கார்த்திக் என்கிற பெயர் மாடர்ன் பேர் என்று சொல்லிட முடியாது. சரவணன், முருகன், குமரன் மாதிரி இந்த பேரும் முருகக் கடவுளுடைய பேர் தான்.
ஆனால், கார்த்திக் பேர் சொல்லும் போது மட்டும் நம்ம மனசுக்குள்ள ஒரு நவ நாகரீக, குறும்புத்தனங்கள் நிறைந்த ஒரு இளைஞனோட பிம்பம் வருவதற்கு முக்கியக் காரணம் இந்த நிஜ கார்த்திக் தான்.
கார்த்திக்னு பேர் வச்சவங்களை பார்த்து அந்த பேருக்காகவே பொறாமைபடற அளவுக்கு இந்த பேருக்குண்டான கிரேஸ் இருந்தது. இப்பவும் இருக்கு.
அலைகள் ஓய்வதில்லை படம் வந்து 41 வருஷம் ஆச்சு. முதல் படத்துலேயே பாரதிராஜா கையால குட்டு வாங்கினதால, அடுத்த 20 வருஷத்துக்கு தொய்வில்லாத திரை வாழ்க்கைனு சொல்லலாம்.
அறிமுகத்துக்கு பிறகு வருஷத்துக்கும் 6, 7 படங்கள் நடிச்சுட்டே இருந்தாலும் நினைவில் நிற்கும் படங்கள்னு கணக்கில் எடுத்தால் குறைவாகவே தேறும். இதில் கார்த்திக்கை குறை சொல்லி பயனில்லை. அந்தக்கால திரையுலகம் அப்படி.
அந்த கேரக்டரை ரசிக்காதவங்களே தமிழ்நாட்டுல கிடையாதுன்னு சொல்லலாம்.
அந்த ஒரு கேரக்டர்னால பொண்ணுங்க மனசுல போய் பச்சக்னு உக்காந்துட்டாரு.
ஒரு காலத்துல மாதவன், இப்ப விஜய் சேதுபதிக்கு இருந்த கிரேஸையெல்லாம் விடவும் அதிகபட்ச பெண் ரசிகைகள் கார்த்திக் வசம் இருந்தது.
அதற்கு அடுத்து அக்னி நட்சத்திரம் படம் அவருக்கு இன்னும் ரசிகைகளை பெற்றுத் தந்தது. இன்னிக்கு ரக்டு பாய்ஸ், சாக்லேட் பாய்ஸ்னு பேசறாங்க.
அக்னி நட்சத்திரம் அஷோக் கேரக்டர் ஒரு ரியல் ரக்டு பாய் கேரக்டர். அதே வருடம் வந்த “வருஷம் 16” படம் கார்த்திக்கோட இன்னொரு பெஸ்ட். கண்ணன் கேரக்டரை யாராலும் மறக்கவே முடியாது.
தொடர்ந்து மீடியம் ஹிட் படங்களை கொடுத்துட்டே தான் இருந்தார். பாண்டி நாட்டு தங்கம், இதய தாமரை, பெரிய வீட்டு பண்ணக்காரன், இரும்புப் பூக்கள், கோபுர வாசலிலே.. இப்படி நிறைய படங்கள். “கிழக்கு வாசல்” அதில் முக்கியமான படம். அவருடைய வித்தியாசமான நடிப்பு இந்தப் படத்துல இருந்து தான் ஆரம்பித்தது என்று சொல்லலாம்.
இந்தப் படத்தை பத்தி யோசிக்கும்போது கார்த்திக் – ரேவதி ஜோடியை பத்தி பேசியே ஆகனும். அவ்வளவு பிரமாதமான ஜோடி.
மௌன ராகம், கிழக்கு வாசல், தெய்வ வாக்கு, இதய தாமரை என அத்தனைப் படத்திலும் ரொமான்ஸ் அள்ளும்.
ஆன் ஸ்கிரீன்ல கார்த்திக்கோட பெஸ்ட் ஜோடி ரேவதி தான்.
இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு படம்னா அது “தொட்டாச் சிணுங்கி”. என்ன மாதிரியான படம். ஒரு பக்கம் கார்த்திக், இன்னொரு பக்கம் ரகுவரன் ரெண்டு ராட்சர்களுக்கு நடுவுல ரேவதி. பிரில்லியண்ட் ஆக்டிங்.
தெய்வ வாக்கு, பொன்னுமணி, அமரன், நாடோடி தென்றல், நாடோடி பாட்டுக்காரன், சின்ன ஜமீன் இப்படி அனைத்து படங்களிலும் கார்த்திக்குடைய நடிப்பை குறை சொல்லவே முடியாது.
அமரன் படத்தில் “வெத்தலை போட்ட ஷோக்குல” அப்படின்னு பாடினதாலையோ என்னமோ பிற்காலத்துல வாய்ல வெத்தலை பாக்கு வச்சுகிட்டு பேசறா மாதிரியே பேச ஆரம்பிச்சாரு.
இல்ல பொன்னுமணி படத்துல வெத்தலை போடற கேரக்டர்ங்கறதால அப்படி பேச ஆரம்பிச்சாரானு தெரியலை. அதுவே கார்த்திக்கோட ஸ்டைல்னு பிராண்ட் ஆகிடுச்சு.
சுந்தர்.சி-யோட இணைந்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ அவரோட இரண்டாவது இன்னிங்ஸ்னு சொல்லலாம். கார்த்திக் + கவுண்டமணி காம்பினேஷன் பிரம்மாண்ட வெற்றி அடைந்தது.
மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக படங்களின் காமெடி போர்ஷன்ஸ் இன்றளவும் பிரபலம்.
அதே காலகட்டத்துல தன்னுடைய உணர்ச்சிகரமான நடிப்பினால் தன்னை நிரூபித்துக் கொண்டே தான் இருந்தார்.
“நந்தவனத் தேரு” படத்தில் தனது மாமாவை அடையாளம் கண்டு அவரிடம் சொல்லப்போகும் நேரத்தில் அவர் இறந்து விட, அந்த காட்சியில் கார்த்திக்கின் நடிப்பு உணர்வுப்பூர்வமானதாக இருக்கும்.
கார்த்திக்கின் கேரியரைப் பற்றி பேசும் போது “கோகுலத்தில் சீதை” படத்தைப் பற்றி பேசாமல் இருக்கவே முடியாது. அலுவலகத்தில் சுவலட்சுமி கார்த்திக்கை புகழ்ந்து பேசும் காட்சியில் அவரின் நடிப்பும், எக்ஸ்பிரஷனும் மறக்கவே முடியாதது.
தியேட்டரில் மெய்மறந்து கைதட்டி பார்த்தது இன்னும் நினைவில் இருக்கிறது. ஆரம்பத்தில் இந்தக் கதையை வேண்டாம் என்று மறுத்து விட்டாராம் கார்த்திக்.
பிறகு ஒத்துக்கொண்டு நடித்தவர் படம் முடியும் தருவாயில் “இந்த படத்தையா நான் வேண்டாம்னு சொன்னேன்” என்று தன்னைத்தானே நொந்து கொண்டதாக சாய் வித் சித்ராவில் இயக்குனர் அகத்தியன் சொல்லியிருந்தார்.
ரோஜாவனம், பூவேலி படங்களிலும் கார்த்திக்கின் நடிப்பு அற்புதமாக இருக்கும். அதுவும் பூவேலி பட கேரக்டர் மிகவும் சிக்கலானது.
அந்த கேரக்டரை ஏற்று நடிப்பதே சவாலானது. அதிலும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
“உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” மற்றொமொரு கிளாசிக். தனிப்பட்ட வாழ்க்கையில் பல விமர்சனங்களை சந்தித்தவர். இன்னும் உயரத்துக்கு சென்றிருக்க வேண்டிய ஒரு நடிகர். ஆனால் சுயக்கட்டுபாடு இல்லாமல் போனதால் அவரே அவருக்கு வில்லனாகிப் போனார்.
நன்றி: முகநூல் பதிவு