மழைக்காலத்தில் எத்தனை அவதிகள்?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

மழைக் காலம் துவங்கிவிட்டது.

தமிழ்நாடு முழுக்கப் பல பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டிருக்கிறது. சாலைகளில் மழை நீர்த் ததும்பி ஓடுகிறது. வாகனங்கள் தடுமாறிப் போகின்றன.

பெய்கிற மழையை எந்த அளவுக்குச் சேமித்து மண்ணுக்குள் செலுத்துகிறோம்? எந்த அளவுக்கு அது வீணாகிறது? என்கிற கேள்விகள் மழைக்காலத்தில் எப்போதும் கேட்கப்படும் கேள்விகளில் ஒன்றாகிவிட்டது.

எங்கும் மழை நீரின் நசநசப்பு. மழை நீர் வடிகால் பணிகளுக்காகவும், மெட்ரோ பணிகளுக்காகவும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பள்ளத்தைத் தோண்டியிருக்கிறார்கள்.

மெட்ரோ ரயிலுக்கான பணிகளும் சென்னை முழுக்கப் பல இடங்களில் நடந்து கொண்டிருக்கின்றன.

சென்னையில் கொளத்தூர், பெரம்பூர் பகுதிகளுக்குச் சென்று பார்த்தால் தெருக்கள் தோறும் பள்ளங்கள் தோண்டப்பட்டு, இயல்மான வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.

இருசக்கர வாகனங்களில் செல்லும் இளைஞர்கள் தடுமாறி இந்தப் பள்ளங்களில் விழுகிறார்கள்.

பள்ளிகளுக்குச் சைக்கிளில் செல்லும் மாணவிகள் இந்தச் சாலைகளில் செல்வதற்குச் சிரம்பபடுகிறார்கள்.

தங்கள் வீடுகளுக்கு முன்னிருக்கும் பள்ளங்களைத் தாண்ட சிறு பலகைகளைப் போட்டுத் தாண்டி வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள் இங்கு குடியிருக்கும் வாசிகள்.

இப்படி இருக்கிற சாலைகளையும், தெருக்களையும் மேலும் சிரமத்தில் ஆழத்தியிருக்கிறது அண்மையில் பெய்து வரும் மழை.

அங்கங்கே தோண்டப்பட்டிருக்கிற பள்ளங்களில் எல்லாம் மழை நீர் தேங்கிக் கிடக்க – சாக்கடை வாடை அந்தப் பகுதிகளில் வீசுகிறது. அதில் கொத்தாக‍க் கொசுக்கள் மொய்க்கின்றன.

பல பகுதிகளில் பகல் நேரத்திலேயே கொசுக்களின் ஆதிக்கம் அதிகப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் தான் டெங்குவும் மற்ற மர்மக் காய்ச்சலும் பரவிக் கொண்டிருக்கிற எண்ணிக்கை ஊடகங்களில் வாசிக்கப்படுகிறது.

பல வீடுகளில் காய்ச்சலினால் பலர் பாதிக்கப்பட்டிருப்பது இந்தப் பகுதி மருத்துவமனைகளுக்குப் போனாலே தெரிகிறது.

சிறு குழந்தைகளும், பெரியவர்களும் ஒருசேரப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள், பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மழைக் காலத்தில் மழை நீர் வடிகால் பணிகளைத் துவக்க எப்படி முடிவு செய்த‍து சென்னை மாநகராட்சி?

இந்தச் சமயத்தில் பல பகுதிகளில் பள்ளங்கள் தோண்டப்படுவதால் மக்கள் படும் சிரமங்களும், பள்ளங்கள் தோறும் மழை நீர் நிறைந்து கொசு மண்டலம் அதிகரித்திருப்பதற்கு மாநராட்சியே காரணமாக வேண்டுமா?

மழைநீர் வடிகால் பணி பெருநகரின் நலனுக்காகச் செய்ய வேண்டிய பணி தான் சந்தேகமில்லை. மக்களின் எதிர்காலம் கருதித் தான் இந்தப் பணிகள் நடக்கின்றன.

ஆனால், அதை மழைக் காலத்தில், மழை தொடர்ந்து பெய்ய வாய்ப்பு இருக்கும் காலத்திலா செய்ய வேண்டும்?

யோசிக்க வேண்டும் மாநகராட்சி அதிகாரிகள்!

– லியோ

Comments (0)
Add Comment