சங்க இலக்கியங்களில் மகளிர் விளையாட்டுக்கள்!

சங்க காலத்தில் மக்கள் உடல் நலனைப் பாதுகாப்பதற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்துள்ளனர். முதியோரும், இளையோரும் தங்களது ஓய்வு நேரத்தை விளையாடிக் கழித்துள்ளனர்.

இந்த விளையாட்டின் வாயிலாக நல்ல உடல் நலமும் மனநலமும் பெற்று மகிழ்வுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. விளையாட்டுகள் சங்க கால மக்களின் வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்திருந்தது.

விளையாட்டு என்னும் சொல்லாட்சி தொல்காப்பியத்திலேயே காணப்படுகிறது.

“செல்லம் புலனே புணர்வு விளையாட்டென்று அல்லல் நீத்த உவகை நான்கே” என்கிறார். இதில் உவகை என்னும் மெய்பாட்டின் தோற்றக் காரணங்களுள் ஒன்றாக விளையாட்டைக் கூறுகிறார்.

இவ்விளையாட்டுக்களின் அவசியம் பற்றி கே.சுப்பிரமணியம் பிள்ளை குறிப்பிடுகையில், “உடலை கட்டுடன் காப்பதற்கும், அறிவைத் தெளிவு பெறச் செம்மை செய்வதற்கும், மனவமைதி பெறுவதற்கும் மகிழ்ச்சியடைவதற்கும் விளையாட்டுக்கள் பெரிதும் துணை புரிகின்றன” என்கிறார்.

சங்கப் பாக்கள் வழி ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலம் சார்ந்த பல விளையாட்டுகளை ஆடியுள்ளனர்.

கடல் சார்ந்த நிலப் பகுதியாகிய நெய்தல் நிலத்தில் வாழ்ந்த பரதவ மக்கள் பலவித விளையாட்டுக்களில் ஈடுபட்டுள்ளனர். அதிலும் ஆண்களைவிட மகளிர் அதிகமான  விளையாட்டுகளில் ஆடித் திளைத்துள்ளனர்.

ஓரை விளையாட்டு:

ஓரை விளையாட்டு பஞ்சாய் எனப்படும் ஒருவகை கோரையால் பாவைச் செய்து விளையாடும் ஆட்டமாகும்.

“ஓரை-பஞ்சாய்ப் பாவை கொண்டு மகளிராடும் விளையாட்டு” என பின்னத்தூர் நாராயணசாமி விளக்கம் தருகிறார். “பஞ்சாய் என்பது ஒருவகை கோரைப்புல்” என்று பி.எஸ். சாமி தெரிவிக்கிறார். 

இக்கோரைப் புல்லை கிழித்துக் கசக்கினால் மெல்லிய பஞ்சு போன்ற நார் கிடைக்கும். இதனை

“பஞ்சாய்க் கோரை பல்லின் சவட்டி

புணர்கார்ப் பெய்த புனைவு இன் கண்ணணி (பெரும் 217:218)

பாடலில் அறியலாம். இக்கோரையின் பஞ்சு போன்ற அமைப்பின் காரணமாக பஞ்சாய் அல்லது பைஞ்சாய் எனப் பெயர் வந்தது என்றே கூறலாம்.

“ஓரையாட்டம் என்பதற்குக் கைகளை கோர்த்துக்கொண்டு வட்டமாக நின்று பாடிக்கொண்டே ஆடும் ஒரு பழங்காலத்து ஆட்டம்” என்று சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் கலைச் சொல்லகராதி விளக்கமளிக்கிறது.

இவ்வோரை ஆட்டத்தை மீனவ மகளிர் கடற்கரையில் ஆடிய நிலைப்பற்றி விளக்கி நிற்கும் நெய்தல் பாடல்கள் பல உள்ளன. அவை

“ஓரை மகளிர் (குறள் 401:3) ஓரை மகளிர் ஓராங்கு ஆட்ட (குறள் 316 : 5) ஒள் இழை மகளிரோடு ஓரையும் ஆடாய் (நற் 151 : 1) ஓரை ஆடினும் உயங்கும் நின் ஒளி (அகம்  60 : 11) அடிகள் உணர்த்துகின்றன.

ஓரையாடிய பாவை மீது மகளிர் பேரன்பு கொண்டிருந்தனர் என்பதை (ஐங் 155 : 4-5) பாடல் வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

சிற்றில் இழைத்தல்:

மாலை வேளையில் மகளிர் மணலால் சிறிய வீடுகளைக் கட்டி விளையாடுவது சிற்றில் இழைத்தல் ஆகும்.

இன்றைக்கும் கடற்கரைக்கு மகளிர் சென்றால் ஈரமணலைக் கொண்டு வீடுகட்டி விளையாடுவது இயல்பாகவே இருந்து வரும் விளையாட்டாகும்.

