சாதீயத்திற்கு எதிரான ஒரு படத்தை உருவாக்குவதோ, வெளியிடுவதோ, அதன் வெற்றியைச் சுவைப்பதோ எளிதானதல்ல. அதையும் மீறி, அரிதாகச் சில படங்கள் அதனைச் செய்துகொண்டு தான் இருக்கின்றன.
அந்த வரிசையில் சமீபத்திய வரவாக அமைந்திருக்கிறது சேரன், ஸ்ரீபிரியங்கா, லால், அருள்தாஸ், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடிப்பில், இசக்கி கார்வண்ணன் இயக்கத்தில் வெளியாகியிருக்கிற ‘தமிழ்க் குடிமகன்’.
கட்டாயப்படுத்த முடியாது!
சின்னச்சாமி (சேரன்), தனது மனைவி பார்வதி (ஸ்ரீபிரியங்கா), மகன், தாய் மற்றும் மருத்துவக் கல்லூரியில் படிக்கும் தங்கை (தீப்ஷிகா) உடன் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார்.
அவரது முன்னோர்கள் துணி சலவை செய்யும் தொழிலைச் செய்தவர்கள். அவர்களின் வழியில், மரணம் நிகழ்ந்த வீடுகளில் நிகழும் ஈமச்சடங்குகளில் பங்கேற்று வருகிறார் சின்னச்சாமி.
போதிய வருமானம் இல்லாமல், சக மனிதர்களிடம் மரியாதையும் இல்லாமல் வாழ்வதை எண்ணி வெம்பி அவரது உறவினர்கள் பலர் வேறு ஊர்களுக்குப் பிழைக்கச் சென்றுவிடுகின்றனர்.
தன்னந்தனியாக சின்னச்சாமியின் குடும்பம் மட்டும் அந்த கிராமத்தில் வசிக்கிறது.
அன்றைய தினம் அவரால் உரிய நேரத்திற்குத் தேர்வுக்கூடம் செல்ல முடியவில்லை. அதையடுத்து, ஊரில் இருக்கும் ஆதிக்க சாதியினருக்கு அடிமையாக இருப்பதில் இருந்து மீள முடியாதா என்ற வேட்கை அவரை ஆட்கொள்கிறது.
அதன் தொடர்ச்சியாக, கறவை மாடுகள் வாங்கிப் பால் வியாபாரம் பண்ண முயற்சிக்கிறார். ஆனால், அவர் இன்ன சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிய வரும்போது, பலர் அவரிடம் பால் வாங்க மறுக்கின்றனர்.
சின்னச்சாமியின் சகோதரி வள்ளியும் ஊர் பெரியமனிதர் சுடலையின் (லால்) மகனும் காதலிக்கின்றனர்.
இந்த விஷயம் சுடலையின் உறவினர்களுக்குத் தெரிய வர, அவர்கள் வள்ளியைக் கண்மூடித்தனமாகத் தாக்குகின்றனர். அந்த சம்பவம் சின்னச்சாமியின் மனதில் ஆறாத ரணமாக மாறுகிறது.
அந்த சம்பவம் நிகழ்ந்து ஆறு மாதங்கள் கழித்து, சுடலையின் தந்தை பேச்சிமுத்து (ராமசாமி) மரணமடைகிறார். ஈமச்சடங்குகள் செய்ய சின்னச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது.
ஆனால், அவரோ தான் அந்த வேலையைச் செய்யப் போவதில்லை என்கிறார். அவருக்குப் பதிலாக, வெளியூர்களில் இருந்து ஆள் அழைத்துவரும் முயற்சிகளும் தோல்வியில் முடிகின்றன.
அதையடுத்து, சின்னச்சாமியின் வீட்டை நாசப்படுத்தி, அவரது குடும்பத்தினரை மிரட்டி ஈமச்சடங்குகளைச் செய்யக் கட்டாயப்படுத்துகின்றனர். அதற்கடுத்த நாள், அவர் தனது குடும்பத்தினருடன் ஊரைவிட்டுச் செல்கிறார்.
அது சுடலை தரப்பை ஆத்திரப்படுத்த, சின்னச்சாமி மீது காவல்நிலையத்தில் திருட்டு வழக்கொன்று பதிவு செய்யப்படுகிறது.
அதன்பிறகு என்ன நடந்தது? ஈமச்சடங்குகளைச் செய்யுமாறு தன்னைக் கட்டாயப்படுத்த முடியாது என்ற நிலையில் இருந்து சின்னச்சாமி இறங்கி வந்தாரா என்று சொல்கிறது ‘தமிழ்க்குடிமகன்’.
