ஐரோப்பிய செவ்வியல் மரபு இசை ஒரு கட்டத்தில் “ரொமாண்டிக்” எனப்படும் உணர்வுபூர்வமான இசைப் படிவத்துக்கு மெல்ல மாறியது.
அந்த மாற்றத்துக்கு முக்கியமான காரணம் லுத்விக் வான் பீதோவன் என்னும் இசை மேதை. ஆமடியஸ் மொசார்ட் வடிவமைத்த இசைப்பாதையில்தான் அவரும் முதலில் பயணம் செய்தார். ஆனால் மெல்ல மெல்லத் தன் பாணிக்கு மாறினார்.
ஜெர்மனியின் பான் நகரத்தில் 1770ம் வருடம் டிசம்பர் 16ம் தேதி பிறந்தவர் பீதோவன். பீதோவன் என்பது குடும்பப்பெயர். தத்தா, அப்பா இருவருமே இசைக் கலைஞர்கள்தான். அப்பா இளம் இசைக்கலைஞர்களுக்கு வயலின், பியானோ வகுப்புகளை எடுத்தவர்.
அந்த காலகட்டத்தில் மொசார்டின் அப்பா தன் மகனை எப்படி பாடுபட்டு புகழ்பெற்ற குழந்தை இசைமேதையாக ஆக்கினார் என்பதை உணர்ந்திருந்த பீதோவனின் தந்தையும் தன் மகனை அப்படி உருவாக்கத் தீர்மானித்தார்.
அதற்காகச் சற்றுக் கடுமையாகவும் நடந்து கொண்டார். கால் கடுக்க நின்றபடி வயலின் மற்றும் பியானோவை மணிக்கணக்கில் சிறுவன் பீதோவனை வாசிக்கச் சொல்லுவார்.
அவன் கால் வலி பொறுக்க முடியாமல் அழுதால் பிரம்படிதான் விழும். (மைக்கேல் ஜாக்ஸனின் தந்தையும் அப்படித்தான்.
தன் பிள்ளையின் குழந்தைப்பருவ இனிய சந்தோஷங்களை பலி கொடுத்துத்தான் அவரும் ஜாக்ஸனை இசை மேதை ஆக்கினார். அதைப் பாராட்டுவதா அல்லது விமர்சிப்பதா?)
தன்னுடைய ஏழாவது வயதில் தன் முதல் இசைக்கச்சேரியை நடத்தினான் சிறுவன் பீதோவன்.
ஆனால் அதற்காக ஓட்டப்பட்ட போஸ்டர்களில் அவன் வயது ஆறுதான் என்று குறிப்பிட்டார் தந்தை. சிறுவன் பீதோவனின் இசைத்திறமையைக் கண்டு பான் நகரத்து ரசிகர்கள் வியந்தார்கள்.
அதற்குப் பிறகு கிறிஸ்டியன் நீஃப் என்கிற ஒரு இசைக் கலைஞரிடம் உதவியாளராக பீதோவனைச் சேர்த்தார் தந்தை.
அதை பீதோவனின் வாழ்க்கையில் திருப்புமுனை என்றே சொல்லலாம்.
ஏனென்றால் நீஃபும் ஒரு இசை மேதைதான். அவர்தான் பியானோ இசை வடிவங்களை கம்போஸ் செய்வது எப்படி என்று பீதோவனுக்குச் சொல்லிக் கொடுத்தார்.
பீதோவனிடம் இருந்த மேதைதன்மையை அவர் கண்டு கொண்டதால் நிறைய வாய்ப்புகளையும் பெற்றுக் கொடுத்தார்.
அரசியல், கலை, இலக்கியம், இசை ஆகிய துறைகளில் அப்போது பான் நகரத்தில் பெரும் மறுமலர்ச்சியும், புரட்சியும் நடந்து கொண்டிருந்தது.
அதனால் ஆட்கொள்ளப்பட்ட பீதோவனின் இசை நெஞ்சத்திலும் புத்தம் புதிய இசை வெள்ளங்கள் பொங்கிப் பிரவாகித்தன.
இலக்கியங்களின் பரிச்சயமும் அவருக்குப் புதிய தரிசனங்களைக் கொடுத்தன. அவை அவருடைய படைப்புத் திறனைக் கூர் தீட்டின.
ஐரோப்பிய நகரங்களில் ஆஸ்திரியாவின் வியன்னாதான் இசைக்குத் தலைநகரமாக இருந்தது. அங்கே தன்னுடைய 17வது வயதில் மனதில் ஏகப்பட்ட கனவுகளுடன் பயணமானார் பீதோவன்.
