கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன்
இலங்கையின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன், சர்வதேச கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய தனித்துவமான கிரிக்கெட் சாதனையைப் படைத்துள்ளார்.
அவருக்குப் பிறகு வேறு எந்த கிரிக்கெட் வீரரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை. தற்போது இவரது வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘800’ என்ற படம் தயாராகி வருகிறது. இதன் பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது.
அதில் கலந்துகொண்ட இயக்குநர் எம்.எஸ்.ஸ்ரீபதி, “முத்தையா சார் சிவில் வார் நடந்த ஒரு இடத்தில் இருந்து வந்துள்ளார். அது சாதாரணமானது கிடையாது. அதனால், இவர் கதையை சொல்வதும் அத்தனை எளிதாக இல்லை. நிறைய பொறுப்பு இருந்தது.
அவரது பூர்வீகம், குழந்தைப் பருவம், குடும்பம் என வாழ்க்கை வரலாறு அனைத்தையும் தெரிந்து கொண்டேன்.
நிறைய சவால்களைத் தாண்டி இந்தப் படத்தை எடுத்துமுடித்து வெளியிட உள்ளோம்” என்றார்.
நடிகை மஹிமா நம்பியார், “என் கரியரில் மிகச்சிறந்த படமாக இது இருக்கும் என நம்புகிறேன். ஹீரோவுடைய பயோபிக் எனும்போது எனக்கு குறைந்த காட்சிகளே இருக்கும்.
இருந்தாலும், நான் நடித்த சில காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். இது முத்தையா முரளிதரனின் கதை மட்டுமல்ல. விளையாட்டு, இலங்கையின் கதையும் இது.” என்றார்.
நடிகர் மதுர் மிட்டல் பேசியதாவது, “என்னைப் போன்ற வளர்ந்து வரும் நடிகருக்கு முத்தையா சாரின் கதாபாத்திரம் நடிக்கக் கிடைத்திருப்பது மிகப்பெரிய விஷயம்.
இயக்குநர் ஸ்ரீபதி, மஹிமா, ஆர்.டி. சார் அனைவருக்கும் நன்றி. படத்தில் பல முக்கியமான தருணங்களை நீங்கள் நிச்சயம் விரும்புவீர்கள். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்” என்றார்.
கிரிக்கெட்டர் முத்தையா முரளிதரன், “இயக்குநர் வெங்கட்பிரபு பேசிக்கொண்டிருக்கும் போது, என்னைப் பற்றி பயோபிக் எடுக்கலாம் என்று சொன்னார்.
இந்தப் படம் மூலம் வரும் பணம் டிரஸ்ட்டுக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று என் மேனேஜர் ஆலோசனை சொன்னார்.
என்னைப் பற்றி நன்றாக ஆராய்ந்து தான் இயக்குநர் ஸ்ரீபதி கதை எழுதியுள்ளார். வெங்கட்பிரபுதான் முதலில் இயக்குவதாக இருந்தது. ஆனால், அவருக்கும் தயாரிப்பாளருக்கும் பிரச்சினை என்பதால் விலகிவிட்டார்.
நாங்கள் மலையகத் தமிழர்கள் வம்சாவளியில் வந்தோம். எங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு பல தடைகள் வந்தது.
படத்திற்கும் அப்படியான தடைகள் இருந்தது. ஆனால், இலங்கையில் எடுத்த 80 நாட்களும் படத்தைப் பற்றிப் புரிந்துகொண்டு அரசு ஒத்துழைப்புக் கொடுத்தது.
எல்லாம் உண்மை சம்பவங்களாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன். ஸ்கிரிப்டில் அப்படியே ஸ்ரீபதி கொண்டு வந்துள்ளார்.
கிரிக்கெட் படமாக இல்லாமல் ‘800’ நான் சாதனை படைத்ததற்கு பின்னால் இருந்தது என்ன, என்ன பிரச்சினைகளோடு விளையாடினேன், என்னால் நாடு எந்த நிலைக்கு வந்தது என்பது குறித்து இந்தப் படத்தில் பேசியுள்ளோம். படம் உங்களுக்கும் பிடிக்கும்” என்றார்.