தயாரிப்பாளர்களைத் தவிக்கவிட்ட 4 நடிகர்களுக்குத் தடை!

நில புலன்களை விற்றும், வட்டிக்குக் கடன் வாங்கியும் சினிமா எடுக்கும் தயாரிப்பாளர்களை சில நடிகர்கள் வாட்டி வதைப்பது காலங்காலமாக தமிழ் சினிமாவில் நிகழ்ந்து வரும் கொடுமை.

கால்ஷீட் தராமல் இழுத்தடிப்பது, கூடுதல் பணம் கேட்பது, கதையை மாற்றச் சொல்வது போன்ற ’வதைகள்’ இதில் அடக்கம்.

பேச்சுவார்த்தை நடத்தியும், பஞ்சாயத்து பேசியும் தீர்வு கிடைக்காத போது, அந்த அப்பாவித் தயாரிப்பாளர்கள், கடைசி கட்டமாக தங்கள் சங்கத்தில் முறையிடுகிறார்கள்.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் மிகவும் வலிமையானது என்பதால், அவர்கள் மூலம் பாவப்பட்ட தயாரிப்பாளர்களுக்கு நிவாரணம் கிடைக்கிறது.

தயாரிப்பாளர்களுக்கு குடைச்சல் கொடுக்கும் நடிகர்களை, திரை உலகத்தில் இருந்தே தயாரிப்பாளர் சங்கத்தால் விரட்ட முடியும்.

‘இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி’ படத்தின் கதாநாயகன் வடிவேலு, அந்தப் படத்தில் நடித்தபோது தயாரிப்பாளர் ஷங்கருக்கும், படத்தை இயக்கிய சிம்புதேவனுக்கும் கொடுத்த இம்சைகளைச் சொல்லிமாளாது.

காட்சிகளை மாற்றச்சொல்லி முரண்டு பிடித்தார். டைரக்டர் மறுத்ததால், கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்தார். ஷங்கருக்கு ஏகப்பட்ட நஷ்டம். தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்தார்.

வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்கார்டு’ போட்டு அவரை நடிக்க விடாமல் செய்தது. ஐந்தாறு ஆண்டுகள் வடிவேலு வீட்டிலேயே முடங்கிக் கிடந்தார்.

தயாரிப்பாளர் ஷங்கருக்கு 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கொடுத்ததால் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிந்தது.

அந்தப் பணத்தை வடிவேலு சார்பில் செலுத்தி, அவரை வைத்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தை தயாரித்த லைகா நிறுவனம் இழப்பை சந்தித்தது  தனிக்கதை.

இப்போது சிம்பு, தனுஷ், விஷால், அதர்வா ஆகிய நான்கு நடிகர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ’ரெட் கார்டு’ போட்டுள்ளது. இதனால் அவர்கள் நான்கு பேரும் சினிமாவில் நடிக்க முடியாது.

வடிவேலுவை போல், அவர்கள் நால்வரும் தயாரிப்பாளர்களுக்கு இழப்பீடு அளித்தால், மீண்டும் அரிதாரம் பூசலாம்.

சிம்புவைக் கதாநாயகனாக வைத்து ’அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தை மைக்கேல் ராயப்பன் தயாரித்தார். படம் ஓடவில்லை.

இதனால் ராயப்பனுக்கு மீண்டும் கால்ஷீட் கொடுக்க சிம்பு ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால் நடிக்கவில்லை. எனவே சிம்பு மீது ராயப்பன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து சிம்புவுக்கு ’ரெட் கார்டு’ போட்டு, சென்னையில் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்தபோது சங்கப் பணத்தை முறையாக வரவு, செலவு வைக்கவில்லை. இதனால் அவருக்கு ‘ரெட் கார்டு’ வழங்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ், தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி தயாரிக்கும் படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் படப்பிடிப்புக்கு வராமல் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இது குறித்து தயாரிப்பாளர் சங்கத்தில் முரளி புகார் அளித்ததால், தனுஷுக்கு ரெட் கார்டு.

அதர்வா மீதான குற்றச்சாட்டு என்ன?

அதர்வாவுடன் இணைந்து மதியழகன் என்ற தயாரிப்பாளர் ‘செம போதை ஆகாத’ படத்தைத் தயாரித்தார். சொன்ன தேதியில் படம் வெளியாகாமல் கால தாமதம் ஏற்பட்டதால் மதியழகனுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

இதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்ட அதர்வா ‘மின்னல் வீரன்’ என்ற படத்தில் நடித்து கொடுப்பார் என்று முடிவானது.

இதற்காக அதர்வா ஒரு கோடி ரூபாய் சம்பளமாக கேட்டுள்ளார். தயாரிப்பாளர் மதியழகன் 45 லட்சம் ரூபாய் முன்பணமாக கொடுத்துள்ளார். ஆனால் வாக்குறுதி அளித்தபடி ’மின்னல் வீரன்’ படத்தில் அதர்வா நடித்து கொடுக்கவில்லை.

அவரால் தனக்கு 6 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக மதியழகன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தார். இதனால், அதர்வாவுக்கு ரெட்கார்டு கொடுக்க தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்தது.

’ரெட் கார்டு’ வழங்கப்பட்டுள்ள நான்கு பேருமே வாரிசு நடிகர்கள். அதர்வா, பிரபல நடிகர் முரளியின் மகன். விஷாலின் தந்தை ரெட்டி, பல படங்களைத் தயாரித்தவர்.

’சகலகலா வல்லவன்’ டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. அதே போல் பிரபல இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மகன் தனுஷ்.

அதர்வா தவிர மற்ற மூன்று நடிகர்களின் அப்பாக்களும், தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் என்பதை இங்கே குறிப்பிட வேண்டும்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment