ஒரு கட்சியில் இருந்தாலும், கட்சித் தலைவருக்கு அடுத்த படியாக, தமிழகம் முழுக்க அறிந்த முகங்களாக இருந்தவர்கள் வைகோவும், குமரி அனந்தனும்.
கருணாநிதிக்கு வைகோவும், காமராஜருக்கு குமரியாரும் தளபதியாக விளங்கினர். அவர்கள் சார்ந்த கட்சிகளில் இருவருக்குமே தனி இளைஞர் பட்டாளம் உருவாகி இருந்தது. இருவர் நாவிலும் தமிழன்னை குடி இருந்தாள்.
அரசியல் கூட்டங்களில் மட்டுமல்லாது, இலக்கிய மேடைகளிலும் மணிக்கணக்கில் உரை நிகழ்த்தும் வல்லமை பெற்றவர்கள். இருவருமே தாய்க்கட்சிகளில் இருந்து பிரிந்து தனிக்கட்சி ஆரம்பித்து, வெற்றி இலக்கை எட்டாது போனார்கள்.
எம்.ஜி.ஆரும், கருணாநிதியும் உயிரோடு இருந்த நேரத்தில் குமரி அனந்தன், காகாதேகாவைத் (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் கட்சி) தொடங்கினார். அந்த ஆளுமைகளுக்கு மத்தியில் குமரியார் குரல் எடுபடவில்லை.
வைகோ வீழ்ச்சி அடைந்த கதையை இங்கே பார்க்கலாம்.
திமுகவில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக கூட்டத்தை திரட்டும் சக்தி கொண்டவராக இருந்தவர் வைகோ. அதனால் பல முறை அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து அழகு பார்த்தார் கலைஞர்.
திமுகவை விட்டு, எம்.ஜி.ஆர். வெளியேற்றப்பட்ட சமயத்தில், வைகோ கலைஞர் பக்கம் நின்றார். எம்.ஜி.ஆர். மறையும் வரை கலைஞருடனேயே இருந்தார்.
தென் மாவட்டங்களில் திமுகவை கட்டிக் காத்தவர். 1977ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரைக்கு தெற்கே திமுக ஜெயித்த ஒரே தொகுதி சங்கரன் கோவில். வைகோவின் ஊருக்குள் வரும் தொகுதி.
தெற்கில், திமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவருமே வைகோ பக்கமே நின்றார்கள்.
வைகோவின் அச்சம்
1990 களில், திமுகவுக்குள் மு.க.ஸ்டாலின், மெல்ல மெல்ல முன்னிலைப் படுத்தப்பட்டதால், வைகோவுக்கு தனது எதிர்காலம் குறித்து அச்சம் உண்டானது.
’கலைஞருக்கு கொடுக்கும் அதே மரியாதையை ஸ்டாலினுக்கும் கொடுக்க வேண்டும்’ என கட்சி மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால் மூத்த தலைவர்களும் மனப்புழுக்கத்தில் இருந்தனர்.
அந்த நேரத்தில் தான், கலைஞர் கருணாநிதியிடம் சொல்லாமல், வைகோ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்திக்க யாழ்ப்பாணத்திற்கு ரகசிய பயணம் மேற்கொண்டார்.
இந்த விவகாரம் கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, தமிழக அரசின் தலைமைச் செயலரிடமிருந்து கருணாநிதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
அந்தக் கடிதத்தில் ’விடுதலைப் புலிகளால் உங்கள் உயிருக்கு ஆபத்து வரலாம் என மத்திய அரசு, எங்களுக்கு தகவல் தெரிவித்துள்ளது. எனவே உங்களுக்கு பாதுகாப்பு வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்’ என அந்தக் கடிதம் தெரிவித்தது.
கடித விவரத்தை செய்தியாளர்களிடம் கருணாநிதி பகிர்ந்து கொண்ட நிலையில், வைகோ வெளியிட்ட ஒர் அறிக்கை கலைஞரை மறைமுகமாக குத்திக்காட்டியது.
இதனால் வைகோவுக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பினார் பொதுச் செயலாளர் அன்பழகன். இதன் தொடர்ச்சியாக 1993ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் வைகோ.
இதையடுத்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற பெயரில் புதிய கட்சியைத் துவக்கினார் வைகோ.
அவருடன் திமுகவின் 10 மாவட்டச் செயலாளர்கள் இணைந்தனர். அனைவருமே வலிமையான ஆட்கள்.
மிசா நேரத்தில் கருணாநிதிக்கு காரோட்டிய கண்ணப்பன், எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்து திண்டுக்கல் இடைத் தேர்தலில் போட்டியிட்ட போது திமுக வேட்பாளராக களம் இறங்கிய பொன். முத்துராமலிங்கம் ஆகியோர் வைகோவுடன் கை கோர்த்த முக்கியத் தளபதிகள்.