தன்னுடைய மானசீக குருவான மொசார்டை சந்தித்து அவரிடம் இசை பயில வேண்டும் என்பது அவருடைய லட்சியமாக இருந்தது.
இருவரின் சந்திப்பும் எப்படி நடந்தது, மொஸார்ட் அவரிடம் கடுமையாக நடந்து கொண்டு புறக்கணித்தாரா என்பதைப் பற்றியெல்லாம் முரண்பட்ட விவரங்களே கிடைக்கின்றன.
ஆனாலும் தன்னுடைய தாயின் உடல்நிலை மோசமான செய்தியைக் கேட்ட பீதோவன் உடனே வியன்னா பயணத்தை ரத்து செய்துவிட்டு பான் நகரம் திரும்பினார்.
ஊர் திரும்பிய ஒரு சில நாட்களிலேயே அம்மா இறந்து போனார். பீதோவனுக்கு இரண்டு இளைய சகோதரர்கள். வாழ்க்கையில் திருப்பங்கள் நண்பர்களால் ஏற்படும். பீதோவனுக்கும் நல்ல நண்பர்கள் கிடைத்தார்கள்.
அவருடைய இசை மேதைத்தன்மையை உணர்ந்து கொண்ட அவர்களும் இருந்தார்கள் மனைவியை இழந்து குழந்தைகளையும் சமாளிக்க முடியாத தந்தை குடிப்பழக்கத்துக்கு அடிமையானார்.
குடும்பத்தைக் கவனிக்க அவருக்கு மனநிலையும், அவகாசமும், வருமானமும் இல்லை.
அந்தப் பொறுப்பு இளைஞனான பீதோவனின் தலையில் விழுந்தது. அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவரால் பான் நகரத்தை விட்டு நகர முடியவில்லை.
அப்போதுதான் பீதோவன் எதிர்பாராதது நடந்தது. அவருடைய காது கேட்கும் திறன் மெதுவாகக் குறைந்து கொண்டே வந்தது. அதை அவர் முதலில் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. சீக்கிரமே சரியாகி விடும் என்று நினைத்தார்.
வாழ்க்கையில் அற்புதங்கள் பல நேரங்களில் நல்ல நண்பர்களால் நிகழும், பீதோவனுக்கும் பள் ராஜ சபைகளில் பீதோவனுக்கு இடம் கிடைக்கச் செய்தார்கள்.
பீதோவனின் தந்தை இந்த காலகட்டத்தில் மிக மோசமான குடிகாரராக மாறினார். அவருக்குக் கிடைக்க வேண்டிய பென்ஷன் தொகையை பீதோவனின் கைக்கு கிடைக்குமாறு சட்ட பூர்வமான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள் நண்பர்கள்.
பீதோவனுக்கும் ராஜ சபைகளில் கச்சேரிகள் செய்யும் வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பித்தன. மொஸார்டின் பல இசை வடிவங்களை அப்போது மேடைகளில் இசைத்தார் பீதோவன். பான் இளவரசர் அவரை பான் நகரத்துக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனாலும் பீதோவன் வியன்னாவில் இசை கற்பதுதான் முக்கியம் என்று தீர்மானித்து அங்கேயே தங்கினார். இதற்கு விலையாக அவர் பான் இளவரசர் கொடுத்து வந்த சம்பளத்தை இழக்க வேண்டியிருந்தது.
ஆனாலும் ஜெர்மனியில் இருந்த பல குட்டிக் குட்டி ராஜாங்கங்களைச் சேர்ந்தவர்கள் பீதோவனின் இசைத்திறமையைக் கண்டுணர்ந்து நிதி உதவி செய்ய முன் வந்தார்கள்.
இடைவிடாமல் பியானோ மற்றும் வயலின் இசையைக் கற்றுக் கொண்டே இருந்தார் பீதோவன்.
தன்னுடைய 23வது வயதில் முதல் பியானோ கம்போஸிங்குளைச் செய்ய ஆரம்பித்தார் பீதோவன். அந்த கான்சர்ட்டோகள் என்றும் அழியாத இசைக்காவியங்களாக நிலைபெற்று விட்டன.
