சனாதனம்: நம் தமிழ் மரபின் முகத்தையும் சற்றே பார்க்கலாமா?

– மணா
*
தற்காலத் தேவைக்கேற்ற மீள்பதிவு.
*
“தமிழகத்தில் வைதீக சமயம்; வரலாறும் வக்கணைகளும்” – ஆய்வாளர் தி.சு.நடராசனின் நூலை முன்வைத்து சில ஒளிக்கீற்றுகள்

“தமிழகத்தில் வைதீக சமயம்’ – வரலாறும், வக்கணைகளும்” ஆய்வாளரான திரு.தி.சு. நடராசன் எழுதியிருக்கிற நூலின் தலைப்பில் உள்ள ‘வக்கணைகள்’ என்கிற பேச்சு வழக்கில் வரும் இயல்பான சொல்லாடல் கூடுதல் ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

தமிழின் பண்பாடு குறித்த சொல்லாடல் என்று நூல் ஆசிரியர் சொன்னாலும், இன்றைக்குள்ள பண்பாட்டுச் சிக்கலுக்கு மிக நெருக்கமாக இருக்கிறது இந்த நூலின் உள்ளடக்கம்.

ஆசிரியரே நூலின் முன்னுரையில் “இது வைதீக சமயம் பற்றிய முழுமையான நூல் அல்ல” என்று முன் கவனத்துடன் சொல்லியிருக்கிறார்.

இருந்தாலும், தமிழகச் சூழலில் ஒருவிதமான நெருக்கடி நிலவுகிற நிலையில் நமது மொழியின் தொன்மமும், தமிழர்களின் வாழ்வியல் சார்ந்த காலமும் தற்போது கேள்விக்குள்ளாகிக் கொண்டிருக்கிறது.

வடமொழி அழுத்தமாக அதிகாரத் தரப்பில் கவனப்படுத்தப்படுகிறபோது, நமது தொன்மையை உறுதிப்படுத்த ஆதிச்சநல்லூர் துவங்கி கீழடி வரை பல்வேறு தொல்லியல் சான்றுகள் இருந்தபோதும், அதை நம் வரலாறாக ஆவணப்படுத்துவதில் இன்னும் சிக்கல் நீடிக்கிறது.

ஏறு தழுவும் சல்லிக்கட்டுக்காக ஒன்று கூடிப் போராட வேண்டியிருக்கிறது.

பெருந்தெய்வம் என்கிற மரபு அழுத்தி மண் சார்ந்த சாமிகளின் மரபு பின்னொதுக்கப்படுகிறது.

வடமொழிக்கு அரசே வலிந்து உதவுகிற நிலையில், செம்மொழியான தமிழுக்கு இருக்கைகள் அமைக்க மன்றாட வேண்டியிருக்கிறது.

தமிழை மத்தியில் ஆட்சிமொழிகளில் ஒன்றாக்கக் குரல் கொடுத்தும் பலனில்லாத நிலை நீடிக்கிறது.

இப்படிப்பட்ட சூழலில் பண்பாடு சார்ந்த சில ஒளிக்கீற்றுகளை வெளிப்படுக்கிறது இந்த நூல்.

சமயம் என்பது ஒரு நிறுவனம் என்றும், ஓர் ஒழுங்கமைவு என்றும் நூலுக்குள் நுழையும்போதே உணர்த்துகிற நூலாசிரியர், பல கடவுளர்களை வணங்கும் வழிபாட்டு முறை தமிழகத்தில் இருந்திருப்பதைச் சொல்கிறார்.

சமயம் என்ற சொல்லே பழந்தமிழில் இல்லை என்று அவர் சொல்லியிருப்பதோடு, சைவம், வைணவம் என்கிற சொல் வழக்குகள் கூட துவக்க காலத்தில் இல்லை என்கிறார்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘மணிமேகலை’ காப்பியத்தில் தான் ‘சமயம்’ என்கிற சொல் இடம் பெற்றிருக்கிறது.

சைவம், வைணவம் என்கிற சொற்றொடர்கள் பிந்தைய காலகட்டத்தில் தான் இடம் பெற்றிருக்கின்றன.

கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகு இஸ்லாமியர்கள் இந்தியப் பகுதிக்குள் நுழைந்தபோது தான், சிந்து நதிக்கு அப்பால் வாழ்ந்தவர்களைக் குறித்த ‘இந்து’ என்கிற சொல்லைப் பயன்படுத்தியதாகச் சொல்லப்பட்டிருப்பது முக்கியமானது.

