பெருவாரியான மக்களை வெப்சீரிஸ் வசீகரித்துவிட்டதா? தெரியவில்லை. ஆனால், தீவிர சினிமா ரசிகர்கள் பலரை அந்த வடிவம் அடிமை ஆக்கியிருக்கிறது.
அதுவே, தமிழ் சினிமா இயக்குனர்கள் பலரை வெப்சீரிஸ் உருவாக்கத்தில் இறங்க வைத்திருக்கிறது. அதிலொன்றாக அமைந்திருக்கிறது ‘கிடாரி’ மற்றும் ‘குயின்’ சீரிஸ் தந்த பிரசாத் முருகேசனின் ‘மத்தகம்’. இது டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது.
தேடல் வேட்டை!
சங்கு கணேசன் (மூணாறு ரமேஷ்) என்ற ஒரு ரவுடி தனது அடியாட்களுடன் ஒரு பயணத்திற்குத் தயாராகிறார். போலீஸ் கண்காணிப்பை முழுவதுமாக அறிந்து, தகுந்த முன்னேற்பாடுகளுடன் கிளம்புகிறார்.
ஆனாலும், போலீசில் அவர் மாட்டிக்கொள்கிறார். அதற்குக் காரணம், உதவி கமிஷனர் அஸ்வத்தின் (அதர்வா) திடீர் வருகை.
அஸ்வத்தின் மனைவி வைதேகி (நிகிலா) குழந்தை பெற்றெடுத்து சில நாட்களே ஆகிறது. தாய்ப்பால் வாசம் என்றாலே அஸ்வத்துக்கு ஆகாது. அதனால், மனைவி மற்றும் குழந்தையின் பக்கமே அவர் செல்வதில்லை.
பிரசவத்திற்குப் பிறகான மன அழுத்தம், உதவிக்கு யாரும் இல்லாமை, தூக்கமின்மையால் அவதிப்படும் வைதேகிக்கு அது கூடுதல் கோபத்தை ஏற்படுத்துகிறது.
அன்றிரவு, அந்த எரிச்சல் எல்லை மீறுகிறது. அஸ்வத்துக்கும் வைதேகிக்கும் இடையே மோதல் கூடுகிறது.
அதிலிருந்து தப்பிக்க, ‘லோக்கல் இன்ஸ்பெக்டர்கிட்ட இருந்து போன் வந்தது’ என்று பொய் சொல்லிவிட்டு இரவு ரோந்து செல்கிறார் அஸ்வத். அந்த நேரத்தில்தான், அவர் கையில் சங்கு கணேசன் சிக்குகிறார்.
சங்கு கணேசனிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பட்டாளம் சேகர் (மணிகண்டன்) என்ற ரவுடி தனசேகரைச் சந்திக்கக் கிளம்பியது தெரிய வருகிறது.
அடுத்த நாள் இரவு, சேகர் ஏற்பாடு செய்துள்ள ஒரு பிறந்தநாள் விருந்தில் சங்கு கணேசன் போன்று சென்னை வட்டாரத்தில் இருக்கும் பல ரவுடிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.
அதற்காக, ஒரு சிறப்புக் குழுவையும் தயார்படுத்துகிறார்.
அமைச்சர் வீரவேல் நலங்கிள்ளியின் (இளவரசு) நெருக்கமான வட்டத்தில் இடம்பெற்றிருந்தவர் பட்டாளம் சேகர். அதனால், அமைச்சர் தரப்பில் இருந்து இடையூறு வரக்கூடாது என்பதற்காக, அவர் சம்பந்தப்பட்ட பழைய வழக்கொன்றை தூசி தட்ட ஆணையிடுகிறார் கமிஷனர் சயந்திகா (தில்னாஸ் இரானி).
அதன் மூலமாக, அஸ்வத் குழுவினருக்குச் சிக்கல்கள் அதிகமாகாது என்று நம்புகிறார்.