பியானோ டிரையோஸ் ஆஃப் ஓப்பஸ் 1 என்று அழைக்கப்படும் அவருடைய கம்போஸிங்குகள் முதல் முறையாக அச்சிடப்பட்டு வெளிவந்தன. அவை பெரும் வியாபார வெற்றியாகவும் அமைந்தன. ஒரு வருடத்துக்குத் தேவையான வருமானம் ஒரே நாளில் அவருக்குக் கிடைத்தது.
பீதோவனின் இசை வாழ்க்கையில் உச்ச கட்டமான மாபெரும் இசைப் படைப்புகள் அவருடைய இருபத்தி எட்டாவது வயதிலிருந்து வெளிவர ஆரம்பித்தன.
மொசார்டுக்கு அடுத்து அவதரித்திருக்கும் இசை மேதை பீதோவன் என்று இசை விமர்சகர்கள் புகழ ஆரம்பித்தார்கள்.
பீதோவனின் முப்பதாவது வயதில் அவருடைய புகழ்பெற்ற “மூன்லைட் சொனாட்டா”, “தி கிரியேச்சர்ஸ் ஆஃப் பிராமதீயஸ்” போன்றவை படைக்கப்பட்டன.
ஏகப்பட்ட சிம்பொனிக்களையும் அவர் அப்போது படைத்தார். ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞரின் கச்சேரிக்கு வசூலிக்கப்படும் கட்டணத் தொகையை விட மூன்று மடங்கு அதிகமாக அவருடைய கச்சேரிகளில் டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது. அவருடைய இசைக் கோவைகளை அச்சிட்டு வெளியிட அலைமோதினார்கள் இசைப்பதிப்பாளர்கள்.
பீதோவனின் காது கேட்கும் திறன் இப்போது மிகவும் குறைந்து போக ஆரம்பித்தது. “டின்னிடஸ்” என்று சொல்லக்கூடிய ஒரு காதுப்பிரச்சனை அவருக்கு ஏற்பட்டது பிறகுதான் மருத்துவர்களால் கண்டு கொள்ளப்பட்டது.
காதுக்குள் தொடர்ந்து மணியடிப்பது போல் ஒரு சத்தம் கேட்டுக் கொண்டே இருக்கும் விநோதமான மருத்துவப்பிரச்னை அது, அவரால் மற்றவர்களுடன் பேசக்கூட முடியாத படி அந்தப் பிரச்சனை தீவிரமாக இருந்ததால் யாரையும் சந்திப்பதையே குறைக்க ஆரம்பித்தார் பீத்தோவன். அவருடைய காது கேளாமை நோய்க்கான காரணங்கள் நிறைய சொல்லப்படுகின்றன.
பெண்கள் தொடர்பான மேக நோய், தலைமுடியில் இருந்த விஷத்தன்மை, தைபஸ், இம்யூன் டிஸார்டர் போன்ற காரணங்களாலும் அது ஏற்பட்டிருக்கலாம் என்று மருத்துவர்கள் குழம்பினார்கள்.
தான் விழித்திருப்பதற்காக ஐஸ் தண்ணீரில் தன் முகத்தை அடிக்கடி அமிழ்ந்து எடுப்பது பீத்தோவனின் வழக்கம். அது கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்கள் வேறு சிலர்.
ஆனால், மருத்துவ ஆராய்ச்சிகள் அதிகம் வளராத அந்த யுத்த கால கட்டத்தில் பீதோவனுக்கான சரியான சிகிச்சைகள் கிடைக்கவில்லை என்பதே ஒரு சோகமான விஷயம்தான்.
பீதோவனுக்கு ஆதரவு அளிக்கப் பல பிரபுக்களும் மன்னர்களும் போட்டி போட்டுக் கொண்டு வந்தாலும், யுத்த காலங்களில் அவர்களால் தங்கள் வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியவில்லை.
அது மட்டுமின்றி பீதோவனின் இசை தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்கிற உடைமை எண்ணமும் அவர்களிடம் இருந்தது. பீதோவனின் கலை மனது அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அதனால் ஒரு கட்டத்தில் தன் அடிப்படை வருமானத்துக்காகவே சிரமப்பட்டார் பீதோவன். இதில் காது கேட்க முடியாத பிரச்சனையும் சேர்ந்து கொண்டதால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானார்.
ஐரோப்பாவில் அப்போது நிலவிய போர்ச் சூழலும் நிதி நெருக்கடிக்கு ஒரு காரணம்தான். தன் கம்போஸிங்குகளைக் குறைந்த விலைக்கு விற்கும் சூழல் கூட பீத்தோவனுக்கு ஏற்பட்டது.