இந்து என்ற சொல்லாக்கத்தின் பின்னணியில் கூட இன்னொரு மதம் இருந்திருப்பதை இது உணர்த்துகிறது.

வடமொழி உயர்த்திப் பிடிக்கும் ரிக் வேதம் உள்ளிட்ட நான்கு வேதங்களில் என்ன இருந்தது? ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாசுரங்களில் இருந்தவை இந்திரனையும், விஷ்ணுவையும் போற்றிப் பாடப்பட்ட பாசுரங்கள்.

அவற்றை அந்தணர்களைத் தவிர, இதர வகுப்பினர் கற்பதே தடை விதிக்கப்பட்டு, மீறிக் கற்றால் தண்டனையும் விதிக்கப்பட்டிருந்தது.

பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் இங்கே பரவலாக வந்த பிறகே ‘இந்தியா’ என்கிற நிலப்பரப்பு சார்ந்த படிமம் உருவாகியிருக்கிறது.

பண்டைய இந்தியாவில் பலருடைய புலம் பெயர்வுகள் நடக்கின்றன. பௌத்தர்கள் வருகிறார்கள். சமணர்கள் வருகிறார்கள். பிராமணர்கள் வருகிறார்கள். அந்தப் புலம் பெயர்வின் ஊடே வடமொழியும் நுழைகிறது.

மறை என்றும் வேதம் என்றும் அதற்கு மதிப்பளிக்கப்படுகிறது.

‘நான் மறையாளர்’ என்கிறது சிலப்பதிகாரம்.

‘மறையோர்’ என்கிற சொல்லை தேவாரத்திலும், பெரிய புராணத்திலும் காண முடிகிறது.

கி.பி.எட்டாம் நூற்றாண்டுக்குப் பிறகே இறையனார் எழுதிய தமிழ் உரை நூலில் தான் ‘பிராமணர்’ என்ற சொல் இடம் பெற்றிருக்கிறது.

தொல்காப்பியத்திலும் நான்கு வருணங்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்தாலும், அவற்றை காலத்தின் இன்னொரு அடுக்கில் இடைச்செருகலாகச் சேர்க்கப்பட்டதாகவே கருதுகிறார்கள்.

திருக்குறள் சமண சமயச் செல்வாக்கோடு எழுதப்பட்டிருந்தாலும், அது சமய நூலாக அல்லாமல், நீதி நூலாகவே பார்க்கப் பட்டிருக்கிறது.

வைதீக சமயம் மதுரையைச் சுற்றிலும் இருந்த சமணப் பள்ளிகளில் சமணத்தை நகர்த்தித் தங்களுடைய சிலைகளை அமர்த்திக் கொண்டதற்கான தடயங்களை இன்றும் காணும்படி இருக்கிறது என்று சொல்கிற ஆய்வாளரான தி.சு.நடராசனின் கருத்தை மெய்ப்பிக்கும்படி இருக்கின்றன இன்றைய ஆய்வுகள்.

மதுரைக்கு அருகில் மிக முக்கியமான கோவிலே சமணக் கோவில் தான் என்பதைச் சில ஆய்வாளர்கள் குறிப்பிட்டபோதும், ஆனால் அவை மதம் மற்றும் சாதிய நோக்கம் சார்ந்து வெளிச்சத்திற்கு வரவில்லை.

பல்லவ மன்னர்கள் உள்ளிட்ட பல மன்னர்கள் பாலி மொழிக்கும், வட மொழிக்கும் முக்கியத்துவம் தந்து அவற்றை வளர்த்தபோது, சைவ, வைணவர்கள் தமிழ் மொழிக்கு அப்போது முக்கியத்துவம் தந்து மொழி உணர்வை ஊட்டினார்கள். கடவுள்களைத் தமிழுக்கு நெருக்கமாக்கினார்கள்.

தமிழ் இலக்கியங்களில் – குறிப்பாக சங்க இலக்கியங்களில் முதலில் சமயச் சார்பு இல்லை அல்லது தவிர்க்கப்பட்டது. பிறகு அறிவார்ந்த நிலைமாறி, உணர்ச்சி நிலை வடிவெடுத்து, நாயகன், நாயகி பாவங்கள் முன்வைக்கப்பட்டன. உதாரணம் ஆண்டாள்.

பௌத்த, சமண மதத்திலிருந்து பலர் சைவ மதத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். வைதீக மரபோடு முரண்பட்டவர்கள் திரளாகவும், தனியாகவும் கொல்லப்பட்டனர். (அதாவது கழுவேற்றப்பட்டனர்) (பக்கம் 88).

