- மு.க.ஸ்டாலினின் கல்லூரிக் கால அனுபவம்:
“கட்சி மேடைகளில் அப்பவே பேசுவேன். நாடகம் போடுவேன். அந்த வருஷம் மட்டும் தேர்தல் பிரச்சாரத்துக்காக 40 நாடகங்கள் போட்டோம். 40-வது நாடகத்தோட ஒரு வெற்றி விழாவும் நடந்தது.
விழாவுக்கு தலைமை அப்போதைய முதல்வர் கலைஞர் (அப்பா). முன்னிலை – எம்.ஜி.ஆர்.
முரசே முழங்கு நாடகத்தில் நடிச்சபோது எனக்கு அப்பா மோதிரம் போட்டு வாழ்த்த, எம்.ஜி.ஆர். சர்டிஃபிகேட் தந்து பாராட்டினார்.
எனக்கு எம்.ஜி.ஆரை ரொம்ப ரொம்பப் பிடிக்கும்! நான் ரொம்பச் சின்னவனா ஸ்கூல் படிக்கிற வயசுல இருந்தே முதல்நாள், முதல் ஷோ, முதல் டிக்கெட் எடுத்து எம்.ஜி.ஆர். படங்களைப் பார்த்துடுவேன்.
இதிலே என்ன விசேஷம்னா நான் இப்படிப் பார்க்கிறேன்னு எம்.ஜி.ஆருக்கும் தெரியும்கிறதால் அவரும், தன் படம் வந்ததுமே ஏதோ பெரிய மனுஷன்கிட்டே விசாரிக்கிற மாதிரி எங்க வீட்ல என்னைப் பார்க்கிறப்போவோ அல்லது போன்லேயோ,
“படம் பார்த்துட்டியா?… எப்படி இருக்கு?..”ன்னு ரொம்ப ஆர்வமா விசாரிப்பார்!.
இது எங்களுக்குள்ள ரெகுலரா நடக்கும்!
சில தடவை அவருடைய வீட்டுக்கே என்னைக் கூப்பிட்டு வச்சும்கூட பேசுவார். பெரியப்பான்னுதான் நான் அவரைக் கூப்பிடணும் – இல்லேன்னா கோவிச்சுப்பார்.
ஒரு தடவை நான் ஏதோ பேசறப்போ அவரை ‘சார்’ போட்டுப் பேசிட்டேன்.
அவ்வளவுதான் மறுநாள் எங்க வீட்டுக்கு வந்தப்போ, “இவன் என்னை நேத்திக்கு ‘சார்’ போட்டுப் பேசிட்டான்”னு ஜாலியா எங்கப்பாகிட்டே கம்ப்ளெய்ண்ட் பண்ணிட்டார்!
ஒரு தடவை ‘பறக்கும் பாவை’ படத்துக்கு முதல் நாள் மூணு ஷோவுக்குமே டிக்கெட் கிடைக்கலே.
வழக்கம் போல “என்ன புதுப் படம் வந்திருக்கே. பார்த்துட்டியா?” எம்.ஜி.ஆர். கேட்க, நான் தயங்கி “இல்லே”ன்னேன்.
“ஏன் பார்க்கலே”ன்னு ஆச்சரியத்தோட விசாரிச்சார் எம்.ஜி.ஆர்.
“இல்லே முணு ஷோவுக்கும் டிக்கெட் கிடைக்கலே. நான் இன்னிக்குப் பார்த்துடுவேன்”ன்னு சொன்னேன்.
அவரோட ‘ஒளி விளக்கு’ படத்தை மட்டும் ஏழெட்டு முறை பார்த்திருக்கேன்.. அந்தப் படம் ரொம்பப் பிடிக்கும்.
இப்படித்தான் ஒரு முறை எம்.ஜி.ஆரோட ‘புதிய பூமி படம் பார்க்க நானும் மௌலானா அப்துல் ஹைன்னு ஒரு நண்பனுமா குளோப் தியேட்டர் போயிட்டு சைக்கிள்ல டபிள்ஸ் வந்துட்டிருந்தோம்.
அப்போ டபுள்ஸ் போறது சட்டப்படி தப்பு. அதனால் ஒரு போலீஸ்காரர் பார்த்துட்டு எங்களைப் புடிச்சு மௌண்ட் ரோடு ஸ்பென்ஸர் போலீஸ் ஸ்டேஷன்ல வச்சுட்டார்.
சார்ஜ் சீட்டும் போட்டாங்க! எங்க பேர், எங்கப்பா பேர், அவங்க எங்க வேலை பார்க்கிறாங்கன்னு வரிசையா கேட்டு எழுதிக்கிட்டாங்க.
நானும் அவர் கேட்கக் கேட்க அப்பா பேர் சொல்லி, கோட்டையில் அவர் வேலை செய்றாருன்னும் சொன்னேன். என்னவா செய்றாருன்னு கேட்டாங்க… நான், “அப்பா PWD மினிஸ்டர்!”னு சொல்ல,
“ஐயையோ.. இதை முதல்லேயே சொல்றதுக்கு என்ன.?”ன்னு அவங்க பதறிட்டாங்க….
“சார்… அதெல்லாம் நீங்க ஒண்ணும் அப்பாவுக்காக பண்ண வேண்டாம். தப்பா வந்ததாலேதானே இங்கே கூட்டி வந்தீங்க… நீங்க சட்டப்படி பண்ணிக்கங்க”ன்னு சொன்னேன்…
ஆனா அவர் கேட்கலே… வீட்லேயே கொண்டு வந்து விட்டுட்டுப் போயிட்டாங்க…
எம்.ஜி.ஆர். படம் பார்க்க இப்படி நிறைய பண்ணுவோம்!… எனக்குப் பிடிச்ச ஹீரோ கையில், என் நடிப்புக்கு நான் சர்டிஃபிகேட் வாங்கப் போறேன்னு சந்தோஷத்தோட அவர்கிட்டே அன்னிக்கு சர்டிஃபிகேட் வாங்கினேன்.”
நன்றி: வி.ஐ.பி.க்களின் காலேஜ் கேம்பஸ் நூலிலிருந்து ஒரு பகுதி.