மருத்துவர்கள் அவரை அதிக சத்தங்கள் இல்லாத அமைதியான ஆஸ்திரியாவின் ஒரு சிறிய ஊரில் வசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டார்கள். அங்கே சில மாதங்கள் தனிமையாகத் தங்கியிருந்தார் பீத்தோவன்.
இசைத் தொழிலுக்கு மிகவும் அடிப்படையான காது கேட்கும் திறன் தனக்குக் குறைந்து கொண்டே வருவதை அதுவும் அத்தனை சின்ன வயதில், அவரால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.
அது மட்டுமின்றி வாழ்க்கையில் அவருக்கு நேர்ந்த காதல் தோல்விகளின் பாதிப்பும் மனதை ரொம்பவே குதறிப்போட்டிருந்தது.
ஆனாலும் மனதைத் தேற்றிக் கொண்டு தன் மனதின் ஆழத்தில் வடிவங்களைப் படைக்க ஆரம்பித்தார்.
வியன்னாவில் தன் சகோதரன் வீட்டில் தங்கியிருந்து ஒரு கான்சர்ட்டோவை அவர் கம்போஸ் செய்து கொண்டிருந்த போது நெப்போலியனின் படைகள் போட்ட குண்டுகளின் சத்தம் அவரை அச்சத்தில் ஆழ்த்தியது.
இருக்கும் கொஞ் நஞ்ச செவிப்புலனையும் அது நாசப்படுத்தி விடும் என்று அஞ்சிய அவர் பூட்டிய அறைக்குள் இரண்டு காதுகளுக்கும் தலையணையை இறுக்கிக் கொடுத்து படுத்துக் கிடந்தார்.
ஆனால் நாளுக்கு நாள் காது கேட்பது மோசமாகிக் கொண்டே வந்தது. அவருடைய ஒன்பதாவது சிம்பனி இசைக்கப்பட்ட போது அரங்கில் எழுந்த கைதட்டல்களைக் கூட அவரால் கேட்க முடியவில்லை, அவருடைய முகத்தைத் திருப்பி ரசிகர்களை பார்க்க வைத்தார்கள்.
தன் கைகளில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழுதார். பீத்தோவன். உலக இசை வரலாற்றில் எந்த ஒரு இசைக்கலைஞனுக்கும் ஏற்பட்டிராத கொடுமை அது.
தன்னுடைய 41வது வயதில், காது கேட்கும் திறன் முழுவதும் போய் விட்ட நிலையில் ‘தி எம்பரர்” என்கிற பியானோ கச்சேரியை நடத்த முயற்சித்தார் பீத்தோவன். அது தோல்வியில் முடிந்தது.
இசை அரங்கமே அவருடைய பரிதாப நிலையைப் பார்த்து சங்கடப்பட்டது. அவ்வளவுதான், அதற்குப் பிறகு பொது இசை நிகழ்ச்சிகள் எதற்குமே ஒப்புக் கொள்ளவில்லை பீத்தோவன்.
ஆனாலும் ஏறக்குறைய ஒரு தனிமைச் சிறையில் அவருடைய இசை கம்போஸிங்குகள் தொடர்ந்து நடந்தது இசை வரலாற்றில் ஒரு அற்புதம்தான்.
வெளியுலகம் ஓசையற்றதாக இருந்தாலும் அவருடைய உள் உலகத்தில் அற்புதமாக இசைக் கோவைகள் ஒலித்ததை அவரால் கேட்க முடிந்தது என்பது பிரமிப்பான விஷயம்.
இன்றைக்கும் ஜெர்மனியின் பான் நகரத்தில் இருக்கும் பீதோவன் அருங்காட்சியகத்தில் அவர் முயன்று பார்த்த அவருடைய ரசிகர்களும், மருத்துவர்களும் உருவாக்கிக் கொடுத்த நூற்றுக்கணக்கான காது கேட்கும் செயற்கைக் கருவிகள் இருக்கின்றன.
ஆனால் அவை எதுவுமே அவருக்குப் பயன்படவில்லை. ஒருநாள் தன் வீட்டிற்கு நெருங்கிய நண்பர்களையும் ரசிகர்களையும் அழைத்த பீத்தோவன் பியானோவில் அதிரடியான இசையை வாசித்துக் காண்பித்து “அது அழகாக இருக்கிறதா?” என்று பரிதாபமாகக் கேட்ட போது அவர்கள் நெகிழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார்கள்.