இன்றும் அதற்கான ஆதாரங்களை மதுரைக்கு அருகில் உள்ள கோச்சடைக்குப் பக்கத்திலும், சாம நத்தம் போன்ற கிராமங்களிலும், ஆவுடையார் கோவில் ஓவியங்களிலும், கோயில் சார்ந்த சடங்கு முறைகளிலும் உணர முடிகிறது.

கழுவேற்றம் கோவில் சார்ந்த சடங்குகளில் ஒன்றாகவே மதுரை, திருச்சி பகுதிகளில் நீடிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில் தான் கோவில் நிறுவன மயமாகிறது.

நிறையக் கோவில்கள் உருவாகின்றன. நாயன்மார்கள் காலத்தில் மட்டுமே 325 சைவக் கோவில்கள் தமிழ்ப் பரப்பில் இருந்ததாகச் சொல்கிறார் ஆசிரியர்.

உடனே புனிதம், தீட்டு, சடங்கு போன்ற பண்பாட்டு வடிவங்கள் கோவிலை ஒட்டி உருவாகின்றன. கோவில்களில் பண்டப் பொருட்களைப் போல ‘தேவரடியார்கள்’ உருவாகிறார்கள். ‘தளிச்சேரிப் பெண்டிர்’ உருவாகிறார்கள்.

சதிர்க் கச்சேரியை நிகழ்த்துகிற கலைஞர்களாக கோவில் சார்ந்து பெண்கள் இருந்தபோதும், அவர்களுக்குச் சமூக மதிப்பு பெரிதும் இல்லை.

சோழ மன்னர்கள் உயிரிழந்தபோது, அவர்களைப் புதைத்த இடத்தில் ‘பள்ளிப்படைகள்’ என்றழைக்கப்பட்ட கோவில்கள் உருவானதும் பதிவாகியிருக்கிறது.

பின்னர் எதிர்ப்பு எழுந்ததும் ‘பள்ளிப்படை கோவில்கள்’ கட்டுவது நிறுத்தப்பட்டிருக்கிறது.

இருந்தாலும், வைதிக மரபுக்கு எதிரான குரல்களும் அன்றே எழுந்திருப்பதைச் சொல்கிறது சித்தர் மரபு.

அந்த மரபு பதினான்காம் நூற்றாண்டுக்குப் பிறகு துவங்குகிறது. அதுவரை சடங்கு முறைகளில் நம்பிக்கை கொண்டிருந்த வைதீக மரபை எதிர்த்துக் கேள்வி கேட்கிறது சித்தர் மரபு.

சிவ வாக்கியார், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர் என்று ஏகப்பட்ட சித்தர்கள்.

“ஆதியுண்டு அந்தமில்லை அன்று நாலு வேதமில்லை” – சிவ வாக்கியர்
“கருத்தரிக்கும் முன்பெல்லாம் காயம் நின்றது எவ்விடம்
உருத்தரிக்கும் முன்னெல்லாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்” – அதே சிவவாக்கியர்
“நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலு புட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணமுணவென்று சொல்லும் மந்திரம் ஏதடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்”
“நாலு வேதம் ஓதுவீர் ஞானபாதம் அறிகிலீர்” – என்று சித்தர்கள் அப்போது நிலவி வந்த வைதீகத்தை எதிர்த்து எளிய மக்களுக்கும் புரியும் மொழியில் குரல் எழுப்புகிறார்கள்.

வைதீக மரபுகள் சைவம், வைணவம் என்று பிரிந்திருந்தாலும், நிறுவன மயமாக்கப்பட்ட நிகழ்வெல்லாம் பின்னரே நிகழ்கிறது.

பதினெட்டாம் நூற்றாண்டில் கும்பகோணத்திலும் பின்னர் காஞ்சியிலும் வைணவ மடங்கள் அமைக்கப்படுகின்றன. வடமொழிக்குச் சிறப்பான முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

சோழர் ஆட்சியில் சைவ மடங்கள் உருவாகின்றன. பதினாறாம் நூற்றாண்டில் திருவாவடுதுறை மடம் துவங்கி, தருமபுரம், மதுரை என்று பல இடங்களில் சைவ மடங்கள் நிறுவப்படுகின்றன.

தமிழ் மொழிக்கு அவற்றில் முன்னுரிமை தரப்பட்டது. சிவஞானபோதம் எல்லாம் தமிழில் வெளி வந்தது.

