‘அறம்’ செழிக்க அன்பான வாழ்த்துகள்!

தாய் வாழ்த்துகள்

பத்திரிகையாளர் சாவித்ரி கண்ணனை ஆசிரியராகக் கொண்டு செயல்பட்டு வரும் ‘அறம்’ இணைய இதழின் நான்காம் ஆண்டு தொடக்க விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் – ஜானகி மகளிர் அறிவியல் மற்றும் கல்லூரியில் சனிக்கிழமை (09.09.2023) மாலை நடைபெற்றது. இரண்டரை மணி நிகழ்வில் ஒவ்வொரு மணித்துளியும் மிகப் பயனுள்ளதாக அமைந்தது.

அறிவார்ந்த, சமூக அக்கறை கொண்ட வாசகர்களால் நிரம்பி வழிந்தது அரங்கு! சமூகத்தின் பல முக்கிய ஆளுமைகள் பார்வையாளர்களாக வந்திருந்து அமைதியாக விழா நிகழ்வை ரசித்தனர்! கேள்வி – பதில் நிகழ்ச்சியில் வாசகர்கள் அதிகமாக பங்கெடுத்தனர்.

இனிய நண்பர் மூத்த பத்திரிகையாளர் ம.வி.ராஜதுரை கச்சிதமான ஒரு வரவேற்புரை நிகழ்த்தினார்! அருமைத் தோழர்கள் பீட்டர் துரைராஜ் சிறப்பான அறிமுக உரை நிகழ்த்தவும், இலங்கை வேந்தன் முன்னிலை உரை நிகழ்த்தினர்.

வழக்கறிஞர் நண்பர் அமர்நாத் அழகான எளியதொரு தலைமை உரை நிகழ்த்தினார்.

இதைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளரும், ‘மெட்ராஸ் குரல்’ ஆசிரியருமான நா.பா.சேதுராமன், தி இந்து தமிழ் திசையின் இணையத் தள இதழ் ஆசிரியரும், சென்னை பத்திரிகையாளர் மன்ற (மெட்ராஸ் பிரஸ் கிளப்) இணைச் செயலாளருமான பாரதி தமிழன் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னை பத்திரிகையாளர் சங்க மணிமாறன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இதைத் தொடர்ந்து அறிவியாளர் நடராஜன் பேசினார். அவர் தன் உரையில், ”அறத்தில் வரக் கூடிய கட்டுரைகள் பற்பல விஷயங்களில் தனக்கு வெளிச்சம் தருகிறது” என்றார்.

”கள்ளக்குறிச்சி, வேங்கை வயல் தொடங்கி மணிப்பூர் பிரச்சினை ஆகிய பலவற்றில் சரசமற்று, மற்றவர்கள் பேசத் தயங்கும் விஷயங்கள் சொல்லபடுகின்றன.

இப்படியான ஒரு ஜனநாயக வெளி அவசியம். தமிழ் மண், மொழி, இயற்கை விவசாயம் ஆகியவை தொடர்பான கட்டுரைகள் அறத்தில் இன்னும் கூடுதலாக வர வேண்டும்” என்றார்.

அவரைத் தொடர்ந்து பேச வந்த திரைப்படக் கலைஞரும், சமூக செயற்பாட்டாளருமான ரோகிணி, “கடந்த 20 ஆண்டுகளாக ‘அறம்’ ஆசிரியர் சாவித்திரி கண்ணனுக்கும் தனக்கும் உள்ள நட்பை விவரித்தார்.

அவர் பத்தாண்டுகளாக நடத்திய ஏழைக் குழந்தைகளுக்கான மாலை நேரப் பாடசாலை தன்னை மிகவும் ஈர்த்தது. அதில் நானும் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். அது போல நானும் ஒரு மாலை நேரப் பள்ளியை என் ஏரியாவில் தொடங்கி செய்யும் உத்வேகம் அதில் எனக்கு கிடைத்தது.

அவர் எந்த எதிர்பார்ப்புகளும் இல்லாமல் இயங்குபவர். தற்போது அவர் நடத்தும் அறம் இதழை நான் தொடர்ந்து வாசிக்கிறேன். எதையும் முழுமையாக ஆய்வு செய்து தயக்கமில்லாமல் எழுதுகிறார்.

எப்போதும் எளியோரின் பக்கம் நின்று அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்புபவராக கண்ணன் உள்ளார்’’ என்றார்.

அவரது உரையைத் தொடர்ந்து கேள்வி – பதில் நிகழ்ச்சி களைகட்டியது! வாசகர்களின் கேள்விக்கு ஆசிரியர் சாவித்திரி கண்ணன் பதில் கூறும் நிகழ்வுக்கு, சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட கேள்விகள் வாசகர்கள் தரப்பில் வந்தன.

நேரம் அனுமதித்த வகையில் இந்த கேள்விகளுக்கான பதில்களை வழங்கும் நிகழ்ச்சி சுமார் 50 நிமிட நிகழ்வாக நீடித்தது. அதைத் தொடர்ந்து ஆசிரியர் உரை அரை மணி நேரம் நிகழ்ந்தது.

ஆசிரியர் தன் உரையில் சமகால பிரச்சினைகளை வரலாற்று பின்புலத்துடன் இணைத்துப் பேசினார்.

மனிதகுலம் தோன்றி ஒரு சமூகமாக வாழத் தொடங்கியது முதல் ஆதிக்கம் செய்பவர்களுக்கும், ஆதிக்கத்தின் அழுத்தம் தாங்க முடியாமல் எதிர்ப்பவர்களுக்கும் இடையிலான போராட்ட வரலாறாகவே இருந்து வருகிறது.

ஒவ்வொரு நாட்டிற்கு ஒவ்வொரு அச்சுறுத்தல் உள்ளது. அது போல இந்தியாவின் நிரந்தர அச்சுறுத்தலாக சனாதனம் உள்ளது.

புராணகாலம் தொடங்கி மன்னர்கள் காலம் வரை சத்திரிய மன்னர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சமூகத்தை ஆட்டி படைத்து வருகின்றது பார்ப்பனிய சித்தாந்தம். பார்ப்பனர்களுக்கு அடங்க மறுத்து மன்னர்கள் அவர்களை எதிர்த்த வரலாறுகளும் உண்டு.

இந்த இரண்டு பிரிவினர்களுக்கு இடையே நடந்த போரில் அதிக சத்திரிய மன்னர்களை கொலை செய்தவர், இந்தியாவிலேயே அதிக கொலை செய்த வகையில் பிரசித்தி பெற்றவர் தான் பரசுராமர். அந்த கொலைகாரரைத் தான் தெய்வமாக்கி பரசுராமர் என கோவில் கட்டி வணங்குகின்றனர்.

மிகப்பெரிய சிவபக்தனான நந்தனார் சிதம்பரம் கோவிலை நோக்கி வந்த போது தாழ்ந்த குலத்தவர் கோவிலுக்குள் நுழைவது தீட்டாகிவிடும் எனக் கூறி தீயிட்டு கொழுத்தி கொன்றனர் பார்ப்பனர்கள்!

இதை அறிந்து மக்கள் மாபெரும் சிவபக்தனை கொல்வதா எனக் கொதித்து எழுந்தனர்.

எனவே, மக்களை சமாதானப்படுத்தும் விதமாக பார்ப்பனர்கள் முந்தைய நாள் இரவு இறைவன் தங்கள் கனவில் தோன்றி நந்தன் நாளை காலை கோவிலுக்கு வரும் போது அவரது தீட்டுக் கழியும் வண்ணம் அவரை அக்னியில் குளிப்பாட்டி என்னிடம் அனுப்பி வையுங்கள் என்றார்.

ஆகவே, நந்தன் சொர்க்கம் சென்று மோட்சம் அடைந்துவிட்டார் என்றனர். இதையே நந்தனார் கதாகலாட்சேபம் என கிராமங்கள் தோறும் பரப்பினர்.

இப்படிப்பட்ட பார்ப்பனர்களுக்கு எதிரான சித்தர் மரபு நமக்கு ஆரம்ப காலத்தில் இருந்தே உண்டு.

நட்ட கல்லும் பாடுமோ, நாதன் உள்ளிருக்கையில்!

என்று நெருப்பான பாடல்களை இயற்றியவர்கள் சித்தர்கள். 14 ஆம் நூற்றாண்டில் உருத்திரமேரூர் நங்கை என்ற பறையர் இனத்துப் பெண், பார்ப்பன இளைஞனை காதலித்து மணந்தார். அவரை உயிரோடு எரித்துவிட பார்ப்பனர்கள் தீவட்டியுடன் தேடி வந்தனர்.

அப்போது அந்தப் பார்ப்பனர்களை பார்த்து அந்தப் பெண் பாடிய பாடல் வரலாறாகிவிட்டது!

அந்தப் பாட்டில் வெளிப்பட்ட ஆன்ம ஞானத்தை கண்டு திகைத்த பார்ப்பனர்கள் அப்படியே திரும்பி சென்றனராம்;

ஓதிய நூலும் பொய்யே உடலுயிர் தானும் பொய்யே

சாதிமொன்றே அல்லால் சகலமும் வேறேதாமோ

வேதியன் படைத்தல்லால் விதி தன்னை வெல்லலாமோ

பாதியில் பழியே சூழ்ந்த பாய்ச்சலூர் கிராமத்தாரே!

குலம் குலம் என்பதெல்லாம் குடுமியும் பூணு நூலும்

சிலந்தியும் நூலும் போல சிறப்புடன் பிறப்பதுண்டோ

நலந்தரு நான்கு வேதம் நான்முகன் படைத்ததுண்டோ

பலன் தரு பொருளுமுண்டோ பாய்ச்சலூர் கிராமத்தாரே!