இவ்விளையாட்டு பரதவ இளம்பெண்கள் பலர் சேர்ந்து மாலைப் பொழுதில் விளையாடி உள்ளனர். சான்றாக நற்றிணைப் பாடலில் மகளிர் பலர் சேர்ந்து சிற்றில் இழைத்து விளையாடினர்.

விளையாடும் போது கட்டிய சிற்றிலில் பல மலர்களை அணிந்து அழகும் செய்தனர்.

“வரிபுனை சிற்றில் பரி சிறந்து ஓடி” (நற் 123:8) மகளிரின் இயல்பான குணமே எந்தவொன்றையும் அழகுப்படுத்தி பார்க்கும் பண்புடையவர்கள்.

‘வரிபுனை சிற்றில்’ என்பதால் கோலமிட்டும் மலர்களை மற்றும் கடற்கரையில் மலிந்து கிடக்கும் சோழிகளால் அழகு செய்திருப்பார்கள் என்றும் கொள்ளலாம்.

சிற்றில் இழைத்து விளையாடும் மகளிர் தம் தோழியருள் காலை வேளையில் விளையாடினார்கள் என்பதனை (நற் 23 : 5-6) பாடலில் மூலமாக உணர முடிகிறது.

காலை வேளையில் சிற்றில் புனைந்து விளையாடும் மகளிர் அதில் சோறு சமைத்தும் மகிழ்ந்துள்ளனர்.

இதனை சிற்றில் இழைத்தும் சிறுசோறு குவை இயும் (அகம் 110 : 6) இந்த விளையாட்டு விளையாடும் இடத்திற்கு அவரவர் காதலர்களும் வருவது உண்டு  (குறுந் 326 : 2-3) என்பதை (அகம் 110 : 10-14), (அகம் 230 : 8-10) என்பதை இப்பாடல் வரிகள் உணர்த்துகின்றன.

இவ்வாறு மகளிர் விளையாடும் சிற்றில் விளையாட்டு மகளிரின் பொழுதுபோக்காக இருப்பதோடு மட்டுமல்லாமல் தன் காதலனைத் தேர்வு செய்யும் களமாகவும் இருந்திருக்கின்றன.

வண்டல் பாவை:

நீரோட்டங்களில் படிந்து கிடக்கும் மணலை அலைத்து விளையாடும் விளையாட்டு. “மணலெடுத்து பாவை செய்து விளையாடுவது” இவ்விளையாட்டின் சிறப்பாகும்.

இவ்விளையாட்டு செய்யப்படும் பாவை மண்ணாலும் வண்டலாலும் செய்யப்படுவது என்று பி.எஸ். சாமி குறிப்பிடுகிறார்.

நெய்தல் நிலப் பரதவ மகளிர் வண்டல் பாவையை மண் மற்றும் களிமண்ணால் செய்து சோலையிடத்தும் புன்னை மரத்தின் நிழலில் அலைவந்து மோதுகின்ற கடற்கரை பகுதிகளிலும் வைத்து விளையாடினார்கள்.

“பரதவ இள மகளிர் கடற்கரையில் ஞாழல் மரத்தின் நிழலில் வண்டற் பாவை வைத்து விளையாடினார்கள். விளையாடும் போது அப்பாவையின் மீது மணம் மிக்க ஞாழல் உதிர்ந்து கொங்கையில் படிந்தது” என்று (நற் 191 : 1-4) வரிகள் விளக்கி நிற்கின்றன.

இதிலிருந்து பாவையானது ஈரக்களிமண்ணால் செய்யப்பட்டனர் என்பதும், பூக்கள் மார்பில் படியும் அளவிற்கு பாவை பெரிதாக செய்யப்பட்டது என்பதும் தெரிகிறது. வண்டல் பாவையை களிமண்ணால் செய்ததோடு மட்டுமல்லாமல் மணலையும் பயன்படுத்தினர்.

சான்றாக தலைவி ஒருத்தி கடற்கரையில் வண்டற்பாவை செய்து விளையாடிக் கொண்டிருக்கும்போது கடலலை அப்பாவையை கவர்ந்து சென்றது.

அதனால் கோபமடைந்த தலைவி நுண்ணிய மணற்பொடியைக் கடலில் வீசினாள். இதனை (ஐங் 124 : 2-3) என்ற வரிகள் புலப்படுத்துகின்றன.

மணலை தூக்கி வீசிவிட்டு பெருவருத்தத்துடன் அவ்விடத்தை விட்டு செல்கின்றனர்.

இதிலிருந்து அவ்விளையாட்டின் மீதுள்ள ஈடுபாட்டையும் பாவையின் மீதுள்ள அன்பையும் புலப்படுத்துகிறது. இவ்விளையாட்டின் போது அரும்பின் மலர்களை அணிவித்து மகிழ்ந்தனர் என்பதை (குறுந் 243 : 1-3) காண முடிகிறது.

அலவனாட்டம்:

அலவனாட்டம் என்பது அலவன் போல ஆடுவது இல்லை. அலவனைப் பிடித்து மகளிர் ஆடும் விளையாட்டு. நீர்நிலைகள், கடற்கரைப் பகுதியில் வளையமைத்து வாழக்கூடிய ஒரு சிறு உயிரி.

பொதுவாக இந்நிலத்து மகளிர் கடற்கரை ஓரத்தில் ஒளிந்திருக்கும் அலவனைப் பிடித்து மணல் அடர்ந்த கடற்கரையிலும் புன்னை மரத்து நிழலிலும் விளையாடுவார்கள்.

அகநானூறு பாடலில் கடல் மணற்பரப்பில் தலைவி அலவன் ஆடிய சிறப்பினை  (அகம் 280 : 2-3) வரிகள் புலப்படுத்துகின்றன.

மகளிருக்கு அஞ்சி அலவன் வளையிலிருந்து வெளியே வராத நேரங்களில் மறைவாகத் தங்கியிருக்கும் வலையில் கையைவிட்டு எடுத்து ஆர்வத்துடன் விளையாடினார்கள் என்பதை (அகம் 20 : 14-16)-ல் உள்ளது.

நெடுநேரமாக விளையாடிய மகளிர் மற்றும் நண்டின் வருத்தத்தை கடல் அலைகள் நீக்கின. இதனை (குறுந் 316 : 5-7) வரிகள் உணர்த்துகின்றன.

நண்டு குளிர் நீரில் வாழும். ஆகையால் வெயில் ஏறாத காலை, மாலை நேரத்தில் கரைக்கு வரும். அதனால் அலவனாட்டம் காலை மாலை வேளையில் நடைபெற்றிருக்க வேண்டும்.

நீராடல் (அலையொடு விளையாடல்):

நெய்தல் பாடல் வழி பரதவப் பெண்களின் பொழுதுபோக்கு இடமாகவும் விளையாடும் இடமாகவும் கடற்கரை விளங்கியுள்ளது.

இந்த மகளிர் கடலின் நடுப்பகுதியில் அலை எழும்பி சுருண்டு சுருண்டு வந்து கரைமோதும் அலைகளின் அழகைப் பார்த்து ரசிப்பதும் கால் நனைப்பதும் எதிர்த்து உதைப்பதும் நீராடுவதாக நெய்தல் நில மகளிர் விளங்கியுள்ளனர்.

நற்றிணைப் பாடலில் தலைவி கடலிலே தோழியருடன் நீராடி மகிழ்ந்துள்ளார். இதனை

“வெண்தலைப் புணரி ஆயமொடு ஆடி” (அகம் 20 : 8) மணல் நிறைந்த கடற்கரையில் பலவிதமான விளையாட்டில் ஈடுபட்ட மகளிர் உடலில் மிகுதியாக மணல் படிந்து இருக்கும் அம்மணலைப் போக்குவதற்கும் களைப்பை நீக்குவதற்கும் கடலில் இறங்கி விளையாடி மகிழ்ந்தனர்.

ஆய்வு முடிவாக:

பரதவக் குடும்பங்களில் ஆண்கள் தொழில் சார்ந்த பணிகளில் முழுமையாக ஈடுபடுவர். மீன்பிடித்தல், உப்பு விளைவித்தல், பிடித்து வந்த மீன்களைப் பகுத்துக் கொடுத்தல் என உடல் உழைப்பு அதிகம் இருக்கும்.

எனவே அவர்கள் அதிகமான விளையாட்டுக்களில் ஈடுபாடுபட்டதற்கானச் சான்றுகள் இல்லை.

என்றாலும் மகளிர் விளையாட்டின் போது காதலன் (தலைவன்) கூட இருந்ததற்கான குறிப்புகள் உள்ளன.

இவ்வாறான விளையாட்டிற்கிடையே உள்ள நட்பே தலைவன் தலைவி களவு வாழ்விற்கும் வித்திட்டது எனலாம்.

மற்ற நிலங்களில் வாழ்க்கை முறையானது புதிது புதிதாகப் பயிரிடல், களையெடுத்தல், ஆடுமாடு மேய்த்தல் என பல பணிகள் பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப மாறி மாறி வருவதால் வாழ்வில் சலிப்பு ஏற்படாது.

ஆனால் நெய்தல் நிலப் பெண்களின் வாழ்வானது ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது.

இதிலிருந்து விடுபட்டு மனமகிழ்வு மற்றும் புத்துணர்வு பெற உதவியவை விளையாட்டுக்களே ஆகும்.

****
முனைவர். த.சுபஜா, விருந்து நிலை விரிவுரையாளர்,

சென்னைப் பல்கலைக்கழகம், மெரினா வளாகம்.

Comments (0)
Add Comment