சென்னை தேனாம்பேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசியபோது, “சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களை போல ஒழிக்க வேண்டும்” என்று பேசினார்.
இக்கருத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் இந்தியாவெங்கும் பலர் கருத்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் சனாதனம் குறித்து பேசினார். அப்போது, “உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டிக் காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது.
சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கைப் பிடுங்கி விடுவோம்.
எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது” எனக் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே இதுகுறித்து பேசிய பெண் சாமியார் ஒருவரும் பா.ஜனதா எம்.பி.யுமான சாத்வி பிரக்யா, “சனாதனத்தை யாராலும் ஒழிக்க முடியாது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் பிரகாஷ்ராஜ் போன்றவர்கள் கதாநாயகர்கள் அல்ல, நாட்டுக்கு எதிராக பேசும் வில்லன்கள்.
சனாதன தர்மத்தை தொழுநோய், மலேரியா, எய்ட்ஸ், டெங்கு என்று சொல்பவர்கள், அந்த நோய்களால் பாதிக்கப்பட வேண்டும. இது தான் கடவுளிடம் எனது வேண்டுதல்” எனக் கூறியுள்ளார்.