காவல் துறையினரின் திட்டமிடுதலையும் எச்சரிக்கை உணர்வையும் மீறி, தான் நடத்தவிருக்கும் விருந்தில் போலீஸ் பார்வை விழுவதை அறிகிறார் பட்டாளம் சேகர். அஸ்வத் குழுவின் நடவடிக்கைகளை முடக்குவதற்கான வேலைகளில் இறங்குகிறார்.
இதனிடையே, பட்டாளம் சேகரைச் சந்திக்கக் காத்திருக்கும் ரவுடிகளால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவர்களில் சிலர் சேகரைக் கொல்லும் எண்ணத்தில் இருக்கின்றனர். மேலிடத்தில் இருந்து வரும் அழுத்தங்களை மீறி, அஸ்வத் குழு தேடல் வேட்டையைத் தொடர்கிறது.
பல்வேறு திசைகளில் இருந்து இவர்களது பயணங்கள் தொடங்கினாலும், இரவு விருந்தே இறுதியான இலக்காக இருக்கிறது. அந்த விருந்து எதற்காக நடத்தப்படுகிறது என்ற உண்மையை மெதுவாக விவரிக்கிறது ‘மத்தகம்’ தொடரின் மீதி.
முதல் பாகமாக 5 எபிசோடுகள் மட்டுமே தற்போது காணக் கிடைக்கின்றன. அடுத்த மாதம் மீதமுள்ள எபிசோடுகள் வெளியாகவுள்ளன.
வெப்சீரிஸ் வேட்கை!
ஒருகாலத்தில் ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன் என்று பல மொழிகளில் வெளியாகும் படங்களுக்கு இணையாக, அங்குள்ள தொலைக்காட்சித் தொடர்களும் தீவிர சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டன. இந்தியாவிலும் அப்படிப்பட்டவர்கள் எண்ணிக்கை கணிசம்.
இன்று, அந்த இடத்தை வெப்சீரிஸ்கள் பிடித்திருக்கின்றன. கோவிட் -19 கால ஊரடங்கானது, அவற்றைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கையை எகிறச் செய்திருக்கிறது.
அந்த வெப்சீரிஸ் வேட்கைக்கு ‘மத்தகம்’ தீனி போடுகிறதா என்றால், ‘ஆம்’ என்றே சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு, உலகின் எந்த மூலையில் இருப்பவரும் பார்க்கும்விதமாக இதன் திரைக்கதை அமைந்துள்ளது.
இயக்குனர் பிரசாத் முருகேசன் உடன் இணைந்து கல்யாண்தத் பாண்டி இதன் திரைக்கதை வசனத்தில் பங்களிப்பைத் தந்துள்ளார்.
‘ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனுக்கு அடங்கிப் போறதுக்கு இரண்டு காரணம்தான்.
ஒண்ணு அவனால பலன் இருக்கணும்; இல்லேன்னா, அவன் மேல பயம் இருக்கணும்’ , ‘இந்த ஊரையே கேக்கா வெட்டித் தரப் போறேன், கேக் எப்படி சாப்பிடுறதுன்னு கத்து தரப்போறேன்’, ‘அதிகாரத்தை நீங்க கோபுரம்னு நினைக்கறீங்களா, அது ராட்டினம்’ என்பது போன்ற வசனங்கள் எல்லா மொழி ரசிகர்களையும் ஈர்க்கும் தன்மை கொண்டவை.
எட்வின் சகாய் ஒளிப்பதிவு, இரவு நேரக் காட்சிகளில் அளவான வெளிச்சத்தைத் திரையில் காட்டுகின்றன.
கதாபாத்திரங்களின் அறிமுகத்திற்கு நிறைய நேரம் ஒதுக்கியிருக்கிறது பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு; அதேநேரத்தில், பரபரப்பூட்டும் காட்சிகளில் வேகம் எடுக்கிறது.
