தலைகீழ் வகுப்பறைகளே காலத்தின் தேவை!

– நூல் அறிமுகம்

சேலம் மாவட்டம், ஜலகண்டபுரம் என்ற சிற்றூருக்கு அருகில் செவிடனூர் என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்த உமாமகேசுவரி, இருபத்து மூன்று ஆண்டுகளாக அரசுப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார்.

புதிய தலைமுறை ஆசிரியர் விருது, ஏர் இந்தியா வழங்கிய BOLT (Broad Outlook Learner Teacher) விருது, தமிழால் இணைவோம் அமைப்பின் தங்க மங்கை விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது, பகிர்வு அமைப்பின் கல்வித்துறைக் களப்பணியாளர் விருது, DYFI இன் பெண் சாதனையாளர் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி, இன்றைய சூழலில் கல்வி, நம் கல்வி எது, தமிழகக் கல்விச் சூழல், உரையாடும் வகுப்பறைகள், வயிரமுடைய நெஞ்சு வேணும் ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

தமிழ்நாடுப் பாடநூல் கழகம் இவரது படைப்பை தமிழ்நாடு காய்கள் கனிகள் என்ற சிறுவர் கதைப் புத்தகமாக வெளியிட்டுள்ளது.

தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை என்பது இவரது எட்டாவது புத்தகம். இந்த நூலுக்கு அவர் எழுதிய என்னுரை.

தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை. இந்த நூலைக் கையில் எடுக்கும் ஒவ்வொருவருக்கும் என் அன்பு வணக்கம். தலைப்பிலிருந்தே உங்களால் புரிந்து கொள்ள இயலும். நம் கல்வி முறை எவ்வாறு தலைகீழாக இருக்கிறது என்று.

கல்விக் கொள்கைகளுக்கும் வகுப்பறைகளில் செயல்படுத்தும் கல்வி முறைகளுக்கும் நீண்ட இடைவெளி உருவாகி வருகிறது. அவற்றின் உச்சமாகத் தான் வகுப்பறைகளில் தரமில்லாத கல்வியைத் தருவதற்காகவே அனைவரும் தொடர்ந்து உழைக்கிறோம்.

இந்த நிலையிலிருந்து மீண்டு குழந்தைகளைக் காப்பாற்றிட இன்றைய காலத்தின் தேவை தலைகீழ் வகுப்பறைகள் மட்டுமே என்பது தான் இந்த நூலின் ஒற்றைச் செய்தி.

மத்திய அரசாங்கம், நான் தான் கல்விக்கு அதிபதி , நான் சொல்வதைத்தான் மாநில அரசுகள் கேட்க வேண்டும் என்று சட்டம் போட்டு சத்தமிடுகிறது.

அதை நிறைவேற்றும் பொருட்டு, இதுதான் கல்வி நாங்கள் கூறுவதை அச்சுப் பிசகாமல் பள்ளிகளில் செயல்படுத்துங்கள் என்ற மாநில அரசின் வழிகாட்டுதல் கல்வித்துறையின் கட்டளையாக இருக்கிறது.

திட்டங்களால் நிரம்பி வழிகின்றன பள்ளிகள் திட்டங்களுக்கு உயிர் கொடுக்கும் ஆசிரியர்கள் உயிரோடு இருக்கும் குழந்தைகளின்‌ படைப்பாற்றலைப் பார்க்கத் தவறி அவற்றைப் பட்டுப் போக வைக்கின்றனர்.

அரசாங்கத்திற்கு பதில் சொல்வதையே தங்கள் தலையாயக் கடமையாகக் கருதும் இவர்களின் அச்சத்தில் குழந்தைகளின் துளிர்க்கும் திறன்களும் கற்றல் விளைவுகளும் பட்டுப் போகின்ற பரிதாபம்.

இவை அனைத்தும் மாற வேண்டும். குழந்தைகள் பள்ளிகளில் உற்சாகமாக கல்வி கற்க இன்முகத்துடன் ஓடி வர வேண்டும். தேர்வு – மனப்பாடம் சார்ந்த கல்வி முறை மாற்றம் பெற வேண்டும் ‌ உண்மையான சனநாயக வகுப்பறைகளும் சுதந்திரமான கற்றலும் அவசியமாகிறது.

புள்ளி விவரங்கள் உண்மை பேசாது என்ற உண்மையை அரசும் கல்வித்துறையும் ஆசிரியர்களும் புரிந்து கொண்டு குழந்தைகளின் மனத் தேவையைப் பூர்த்தி செய்யும் வகுப்பறைகள் அவசியம் என்பதையே இப்புத்தகம் பேசுகிறது.

இப்புத்தகத்தில், தாய் இணைய இதழில் சமகாலக் கல்விச் சிந்தனைகள் என்ற தலைப்பில் எழுதிய சில கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

அவற்றுடன் புதிய ஆசிரியன் மாத இதழ், நமது மண் வாசம் மாத இதழ், இந்து தமிழ் திசை நாளிதழ், சுவடு இணைய இதழ், செங்கனல் இதழ் உள்ளிட்ட பல இதழ்களில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது.

மேலும் OH சேனலில் வெளிவந்த எனது நேர்காணல் ஒன்றின் தொகுப்பும் இதில் இடம்பெற்றுள்ளது.

மிகவும் கரிசனத்துடன் தமிழ்நாட்டின் கல்வி நிலையை சமூகத்துக்கு எடுத்துக்காட்டி ஆவணமாக்கும் வகையில், எனது எழுத்துகளைப் புத்தகமாக்கும் பணியைக் கடந்த மூன்று ஆண்டுகளாக, தனது சமூகக் கடமைகளுள் ஒன்றாக செய்து வருபவர் மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஐயா கி.வெ. அவர்கள்.

கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி, நம் கல்வி எது ஆகிய இரண்டு நூல்களைத் தொடர்ந்து பன்மைவெளியின் மூன்றாவது நூலாக தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை வருகிறது.
*************

தலைகீழ் வகுப்பறையே காலத்தின் தேவை!
ஆசிரியர் : சு.உமா மகேசுவரி
வெளியீடு : பன்மைவெளி,
முதல் தெரு, நியூ பங்காரு காலனி,
கே.கே. நகர், சென்னை – 78

விலை : ரூ.150/-

Comments (0)
Add Comment