காஞ்சிபுரத்தில் நெசவுத் தொழிலாளர்களின் மாநாடு. திரளான மக்கள் பந்தலுக்குக் கீழே கூடியிருப்பார்கள்.
மாநாட்டின் தலைவர் பேசி முடித்து, அமர்ந்துவிட கூட்டத்தில் ஒரே சலசலப்பு. மக்கள் தங்களுக்குள்ளே அமைதியின்றி தத்தளித்துக் கொண்டிருந்தார்கள்.
மாநாட்டின் தலைவர் எழுந்து நின்று, “இப்போது தோழர் அண்ணாதுரை அவர்கள் பேச…” என்று சொல்லி முடிப்பதற்குள் கைத்தட்டல் ஓசையும், ‘அண்ணாதுரை வாழ்க! திராவிடத் தளபதி வாழ்க!” என்ற கோஷங்கள் விண்ணைப் பிளக்கத் தொடங்கிவிடும். அந்த அளவுக்கு அண்ணா தன் மேடைப் பேச்சால் மக்களை வசீகரித்திருந்தார்.
இரண்டரை மணி நேரமானாலும் சொல் ஒவ்வொன்றும் அதே வேகத்தோடு பொழியும். கணீர் கணீரென்று தெறிக்கும். பகடியாலும் புள்ளிவிபரங்களாலும் கல்லில் நார் உறிப்பதுபோல அவர் சொற்பொழிவு இருக்கும்.
*
அண்ணா எழுதின நூல்கள், வெளியான ஒரு வாரம் தாண்டும் முன்பே ஆயிரக்கணக்கான படிகள் விற்றுத் தீர்ந்துவிடும். முப்பத்திரெண்டு பக்கம் ஒரு ரூபாய் விலை. திராவிட நாட்டில் எழுதிய ரங்கோன் ராதா, ரோமாபுரி ராணி எல்லாம் தனி நூலாக வெளியாகியிருக்கும்.
பணத்தோட்டம் பற்றி அறிவுப்புதான் வெளிவந்திருக்கும். மக்கள் முந்தைய இரண்டையும் பணம் கொடுத்து வாங்கிவிட்டு, அடுத்த புத்தகத்துக்கு முன்பணம் கட்டிவிட்டுக் காத்திருப்பார்கள்.
நுண்மான் நுழைபுலம் என்பதுபோல அந்தக் கால மக்களின் வாசிப்பு ரசனைக்குள் ஊசிகளைச் சொருகிடும் விதத்தில் புதிய புதிய சொல்லாட்சிகளுடன் எழுத்தில் விளையாடியிருக்கிறார் அண்ணா.
*
அண்ணாவின் படைப்புகளுக்குப் பின்னணியாகச் சில தனித்துவமான காரணங்களும் இருந்தன. உதாரணமாக, கம்பர் ராவணனைப் பாடும்போது, ‘இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன்’ என்று குறிப்பிட்டிருப்பார்.
அந்தப் பெரும்பழியைப் போக்குவதற்காகவே அண்ணா எழுதியதுதான் நீதிதேவன் மயக்கம்.
அதேபோல, கல்யாண், புரந்தர் உள்ளிட்ட கோட்டைகளை வென்று, வெற்றிவாகை சூடிய சிவாஜி, கடைசியில் ‘ஹிந்து ராஜ்ஜியத்தை’ ஸ்தாபிக்கிறேனென ஆரிய கங்கு பட்டரை அணுகியதால் தன் தேசமிழந்த கதையை, ‘சிவாஜி கண்ட ஹிந்து ராஜ்ஜியம்’ என்ற அரிய சரித்திரச் சித்திரமாக எழுதினார்.
*
அறிவியல் வளர்ச்சியைப் பற்றிய பார்வை குறித்துப் பேசும் அண்ணா, “மின்சார சக்தியைக் கண்டுபிடித்தவன் யார் என்று கேட்டால் நம்மவர்கள் தெரியாது என்பார்கள். ஆனால், எமனுக்கு வாகனம் எது தெரியுமா என்றதும் எருமைக்கடா என்று பட்டென்று பதில் வரும்.
நீராவி இயந்திரத்தைக் கண்டுபிடித்தவனையோ, ரேடியத்தின் உபயோகமோ தெரியாது. ஆனால், எமன் எருமையில் வந்து பரலோகம் கூட்டிக் கொண்டு போவான் என்று அவ்வளவு ஆழமாக நம்புகிறார்கள்.” என்று பழைய குருட்டு நம்பிக்கைகளில் மக்கள் ஆழ்ந்து கிடப்பதை விமர்சிக்கத் தவறியதில்லை.
*
அண்ணா வாழ்ந்த காலத்தில் அவருக்காக எழுதப்பட்ட வஞ்சப் புகழ்ச்சிப் பாடல்கள் அதிகம்.
அதிலொன்று “அண்ணா நீ மக்கள் கூட்டத்தைச் சிதைக்கும் சூறைக்காற்று; சமய வாழ்வைப் பறிக்கும் சண்டக் காய்ச்சல்; செல்வ வாழ்வைச் சீர்குலைக்கும் செந்தேள்; ஆரிய முறையை அருவருக்கும் அரக்கப்படை; பழைய இதிகாச புராணங்களை நிலைக்கவொட்டாது தூற்றும் கூற்றம்.”