பீதோவனுக்காக அவர்கள் ஒரு புத்தகத்தை எழுத ஆரம்பித்தார்கள். பீதோவனின் இசை அவர்களை எப்படியெல்லாம் மெய் சிலிர்க்க வைக்கிறது என்பதை அதில் பதிவு செய்தார்கள்.
அதைப் படித்துத் தன் மனதை ஆறுதல் படுத்திக் கொண்டார் பீத்தோவன். அந்த அருமையான புத்தகத்தின் பெரும் பகுதிகள் கால ஒட்டத்தில் அழிந்து போனது இன்னொரு கொடுமைப் பீதோவனின் வாழ்க்கை முழுவதும் பணம் அவருக்கு வருவதும் போவதுமாகவே இருந்தது.
நோயில் வீழ்ந்த தன் சகோதரனின் மருத்துவத்துக்காகக் கையில் இருந்த காக அத்தனையும் செலவழித்து ஓட்டாண்டி ஆனார். சகோதரனின் மகனை பொறுப்பில்லாத அம்மாவிடம் இருந்து சட்டரீதியாக மீட்பதற்கும் அடுத்து கிடைத்த பணத்தை செலவழித்தார்.
திடீரென்று ராஜசபைகளிலிருந்து அழைப்பு வரும் செல்வார். இசைப்பார். கையில் பணத்தைக் கொண்டு வருவார்.
அதற்காகவே செலவுகள் காத்திருக்கும். காது கேட்கும் திறன் முழுக்கப் போன பிறகு அவர் பல வருடங்கள் வாழ்ந்தாலும் அவை எல்லாமே துயரம் மிக்க காலங்களாகவே இருந்தன.
ஆனாலும் அவருடைய இசை படைக்கும் திறன் மட்டும் குறையவே இல்லை. தனிமை, சுய இரக்கம், பணமின்மை காதல் தோல்விகள், காது கேளாமை எல்லாமே சேர்ந்து அவரைக் குடிப்பழக்கத்தில் தள்ளின.
தன்னுடைய 57வது வயதில் படுத்த படுக்கையில் விழுந்தார் பீதோவன். அவருடைய மிகவும் புகழ் பெற்ற குவார்ட்டட் இசைக் கோவைகளின் இறுதிப் பகுதிகளை அந்நேரத்தில் எழுதினார்.
1827ம் வருடம் மார்ச் 26ம் தேதி, இடியுடன் மழை கொட்டிக்கொண்டிருந்த நாளில் பீதோவனின் உயிர் பிரிந்தது.
இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும், ஐரோப்பாவில் மாபெரும் இசைக்கலைஞர்களும் பீதோவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்கள்.
இசையின் பல வடிவங்களில் படைப்புகளை அள்ளித் தந்தவர் பீதோவன். ஒன்பது சிம்பொனிக்கள், ஏழு கான்சர்ட்டிக்கள், பன்னிரெண்டு அக்கேஷனல் இசைக் கோவைகள், ஃபிடிலியோ என்கிற ஆர்கெஸ்ட்ரா, 32 பியானோ சொனாட்டாக்கள், 10 வயலின் மாறும் 5 சோலோ சொனாட்டாக்கள்,
இதைத் தவிர நூற்றுக்கணக்காக சிறு சிறு இசைக் கோவைகளைத் தன் வாழ்நாள் முழுவதும் படைத்துக் கொண்டே இருந்த மாபெரும் இசை மேதை பீதோவன் தன்னுடைய ஐந்தாவது வயதில் இருந்து கடைசி மூச்சு விடும் வரை அவருடைய படைப்பாற்றல் நிற்கவே இல்லை.
பெரும் அலைகளையும், சூறாவளிகளையும் கடந்து செல்லும் தீரமான படகு போல் அவருடைய இசைப் பயணம் தொடர்ந்து கொண்டே இருந்தது.
பீதோவனின் படைப்புகளிலேயே மிக உன்னதமானவை என்று விமர்சகர்களால் சிலாகிக்கப்படுவது அவருடைய 16 வகை இசைக்கோவைகளான ஸ்டிரிங் குவார்ட்டட்டுகள்.
அதைக் கேட்ட போது ஷ்கூபர்ட் என்கிற மற்றொரு சமகால் இசைக்கலைஞர் சொன்னார் “இனிமேல் அடுத்து வருபவர்கள் படைப்பதற்கு வேறு என்ன இருக்கிறது?”
– கிருஷ்ணா டாவின்ஸி எழுதிய ‘இசையாலானது’ நூலிலிருந்து…
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு – 044 24332924