ரவுடிகள் மற்றும் போலீஸ் படை நடவடிக்கைகளுக்கான முன்னேற்பாடுகள் அபாரமாகத் திரையில் விரிய உதவியிருக்கிறது சுரேஷ் கல்லாரியின் தயாரிப்பு வடிவமைப்பு.
ஒலிப்பதிவு, ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, சண்டைப்பயிற்சி, விஎஃப்எக்ஸ் என்று ஒவ்வொரு பிரிவிலும் நேர்த்தியான பங்களிப்பு சேர்ந்திருக்கிறது.
வெப்சீரிஸ்களில் பாடல்கள் பெரிதாக வரவேற்பைப் பெறாது எனும் நியதியை உடைத்திருக்கிறது, இதில் தர்புகா சிவா தந்திருக்கும் இசை. அதேபோல, பின்னணி இசையும் காட்சிகளின் தன்மையை அழுத்தமாக உணர்த்த உதவியிருக்கிறது.
‘மத்தகம்’ சீரிஸின் பெரும்பலம், அதன் ‘காஸ்ட்டிங்’. ஏனென்றால், இதில் காய்ன் சிவா, மாவா சேட், ஜெயில் குயில் என்று பல பாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுகின்றன.
ஒன்றின் சாயல் இன்னொன்றில் தென்படாத அளவுக்குப் பொருத்தமான வகையில், அதில் நடித்த நடிப்புக்கலைஞர்களின் தோற்றம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த வெப்சீரிஸில் அதர்வாவும் மணிகண்டனும் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிகிலா உடனான காட்சிகளில் இன்னும் கொஞ்சம் நடித்திருக்கலாமே என்று எண்ணத் தூண்டுகிறது அதர்வாவின் நடிப்பு. மற்றபடி போலீஸ் அதிகாரியாக வரும் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார்.
மணிகண்டனுக்கு இதில் வேறு வேறு அடுக்குகள் கொண்ட ஒரு மனிதனை முன்னிறுத்தும் வாய்ப்பு. காதல், குரோதம் போன்ற உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.
நிகிலாவுக்குக் காட்சிகள் குறைவென்றபோதும், அவர் இடம்பெற்ற காட்சிகள் அனைத்தும் பெண்களை ஈர்க்கும். இந்த சீரிஸில் கிடைக்கும் இன்னொரு ஆச்சர்யம் திவ்யதர்ஷினியின் இருப்பு.
இந்த வெப்சீரிஸில் இளவரசு, தில்னாஸ் இரானி, கௌதம் மேனன், வடிவுக்கரசி, ரிஷிகாந்த், திருநாவுக்கரசு, முரளி அப்பாஸ், நந்தினி மாதேஷ், சரத் ரவி, மூணாறு ரமேஷ், பாண்டி ஜீவா உட்படப் பலர் நடித்துள்ளனர்.
சிசர் மனோகர், டவுட் செந்தில், ஜான் சுந்தர் இடம்பெறும் காட்சிகள் நம்மைச் சிரிக்க வைக்கும். ஆனால், அவை மையக்கதையில் இருந்து விலகி நிற்காது.
அதேபோல, அதர்வா மற்றும் திருநாவுக்கரசுக்கு உதவி செய்யும் வேடத்தில் நடித்த பெரியவர் ஒரு காட்சியில் வந்தாலும் மனதில் நிற்கிறார்.
இவர்கள் தவிர்த்து திரையில் தோன்றும் நடிப்புக்கலைஞர்களின் எண்ணிக்கை சில டஜன்களாவது இருக்கும்.
மெல்ல ஈர்க்கும்!
‘மத்தகம்’ வெப்சீரிஸின் முதன்மை பாத்திரங்களோடு பார்வையாளர்கள் ஒன்ற, கண்டிப்பாகச் சில நிமிடங்கள் தேவைப்படும். அதுவும் போக, ஒவ்வொரு எபிசோடிலும் சில பாத்திரங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
அதற்கேற்றவாறு அந்தக் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. அதனைக் குறையாகக் கருதினால், இந்த திரைக்கதை ட்ரீட்மெண்ட் பிடிக்கவில்லை என்று அர்த்தம். அது நம்மை ஈர்த்தால், இந்த தொடர் தரும் அனுபவம் ஒரு ரோலர்கோஸ்டர் பயணமாக இருக்கும்.