மிக அழுத்தமான கதை இருந்தபோதும், வணிக சமரசம் ஏதுமில்லாமல் திரைக்கதை அமைக்க நினைத்து நம்மை அயர்வுற வைத்திருக்கிறார் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.
அதேநேரத்தில், கிளைமேக்ஸில் அவர் முன்வைத்திருக்கும் தீர்வு இதுவரை திரையில் சொல்லப்படாத ஒன்று என்பதில் எந்தச் சந்தேகமும் வேண்டாம்.
சிறப்பான நடிப்பு!
சின்னச்சாமியாக வரும் சேரன், சுடலையாக வரும் லால் இருவரும் மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்; இந்தக் கதையைத் தங்களது தோள்களில் தூக்கிச் சுமந்திருக்கின்றனர்.
பெரிதாக ஹீரோயிசம் காட்டாமல், புரட்சிகரமான வசனங்களைப் பக்கம் பக்கமாகப் பேசாமல் ஒரு ஒடுக்கப்பட்ட மனிதனாகத் திரையில் தோன்றி நம் நெஞ்சில் பதிகிறார் சேரன்.
அவரது மனைவியாக வரும் ஸ்ரீ பிரியங்காவுக்குத் தனியாகக் காட்சிகளோ, பாடல்களோ இல்லை. ஆனாலும், ஒரு பாத்திரமாகக் கதையோடு பொருந்திப் போகிறார்.
தங்கையாக வரும் தீப்ஷிகா, திரையில் அழகாகத் தெரிகிறார். ஆனால், அவரது நடிப்பில் ‘தான் ஒரு புதுமுகம்’ என்ற எண்ணம் படிந்திருப்பது நன்றாகத் தெரிகிறது.
அவரது ஜோடியாக நடித்த துருவாவுக்கு முன்பாதியில் ஒரு பாடல், நான்கைந்து காட்சிகள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. ஆனாலும், கதையில் அவர்களது காதல் துருத்தலாக அமையவில்லை.
சேரனின் தாயாக வரும் சுஜாதா நடிப்பு, இக்கதையமைப்புக்குப் பலம் சேர்க்கிறது.
இந்த படத்தில் லால் செய்யும் வில்லத்தனம், அவரது முந்தைய படங்களையே நினைவூட்டுகிறது. ஆனாலும், இதில் அவர் வேறுமாதிரியாகத் தெரிகிறார்.
லால் மைத்துனராக வரும் அருள்தாஸ், பொதுவெளியில் சாதிப்பெருமை பேசும் சில மனிதர்களை நினைவூட்டுகிறார்.
இதில் ‘காந்தி பெரியார்’ எனும் வேடத்தில் வேல.ராமமூர்த்தி நடித்துள்ளார். அவரது இருப்பு ‘க்ளிஷே’வானது என்றபோதும், பார்வையாளர்களை அவரது பாத்திரம் நிச்சயம் ஈர்க்கும்.
இன்னும் தலையாரி, லால் உறவினராக வருபவர், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், சுரேஷ் காமாட்சி, ரவி மரியா, ராஜேஷ் என்று பலர் திரையில் தலைகாட்டியுள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருக்கும் ஒரு கிராமத்துக்கு நேரில் சென்று வந்த அனுபவத்தை ஊட்டுகிறது ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவு. அதேநேரத்தில், ப்ரேமை அழகூட்டுவதற்கான வேலைகளை மிகச்சன்னமாகச் செய்திருக்கிறார்.
ஆர்.சுதர்சனின் படத்தொகுப்பில் முன்பாதியில் கதை நேர்த்தியாகத் திரையில் விரிகிறது. பின்பாதியில் அது மிஸ்ஸிங். அதனால் ஏற்படும் அயர்வு நீதிமன்றக் காட்சிகளில் தான் சரியாகிறது.
வீரசமர் கலை வடிவமைப்பு இந்த படத்தின் பெரிய பலம். நெல்லை வட்டார ஈமச்சடங்குகள் மற்றும் சாஸ்தா கோயில் கொடை நிகழ்வுகளை நுணுக்கமாக ஆவணப்படுத்தியதில் அவரது பங்கு கணிசம்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் சாம் சி.எஸ். பங்களிப்பில் வந்த படங்களைக் காட்டிலும், முற்றிலுமாக வேறுவிதமானது ‘தமிழ்க்குடிமகன்’.