ஆக இப்படிப்பட்ட சித்தர்களின் தொடர்ச்சி தான் வள்ளலார். அவரும் சனாதனத்தை எதிர்த்தார். அவருடைய பாடல்களை அச்சிட்டுத் தான் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே மக்களிடம் அறிமுகம் ஆகியது.

எனவே, சனாதன எதிர்ப்பு பின்னணி என்பது இந்தியாவில் தமிழகத்திற்கு மட்டுமே உள்ள தனிச் சிறப்பாகும்.

இந்த சிறப்பு வட இந்தியாவிற்கு இல்லை. அவர்கள் தாங்கள் சனாதனத்திற்கு அடிமைப்பட்டு இருப்பது குறித்த பிரக்ஞ்சை கூட இல்லாதவர்களாக உள்ளனர்.

இந்தியாவில் பாஜக என்பது பார்ப்பனிய கருத்துருவாக்கத்தை நடைமுறைப்படுத்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்துகிறது. அதற்கு எதிரான கருத்தியல் பல எதிர்கட்சிகளிடம் இல்லை.

காங்கிரசில் ராகுல்காந்தி சிறந்த தலைவர் என்றாலும், அவருக்கு காங்கிரஸ் என்ற ஸ்தாபனத்தை உயிர்ப் போடும், செயல்துடிப்புடனும் இயக்கும் திறனில்லை.

எதிர்கட்சிகளிடம் பிரிக்கமுடியாத வலுவான பிணைப்பு இன்னும் சாத்தியப்படவில்லை என்றே எண்ணுகிறேன்.

இதனால் பாஜக தவிர்த்த எல்லா கட்சிகளும் இங்கு தற்காப்பு அரசியலே செய்கின்றன.

திமுக அரசு வெளியே திராவிட மாடல், சனாதன எதிர்ப்பு எனச் சொன்னாலும் அடிப்படையில் மத்திய பாஜக அரசின் அனைத்து மக்கள் விரோத கொள்கைகளையும் தமிழகத்தில் சிரமேற்கொண்டு அமல்படுத்தி வருகிறது.

ஆகவே, மக்களுக்கு அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் துணிச்சல் வேண்டும். அந்த துணிச்சலுக்கான தரவுகளை திரட்டிக் கொடுத்து அவர்களுக்கு நடைமுறை யதார்த்தங்களை சொல்கிறோம்.

யாருமே கேட்கத் துணியாவிட்டால் அதிகாரத்தில் இருப்பவர்கள் மேன்மேலும் தவறு செய்வார்கள். மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைத் தான் அறம் செய்கிறது’’ என்றார்.

சகோதரி பாண்டியம்மாள் இனிமையான முறையில் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முழுவீச்சில் செய்தவாரான சுற்றுச் சூழல் ஆர்வலரும் காக்கை கூடு நிறுவனருமான செழியன் ஜா. மிக நெகிழ்ச்சியுடன் நன்றியுரை வழங்கினார்.

குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமா விஸ்வகர்மா?

இந்த நிகழ்ச்சிக்கு வாசகர்கள் என்ற வகையில் கலந்து கொண்டு முக்கிய ஆளுமைகள் நீதிபதி ஹரிபரந்தாமன், திராவிட இயக்க மூத்த தலைவர் திருச்சி செளந்திரராஜன்,

டெல்லி மகாத்மா காந்தி மைய இயக்குனர் அண்ணாமலை, எழுத்தாளர்கள் பத்திரிகையாளர்கள் வகையில் உதயை மூ.வீரையன், ரெங்கையா முருகன், எஸ்.அன்வர், ‘தாய்’ பிரபு மு.சங்கையா, தயாளன், நிகழ் அய்க்கண்,

சிந்து பாஸ்கர், தாரை.வே.இளமதி, எஸ்.என்.சிக்கந்தர், ஜாபர்அலி, மருத்துவர் வெற்றிச் செல்வி, ராஜபாண்டியன், ஜா.தீபா, அய்யப்பன் மகாராஜன், வழக்கறிஞர்கள் எம்.எல்.ரவி, சிவஞான சம்பந்தன், சிவக்குமார், பால்முகவர் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, பாலமுருகன் ஐ.ஆர்.எஸ், காந்திய செயல்பாட்டாளர்கள் மோகன், பிரேமா அண்ணாமலை, சரவணன்,

ஆ.கருணாகரன், ஈரோடு மாணிக்க சுந்தரம், பொறியாளர் எம்.ஜி.மணவாளன், இயற்கை விவசாய கூட்டமைப்பின் சுரேஷ்குமார், இடதுசாரி சிந்தனையாளர் யூசுப் அலி தொழில்முனைவர் வி.ஜனகன், முனைவர் நிம்மு வசந்த் உள்ளிட்ட திரளானோர் வந்திருந்தனர்.

– அஜிதகேச கம்பளன்

Comments (0)
Add Comment