சென்னையில் பிரமாண்ட மாநாட்டையும் வைகோ நடத்திக் காட்டினார்.
1996 ஆம் ஆண்டு நடந்த தேர்தல் வைகோவுக்கு பெரிய சறுக்கலாக அமைந்து, இன்று வரை அவர் எழ முடியாமலேயே போய் விட்டது.
அது ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த நேரம். அப்போது சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது.
நரசிம்மராவ் தலைமையில் செயல்பட்ட காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதனை ஏற்காத காங்கிரஸ் மூத்த தலைவர் ஜி.கே.மூப்பனார், தமாகாவை தொடங்கினார்.
அந்த சமயத்தில் ஜெயலலிதாவை எதிர்த்த ரஜினிகாந்த், புதிய கட்சி ஆரம்பித்து மூப்பனாருடன் சேர்ந்திருந்தால், தமிழகத்தில் மாற்றம் உருவாகி இருக்கும்.
ஆனால் திமுக – தமாகா கூட்டணி உருவாகவும், திமுக ஆட்சி மீண்டும் மலரவும் துணை நின்றார் ரஜினி.
’தனிக்கட்சி தொடங்குங்கள்… திமுகவுடன் சேர வேண்டாம்’ என ரஜினியை கெஞ்சினார் வைகோ.
அது தோல்வியில் முடிந்தது.
பாமகவுடன் கூட்டணி பேச்சு நடத்தினார்.
அதுவும் தோல்வியில் முடிந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்தித்தார்.
அப்போதும் தோல்வி.
விளாத்திகுளத்தில் வைகோவே தோற்றுப் போனார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மதிமுக கரைய ஆரம்பித்தது.
2006 ஆம் ஆண்டு வைகோவுக்கு மறுவாழ்வு அளித்தார் ஜெயலலிதா. தனது கூட்டணியில் வைகோவை சேர்த்துக்கொண்டார். 6 தொகுதிகளில் மதிமுக வென்றது. முதன் முறையாக அந்த கட்சி சட்டப்பேரவையில் நுழைந்தது.
2011 ஆம் ஆண்டு தேர்தலில் வைகோ, தன் தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக் கொண்டார்.
நிறைய தொகுதிகளை அதிமுகவிடம் எதிர்பார்த்தார். ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லை. கொஞ்சம் இறங்கி வந்த ஜெயலலிதா 12 இடங்கள் கொடுக்க முன் வந்தார்.
இதனை ஓ.பன்னீர்செல்வம், வைகோவை நேரில் சந்தித்து சொன்னார்.
வைகோ ஏற்கவில்லை. தேர்தலை அவர் புறக்கணித்தார்.
வைகோ அன்று மட்டும், ஜெயலலிதா அளித்த 12 இடங்களை ஏற்றுக் கொண்டிருந்தால், அத்தனை தொகுதிகளிலும் மதிமுக ஜெயித்திருக்கும்.
ஜெயலலிதாவை, வைகோ நேரில் சந்தித்து பேசி இருந்தால் கூடுதலாக இரண்டு, மூன்று இடங்களை, மதிமுகவுக்குக் கொடுத்திருப்பார்.
வைகோ எதிர்க்கட்சித் தலைவராக கூட ஆகி இருக்கலாம்.
வைகோவின் ஆத்திரம், அந்த தேர்தலில் விஜயகாந்துக்கு லாபமாக அமைந்தது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்து அந்த தேர்தலில் போட்டியிட்ட கேப்டன், எதிர்க்கட்சித் தலைவர் ஆனார்.
திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
மதிமுக இன்று…:
ஸ்டாலின் முதலமைச்சராகக் கூடாது என்பதற்காக வைகோ 2016 ஆம் ஆண்டு உருவாக்கிய மக்கள் நலக்கூட்டணி ‘பூஜ்யம்’ ஆனது.
மதிமுகவில் இன்று வைகோ, அவரது மகன் மற்றும் மல்லை சத்யா மட்டுமே உள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு, ஒரு இடத்தில் வென்றது, வைகோவுக்கு மாநிலங்களவை எம்.பி.பதவியை திமுக கொடுத்தது.
வரும் மக்களவைத் தேர்தலிலும் ஒரு இடம் கிடைக்கும். வைகோ மகனுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கிடைக்கலாம்.
திமுகவை நம்பியே, வாழ்நாள் முழுவதும் காலம் தள்ளவேண்டிய நிலைக்கு வைகோ தள்ளப்பட்டுள்ளார் என்பதே யதார்த்தம்.
– பி.எம்.எம்.