அதனைப் புரிந்துகொண்டு, மண் சார்ந்த பாடல்களைப் பயன்படுத்திய வகையிலும் மனித உணர்வுகளை அமைதிப்படுத்தும் விதமாகப் பின்னணி இசை தந்த வகையிலும் நம்மைக் கவர்கிறார்.
இயக்குனர் இசக்கி கார்வண்ணன், இதற்கு முன்னர் நான்கு படங்கள் ஆக்கியிருப்பதாகத் தகவல். ஆனால், அவை ரசிகர்களின் பார்வையை அடையவே இல்லை.
மாறாக, இந்த படத்தில் அவர் எடுத்துக்கொண்ட களம், அதனை அழுத்தமாகச் சொல்லும் பாத்திரங்கள் மூலமாகத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார்.
வணிக நோக்கம் இல்லாவிடினும் கூட, இந்தக் கதையை இன்னும் சுவாரஸ்யமாகத் திரையில் சொல்லியிருக்கலாம்.
ஒரே மாதிரியான நிகழ்வுகளைத் திரும்பத் திரும்பக் காட்டியதில் சலிப்புற வைத்திருக்கிறார். போலவே, பின்பாதியை இன்னும் செறிவாகத் தந்திருக்கலாம் என்று எண்ண வைக்கிறார்.
பாரபட்சமற்ற விமர்சனம்!
படத்தில் வேல.ராமமூர்த்தி, அருள்தாஸ் உட்படப் பலரும் திருநெல்வேலி வட்டார மொழியைப் பேசியிருக்கின்றனர். ஆனால், நாயகனோ நாயகியோ அதற்கு உட்படவில்லை. அதைக் கொஞ்சம் கவனித்திருக்கலாம்.
அதேபோல, நீதிமன்றக் காட்சி ஒரே சூட்டில் நடந்து முடிவதாகக் காட்டியிருப்பதையும் தவிர்த்திருக்கலாம். அந்தக் கால மாற்றத்தைத் திரையில் பிரதிபலித்திருக்கலாம்.
இதில் நகைச்சுவை காட்சிகள் இல்லை. அந்த நோக்கில் வைக்கப்பட்டவையும் கூட நம்மை ஈர்ப்பதாக இல்லை.
கதையில் பிரசாரத் தொனி கலந்துவிடக் கூடாது என்று இயக்குனர் இசக்கி கார்வண்ணன் மெனக்கெட்டிருந்தாலும், அதையும் மீறி அந்தக் குறை எட்டிப் பார்க்கிறது. ஆனாலும், படத்தின் பல இடங்களில் வசனங்கள் குத்தீட்டியாய் நம்மைச் சரிக்கின்றன.
‘நாதியத்த எங்களை சாதியத்தவங்களா ஆக்கிடுங்கய்யா’, ‘வாங்க சின்னச்சாமி சார்வாள்’ என்பது போன்ற வசனங்கள் ‘சாதீய வன்மத்தை’ திரையில் வெளிக்காட்டும்விதமாக உள்ளன.
அது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் இருக்கிற பல கட்சிகளைக் கேள்விக்குட்படுத்துகிறது நீதிமன்றக் காட்சியில் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் சமூக நீதி குறித்த வசனங்கள்.
இப்படி நாலாபுறமும் விமர்சனக் கணைகளை அள்ளியிறைத்தபிறகு, தமிழ்க்குடிமகனுக்கு ஆதரவாக எந்தவொரு அரசியல் கட்சியினரும் பேசமாட்டார்கள் என்பதுதான் யதார்த்த நிலை.
ஏன், திரைத்துறையில் கூட இதற்கு எத்தகைய வரவேற்பு கிடைக்கும் என்று தெரியவில்லை.
அதையும் மீறி, ‘தமிழ்க்குடிமகன்’ என்ற டைட்டிலுக்கு அர்த்தம் சேர்க்கும் படத்தின் முடிவை நம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது.
இந்த படம் குறித்து விவாதிக்காமல் புறக்கணிக்கும் வாய்ப்புகள் நிறைய; ஒருவேளை அது நிகழ்ந்தாலும் கூட, இதில் பேசப்பட்டிருக்கும் நுணுக்கமான அரசியல் எதிர்காலத்தில் நிச்சயம் தமிழ் சமூகத்தில் தாக்கம் செலுத்தும்!
– உதய் பாடகலிங்கம்