இந்த ஒவ்வொரு வரிகளுக்கும் அண்ணா காரண, காரிய விளக்கங்களை வரிசையாக அடுக்கி, எதிர்த்து எழுதியவர்களையே தன்பக்கம் ஈர்த்திருக்கிறார்.
*
“கோபால கிருஷ்ணைய்யரும் கவுன்சிலர்தான். கோவிந்தச் செட்டியாரும் கவுன்சிலர்தான். கொண்டையாவும் கவுன்சிலர்தான் முனிசிபல் சபையில். அவர்களுக்குள் பேதமில்லை.
ஒரேவிதமான அதிகாரம். அந்தஸ்து, ஆசனம், எல்லாம். கோபால கிருஷ்ணைய்யர் கொண்டுவரும் தீர்மானத்தை, கொண்டையா எதிர்க்கலாம். தடையேதுமில்லை. சட்டம் ஜாதியைக் கவனித்துத் தடைபோடாது.
அரசியலில் அவர்கள் மூவரும் சமம். ஆனால் நகரசபை மண்டபத்தைவிட்டு வெளியே வந்ததும் மூவரும் வேறு வேறு. அங்கே சட்டமல்ல சாஸ்திரம் அவர்களை ஆக்குகிறது. அந்த சாஸ்திரத்தை சட்டத்தால் தொடக்கூட முடிவதில்லை.
பணம், படிப்பு இவைகளால் ஜாதி பேதக் கொடுமைகளை ஓரளவுக்குக் குறைக்க முடியுமேயொழிய அடியோடு அழிக்க முடிவதில்லை.
இந்த நாட்டில் ஜாதிதான் மக்களுக்குள் பேதத்தை ஏற்படுத்தும் முதல் சாதனம். சமதர்மத்தை நாம் காணவேண்டுமென்றால் முதலில் ஜாதியை நாம் தொலைத்தாகவேண்டும்.” என்றவர் அண்ணா.
*
இலட்சியத்துக்காகவும். அந்த இலட்சியத்தை அடைய உதவும் கருவி போன்ற கட்சிக்காகவும், தன் சொந்த நலனையும், உயர் பதவியையும் வெறுத்து ஒதுக்கும் வீரமும், கஷ்ட நஷ்டம் ஏற்கும் சகிப்புத் தன்மையும் ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால், அவரைத் தலைவராகக் கொண்ட கட்சியும், அதனைச் சார்ந்துள்ள மக்களும், முன்னேற்றமடைய முடியுமென்பது திண்ணம். -1947-ல் திராவிடப் பண்ணை வெளியிட்ட ‘வர்ணாஸ்ரமம்’ நூலில் அண்ணா எழுதிய குறிப்பு.
*
ஆஸ்திகம் பேசுகிறவர்களைக் கையாள, அவர்கள் பேசும் கதாகாலட்சேபமே போதுமானது. ஆரிய மத உபதேசம் அறவே ஒழியவேண்டுமானால் நாமும் மக்கள் மத்தியில் கதாகாலட்சேபங்கள் செய்ய வேண்டும்.
பெண்களுக்கு சாஸ்திரங்கள் கொடுத்த தொல்லைகள், செய்த கொடுமைகளைப் பேசுங்கள். அவர்கள் பட்ட கஷ்டத்தைச் சொல்லுங்கள். அதன் பின் நடக்குமா புராணப் புரட்டுக்கள். – ‘போராட்டம்’ 1953, பகுத்தறிவுப் பண்ணை வெளியீடு.
*
“முந்தைய தலைமுறையில் செய்யப்பட்டவைகள் எல்லாம் தொடந்து வர வேண்டும் என்று முடிவு செய்தால், நாட்டில் மக்களின் வாழ்க்கை அமைப்பும், பொருளாதார முன்னேற்றமும் ஒரு கோணத்திலேயே நடைபோட்டுக்கொண்டிருக்கும். மேம்பட்டவர்கள் மேலும் மேம்படவும், தாழ்ந்தவர்கள் மென்மேலும் தாழவும்தான் நேரும்.” – அறிஞர் அண்ணா.
*
“இலக்கியங்களிலே பற்பல மூட நம்பிக்கைகள் புகுந்து, பொய்மை மலிந்து, மக்கள் கருத்தைப் பாழாக்குகிறது. தொல்காப்பியத்தில் இடைச்சொருகல் உண்டு.
வீர சோழியமும், நன்னூலும் வடமொழி இலக்கியத்தைத் தழுவியவை. பார்ப்பனரை வெண்பாவாலும், அரசரை ஆசிரியப்பாவாலும், வணிகரைக் கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப்பாவாலும் பாட வேண்டுமாம்.
இது இலக்கிய வழக்கற்றது. ஆனால், இலக்கணத்தில் விதியாகப் புகுந்துள்ளது. தமிழ் இழிந்தது எதனான்? வடமொழி இலக்கணத்தில் ஆழ்ந்து தமிழ்மொழி இலக்கணத்தைப் புறக்கணித்ததாலன்றோ – ஆரியமாயை, 1947.
– கார்த்திக் புகழேந்தி