மணிப்பூரில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை 175!

மணிப்பூரில் நான்கு மாதங்களாக தொடரும் இனக்கலவரத்தில் இதுவரை 175 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,108 பேர் காயமடைந்துள்ளதாக மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3-ம் தேதி மெய்தி இன மக்களுக்கும், குகி இன மக்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறினர். கலவரத்தில் பெண்கள் கற்பழிப்பு உள்ளிட்ட  பல குற்றங்கள் நடந்தன.

இந்நிலையில் நான்கு மாதங்களில் நிகழ்ந்த வன்முறை விவரங்களை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, மணிப்பூரில் கடந்த 4 மாதங்களாக  நடைபெற்ற வன்முறையில், இதுவரை 175 பேர் பலியாகியுள்ளனர் என்றும் 1108 பேர் காயமடைந்தனர் என்றும் 32 பேர் காணாமல் போயுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் 4,786 வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டதாகவும், அதில் 386 மதக் கட்டடங்கள் அழிக்கப்பட்டதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. அழிக்கப்பட்ட 386 மதக் கட்டங்களில் 254 தேவாலயங்கள் மற்றும் 132 கோயில்கள் என்றும் தெரியவந்துள்ளது.

காணாமல் போன ஆயுதங்களில் 1,359 துப்பாக்கிகள் மற்றும் 15,050 பல்வேறு வகையான வெடிபொருள்களை காவல்துறையினர் மீட்டுள்ளதாகவும் வன்முறையில் உயிரிழந்த 175 பேரில் 9 பேர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என்றும் 79 உடல்கள் உரிமை கோரப்பட்டுள்ளதாகவும், 96 உடல்கள் உரிமை கோரப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment