மீள்தல் எனும் முற்றுப்பெறா பயணம்!

– பெல்சின் சினேகா

இப்போதெல்லாம் என் காலைப் பொழுதுகள் மராட்டிய பாடல்களோடு ஆரம்பமாகின்றன.

எனக்கும் சினேகாவிற்குமான பொழுதுகள் ஒரு கப் பிளாக் டீயுடன் இளையராஜாவின் பாடல்களைக் கேட்பதிலும் பாடுவதிலும் கரைந்து போனதுண்டு.

அவளை நினைவூட்டும் இளையராஜா பாடல்களை அவள் மறைவிற்குப் பின் கேட்கவே இல்லை.

நீல்கந்த் மாஸ்டர் என்ற மராட்டிய திரைப்படத்தில் அஜய் – அதுல் இசையில் வரும் பாடல்களும் அதில் வரும் தபேலாவின்  தாளமும் ஒரு பனி படர்ந்த காலைப் பொழுதைக் கண்முன்னே கொண்டுவரும்.

உயிரை உருக்கும் அந்த இசையும் கொஞ்சம் காயத்திற்கு மருந்தாகிறது.

சில இழப்புகளுக்குப் பின் நம்மைக் கையாலாகாதவர்களைப் போல, தோல்வி அடைந்தவர்களைப் போல உணர்வதற்கான அத்தனை சாத்தியங்களையும் நம் முன் இந்த சமூகம் எடுத்துவைப்பதை நாம் ஒவ்வொருவரும் கடப்பதே பெரும் சவால்தான்.

அம்மாவின் இழப்பின்போதும் இளையவளின் இழப்பின் போதும் உணர்ந்த தனிமையிலிருந்து சினேகாவைக் கொண்டு மீண்டு விடலாம் என்ற நினைத்திருந்த எனக்கு, இப்போது என்னையன்றி அதை நிகழ்த்திக்கொள்ள யாருமில்லை என்ற உணர்வு எந்த அளவிற்கு அச்சமூட்டுகிறதோ அதேயளவிற்கு யோசிக்கவும் வைக்கிறது.

பெண்கள் தனியாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை அனுபவமாக மாற்றி யாரையும் சாராமல் சுதந்திரமாக வாழ்வது பெருமைப்பட வேண்டிய விஷயம் இல்லையா?

ஆனால், நம் சமூகம் ஏன் அவர்களின் உணர்வுகளைக் கொன்று நடைப்பிணமாக்குகிறது?

அனைவரும் சூழ இருக்கும்போது கொடுக்கப்பட்ட கட்டளைகளுக்கொத்த கட்டளைகளையே இழப்பிலும் அளிக்கிறது.

பெண்கள் எப்படி சந்தோஷப்பட வேண்டும், எதெல்லாம் அவர்களின் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற வகைமைகள் போலவே எவையெல்லாம் இழப்பு, எந்த இழப்பிற்கு எப்படி வருந்த வேண்டும், எவ்வளவு வருந்த வேண்டும் என்றும் வகைப்படுத்துகிறது.

இறப்பு.. இழப்பு.. கணவன் ஒத்துக்கொள்ள மாட்டார் என்று வேலையை விடுவது இழப்பில்லையா?

“கற்பு” இழக்கக் கூடாத ஒன்று. நெருங்கிய உறவுகளில் பறிக்கப்படும்  சுயமரியாதை, இழப்பில்லையா?

தாய், தந்தையை விட்டுக் கணவன் வீட்டிற்கு செல்வது இழப்பு. தாய்,  தந்தையின் சொத்தில் பங்கு தரப்படாமல் போவது இழப்பில்லையா?

மேலே கூறப்பட்ட மூன்று முதல் பாதிகளுக்கும் பெண்கள் ஓலமிட்டு அழ வேண்டும் என்று எதிர்பார்க்கும் இந்தச் சமூகம், இரண்டாம் பாதிகளின் கேள்விகளுக்கு மௌனத்தை தவிர எதையும் பதிலாகத் தருவதில்லை.

தங்கள் உணர்வை, வேதனையை, இயலாமையை, மகிழ்வை, கோபத்தை, ஆக்ரோஷத்தை, மனச்சிதறலை எதையுமே வெளிப்படுத்த முடியாமல்  வாழ்தலுக்கான தீராத ஏக்கத்துடன் வாழ்ந்து மடியும் பெண்கள், மீண்டும் உயிர்த்தெழுவார்களானால், அதைவிட மனதிற்கினிய மேலான நிகழ்வு வேறென்ன இருக்க முடியும்?

வாழ்க்கை எனும் பெரும் மரம் அடியோடு பிடுங்கப்பட்டு வாழ்வில் மர்மம், எள்ளல் என உடைந்துநின்ற நொடிகளில் எதிர்பாராத இடங்களில் இருந்து நம்  மீது பொழியப்படும் அன்பும், கருணையும் நம்மை வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்கிறதே… அது மட்டுமே மனிதம் இன்னும் சாகவில்லை என்று கொஞ்சம் ஆறுதல் அளிக்கிறது.

பெண்களே, வாழ அன்றாடம் அனுமதி மறுக்கப்படும் நாம் வாழ்ந்திருத்தலே வெற்றிதான்.

சற்றே பொறுத்திருந்து பார்க்கலாம்.

காலம் கனியலாம்!

ஒரேயொரு சிட்டுக் குருவியின் கீச்சொலியோ, மொழி விளங்காத ஒரு பாடலின் தபேலா இசையோகூட நம்மை மீட்டு விடலாம்.

(மகளைப் பறிகொடுத்த ஒரு தாயின் மனப் பதிவு)

நன்றி: தினமணி

Comments (0)
Add Comment