இந்த சீரிஸில் இயக்குனர் பிரசாத் முருகேசன் மற்றும் அவரது குழுவினர் கொட்டியிருக்கும் உழைப்பு அபாரமானது. அதுவே, இதனைப் பார்த்து ரசிக்க அடிப்படையாக உள்ளது.
பத்திரிகை செய்திகள், காவல் துறை கோப்புகள் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ள விஎஃப்எக்ஸ், எளிதாகச் சில பாத்திரங்களை அறிமுகப்படுத்த உதவுகிறது. அதேபோல, இரவில் நடக்கும் கதை என்பதால் இருளுக்கும் ஒளிக்குமான முக்கியத்துவமும் முரணும் சில ஷாட்களில் மிகக்கூர்மையாகச் சொல்லப்பட்டுள்ளன.
பிரசவித்த மனைவியுடன் உடல் நெருக்கம் பாராட்ட முடியாத ஒரு நாயக பாத்திரம் தமிழ் ரசிகர்களுக்குப் புதிது. ஆனால், அந்த அம்சமே இந்த கதையில் திருப்புமுனையை ஏற்படுத்தும் காரணமாகவும் உள்ளது.
இது போன்று திரைக்கதையில் மிகக்கூர்மையாகச் சேர்க்கப்பட்ட சில விஷயங்களே ‘மத்தகம்’ தொடரைத் தனித்துவமானதாக மாற்றுகிறது.
இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது சர்வதேச வெளிச்சம் விழுவதற்கான வாய்ப்பையும் அது ஏற்படுத்தித் தரலாம்.
வெறுமனே பொழுதுபோக்கை மட்டுமே பெறுவதற்காக, எவரும் வெப்சீரிஸ் பக்கம் ஒதுங்குவது கிடையாது. இன்று, அதற்கென்று தனி பார்வையாளர்கள் உருவாகிவிட்டார்கள்.
அவர்களில் கணிசமானவர்கள் தியேட்டருக்குச் செல்லாதவர்களாகவும் உள்ளனர். அவர்களாக விரும்பும் நேரத்தில் பார்ப்பதற்கான வசதியை ஓடிடி தளங்கள் தருகின்றன. அதையும் மீறி, ஒரேமூச்சாகப் பார்க்கச் செய்யும் வேட்கையை ‘மத்தகம்’ நிச்சயம் ஏற்படுத்தும்.
அந்த வகையில், இதில் 5 எபிசோடுகள் மட்டுமே பார்க்கக் கிடைப்பது விரக்தியைத் தருகிறது. இதனால், அடுத்து வரும் எபிசோடுகள் மீதான ஆர்வம் குன்றவும் வாய்ப்புண்டு. அது மட்டுமே ரசிகர்களுக்குப் பெருங்குறையாகத் தென்படும்.
ஆபாசமான சித்தரிப்புகளோ, வன்முறைக் காட்சிகளோ இதில் கிடையாது; மிகச்சில இடங்களில் வசனங்களில் மோசமான வார்த்தை பிரயோகங்கள் உள்ளன.
அதனால், நடுவீட்டில் அமர்ந்துகொண்டு லவுட் ஸ்பீக்கரில் அலறவிட்டு இதனைப் பார்க்க முடியாது.
மற்றபடி, யானையின் நெற்றியில் அடித்து வீழ்த்துவதைப் போல காவல் துறையின் ஒரு தேடுதல் வேட்டையை முன்னிலைப்படுத்தும் இந்த ‘மத்தகம்’ நிச்சயம் ரசிகர்களைக் கவரும்!
– உதய் பாடகலிங்கம்