ஆடல் கலைக்கு அழகு சேர்த்த ஆரணங்கு!

இழப்பதற்கு ஒன்றுமில்லை என்று சொல்லிக் கொண்டாலும், பல பெண்கள் மனித உருவில் உள்ள விலங்குகளால், விலங்கிடப்படுகிறார்கள். விலங்கைக் கூட ஒரு ஆபரணமாக அணிந்து கொள்கிற பெண்ணின் அறியாமைதான் ஆணாதிக்கத்தின் முதல் வெற்றி.

விலங்கொடிக்க யாராவது வருவார்கள் எனக் காத்திருப்பதில் பயனில்லை. வீரஞ்செறிந்த உள்ளத் திறத்தினால், விலங்குகளை உடைத்து விடுதலையாக வேண்டும். பெண் விடுதலை ஏட்டில், பாட்டில் இருந்தால் மட்டும் போதாது. நாட்டில் இருக்க வேண்டும்.

அடுத்தவர் ஆட்டி வைக்கும் பதுமைகளாகவே ஒருகாலத்தில் பெண்கள் இருந்தார்கள். ஆட்டி வைப்பவர்கள், ஆடுபவர்களின் உரிமைகளை ஆரம்பத்திலேயே பறித்து விடுகிறார்கள்.

ஆனால், அடுத்தவர்கள் ஆட்டி வைக்காமல், அந்தக் காலத்திலேயே ஆடுவதை தனது உரிமையாகப் பயின்று, ஆடல் கலைக்கே அழகு சேர்த்தார் ஒருவர்.

ஆடல் கலையின் இலக்கணம் எழுதிய ‘நடன தொல்காப்பியர்’ அந்த அயல்நாட்டுப் பெண்மணி. அவர்தான் ஏஞ்சலோ இசடோரா டங்கன் (Angela Isadora Duncan).

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம், சான்பிரான்சிஸ்கோவில் பிறந்த இந்த நடன மயிலின் தோகையை யாரும் பறிக்கவில்லை. ஆனாலும், இளமையிலேயே இசடோரா டங்கன் இழந்தவை ஏராளம்.

3 வயதாகும்போது, அவரது பெற்றோர் மணமுறிவு ஏற்பட்டு பிரிந்து விட்டனர். தனிமையோடு கைகோர்த்துக் கொண்டு, நடனக்கலையில் தனிப்பெரும் சிறப்புப் பெற்றார் இசடோரா டங்கன்.

தந்தை பிரிந்துபோன நிலையில், ஒரு கையில் தாயாரையும், மற்றொரு கையில் வறுமையையும் பிடித்துக் கொண்டு, Oakland-க்கு குடிபெயர்ந்தார் இசடோரா டங்கன்.

அங்குள்ள குழந்தைகளுக்கு இசைப் பயிற்சி அளித்து, அதன்மூலம் கிடைத்த வருமானத்தில், இறுகப் பற்றியிருந்த வறுமையை விரட்ட முயற்சித்தார்.

நியூயார்க்கில் உள்ள Augustin Daly’s நாடக நிறுவனத்தில் நடனக்கலைஞராக சேர்ந்தார். ஆனால், அந்த வேலையும் நீண்ட நாள் நிலைக்கவில்லை.

அங்கிருந்து லண்டன் சென்ற அவர், பாலே நடனத்தை விடுத்து, புதுமையான நடன அசைவுகளையும், நடன முறைகளையும் அறிமுகப்படுத்தினார். இசடோரா டங்கன் புகழ்பெறத் தொடங்கினார்.

ஜெர்மனியின் பெர்லின் நகரில் 1904 -ஆம் ஆண்டு முதல் நடனப் பள்ளியைத் தொடங்கினார். ஆடல் கலையில் புகழை அள்ளிக் குவித்தார்.

ரஷ்யாவின் அரசியல் சமூக கோட்பாடுகளை மிகவும் நேசித்த இசடோரா டங்கன், அங்கு பயணம் மேற்கொண்டார். அரசியல் தத்துவமான பொதுவுடமைக் கொள்கைகள் அவரை ஈர்த்தன. 

ஒவ்வொரு காலகட்டத்திலும், ஏதாவது ஒரு தடை. அதைத் தாண்டித் தாண்டித்தான் பெண் சமூகம் முன்னேற வேண்டி இருக்கிறது.

நடனத்துக்கு இலக்கணமாகத் திகழ்ந்த இசடோரா டங்கனும் இத்தகையத் தடைகளைத் தாண்டித்தான் வர வேண்டி இருந்தது.

நடனம், வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. அது புரட்சிகரமான சிந்தனைகளையும், புதுமையான எண்ணங்களையும் மக்களின் மனதில் புகுத்தும் ஒரு உத்வேகம் என்பதை தனது நடனத்தின் மூலம் நிரூபித்தார்.

ஐரோப்பா முழுவதும் தன் நடனத்தை, நடனக்கலைஞர்களுக்கு பாடமாக்கினார்.

பிரான்சில் காரில் சென்று கொண்டிருந்தபோது, கழுத்தில் அணிந்திருந்த கழுத்துத்துண்டு (Scarf), கார் டயரில் சிக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில், உயிர் அடங்கிப் போனார் இசடோரா டங்கன்.

காலம் அளித்த சோகமான முடிவு. ஆனாலும், சாதித்துவிட்டுதான், தன் கடைசி சுவாசத்தை நிறுத்திக் கொண்டது இந்த நடன மயில்.

காலம் எல்லோரையும் ஒரே தராசில் நிறுத்தி எடை போடுவதில்லை. சிலரை வாழ வைக்கிறது. பலரை வாட வைக்கிறது. ஆனால், தன்னம்பிக்கை தான் காலத்தைக்கூட நமக்கு காவலாளி ஆக்கிவிட்டுப் போகிறது.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டு கிடக்கும் மனிதர்களுக்கு இசடோரா டங்கன்கள் கற்றுக்கொடுக்கும் பாடமும் இதுதான். நடனமும் இதுதான்.

(உலகப்புகழ் பெற்ற நடனக் கலைஞர் இசடோரா டங்கன் நினைவு நாள் (செப்டம்பர் 14, 1927) இன்று)
✍️ லாரன்ஸ் விஜயன்

Comments (0)
Add Comment