயலலிதாவின் வீடும் இருக்க கோபாலபுரம் ஆறாவது தெருவில் வசித்துவந்த நம்பியாரின் வீடு இருந்தது.

இறப்பதற்குக் கடைசி ஐந்து ஆண்டுகளுக்கு முன் பிள்ளைகளின் ஆலோசனையைக் கேட்டு உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டார் நம்பியார்

காலை 4 மணிக்கு எழுந்து, 4.30-க்கு மெரினாவில் நடைப்பயிற்சியும் 5.15 மணிக்கு அங்கேயே ஆயில் மசாஜும் செய்துகொண்டு, மெரினாவில் உள்ள மாநகராட்சி நீச்சல்குளத்தில் குளித்துவிட்டு 6 மணிக்கு வீட்டுக்கு வந்துவிடுவார்.

மெரினாவுக்குச் செல்லாத நாட்களில் சிவாஜி, ஜெமினி கணேசன் ஆகிய இருவரும் காலை 6 மணிக்கு நம்பியாரின் வீட்டுக்கு வந்துவிட, மூவரும் டென்னீஸ் விளையாடுவது வழக்கம்.

சிவாஜியும் ஜெமினியும் வருவதற்கு முன்னர் ஒரு மணிநேரம் யோகா செய்துவிடும் நம்பியார், வெளியூர் படப்பிடிப்பில் இருந்தால் 100 சூரிய நமஸ்காரங்களைச் செய்துவிட்டு ஒரு லிட்டர் தண்ணீர் குடிப்பார்.

உடற்பயிற்சிக்காகவே பேட்மிண்டன் கோர்ட், ஜிம், மணல் கொட்டிய மல்யுத்தக் களம் ஆகியவற்றை வீட்டில் உருவாக்கி வைத்திருந்தார்.

திரையில் பிரபலமாகி வந்த நாட்களில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் இணைந்தே சிலம்பம் கற்றுக்கொண்டனர்.

சென்னை, கொத்தவால் சாவடி மூணுகால் சந்து என்ற தெருவில் வசித்துவந்த கந்தசாமி அப்பா என்பவர்தான் இருவரது சிலம்ப குரு.

எல்லா வெளியூர் படப்பிடிப்புகளுக்கும் மனைவியை கூடவே அழைத்துச் சென்று, அவர் சமைத்துத் தருவதை மட்டுமே சாப்பிட்டுப் பழக்கப்பட்டவர்.

19 வயதில் ராணுவத்தில் சேரும் வாய்ப்பு நம்பியாருக்கு வந்தபோது அசைவம் உண்ண வேண்டியிருக்கும் என்பதற்காகவே அதை மறுத்தார்.

கறுப்பு வெள்ளை படக் காலத்தில் படப்பிடிப்பில் ரசிகர்கள் யாராவது தன் அருகில் வந்தால் கண்களை நெரித்து வில்லன் பார்வை பார்த்து அவர்களைத் தெறித்து ஓடச் செய்துவிட்டு குழந்தைபோல விழுந்து விழுந்து சிரிப்பார்.

நிஜத்திலும் ரசிகர்களை இப்படி மிரட்ட வேண்டுமா என்று எம்.ஜி.ஆர். ஒருமுறை கேட்க, “அவர்கள் இந்த நம்பியாரைத்தான் பார்க்க வாராங்க, அது அப்படியே இருக்கட்டுமே” என்றார்.

– நன்றி: முகநூல் பதிவு

Comments (0)
Add Comment