அந்தணர் அல்லாத வேளாளர்களுக்குச் சந்நியாசம் பெறும் உரிமை கிடையாது என்கிற குரல் எழுப்பப்பட்டு, தஞ்சையில் நாயக்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் பெரும் விவாதமே நடந்திருக்கிறது.

அதற்காகவே சிவாக்கிர யோகி என்பவர் சைவர்களுக்கும் உரிமையுண்டு என்பதை நிரூபிக்கிற விதமாக, கிரியா தீபிகை, சைவ சந்நியாச பத்ததி என்று இரண்டு நூல்களை வடமொழியில் எழுத வேண்டியதாயிற்று என்றால் அப்போதிருந்த எதிர்ப்பைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை திருவாவடுதறை ஆதினத்தில் வித்வானாக இருந்தவர் என்பதையும், அவருடைய மாணாக்கர் தான் உ.வே.சாமிநாதய்யர் என்பதையும் இந்தச் சமயத்தில் நினைவுகொள்ள வேண்டும்.

இதே மடங்கள் தான் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடியெடுக்க வாய்ப்பை ஏற்படுத்தி அச்சிலேற்றிக் காலத்தின் இன்னொரு பகுதிக்கு தமிழை எடுத்துச் சென்றன.

சைவ சீர்திருத்தக் குரல்களையும் நாம் இதே காலகட்டத்தில் கேட்க முடிகிறது.
அதாவது இரண்டு விதமான குரல்கள்.

முதலாவது – நிர்பந்தமாகத் தங்கள் மீது திணிக்கப்பட்ட சடங்குகளுக்கும், ஆச்சாரத்திற்கும், குறிப்பிட்ட சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக எழுந்த உணர்வு.
இரண்டாவது வடமொழி ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்த தமிழ் உணர்வு.

இந்த இரண்டு போக்குகளையும் அக்காலத்திய பதிவுகளில் நாம் அவதானிக்க முடிகிறது.

பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த தாயுமானவர்,

“நெஞ்சகமே கோயில். நினைவே சுகந்தம்” என்றும்,
“எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே” என்ற அவருடைய வரிகளில் மன நெகிழ்வை உணரமுடிகிறது. யார் மீதும் வெறுப்பற்ற அன்பு நிலையையும் உணரமுடிகிறது.

அதே சமயத்தில் “மொழியிலும் அடங்கா யுகத்திலும் அடங்கா ஒரு விதத்திலும் அடங்கா” என்று எதிர்க்குரல் கொடுக்கிறார் வைகுண்ட சாமிகள்.

இம்மாதிரியான குரல்களை எழுப்ப வேண்டிய தேவை ஏன் இருந்தது? பொதுவெளியில் சாதியால் ஒதுக்கப்பட்டிருந்த சமூகத்தினரைப் பார்ப்பது, அவர்கள் தெரு வழியே நடப்பது கூடத் தீட்டாக உணரப்பட்டது.

அந்தச் சமூகப் பெண்கள் எம்மாதிரி உடை அணிவது, ஆண்கள் எம்மாதிரித் தோற்றம் அளிக்க வேண்டும் என்பதைக் கூட நிர்பந்தமாக்கினார்கள்.

பெண்களுக்கு மேலாடை அணிய அனுமதி மறுத்து, அவர்களுடைய மார்புக்கு வரி விதிக்கப்பட்ட கொடுமை எல்லாம் நிலவியது. இதை உயிரைக் கொடுத்துப் போராடிய பெண்களும் இருந்தார்கள்.

இந்தச் சமூக அவலத்தை எதிர்த்தே வைகுண்ட சாமிகள், அய்யன்காளி, நாராயணகுரு என்று பலரும் போராடினார்கள். பெண்கள் மேலாடை அணியவும், ஆண்களை தோளில் துண்டு போடவும் கிடைத்த உரிமைகள் அவ்வளவு லேசில் வந்துவிடவில்லை.

இதே மாதிரி கோவிலில் நுழைய சில சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அதற்கு மாற்றாக வைகுண்ட சாமிகளைப் போன்றவர்கள் தனிக் கோவிலை உருவாக்கித் துண்டை அணிந்து, கண்ணாடியையே வழிபடச் சொன்னார்கள்.

பெரியாரும், திராவிட இயக்கங்களும் இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்தன.
அதே அவலம் தமிழக மக்கள் மத்தியில் புழங்கிய தமிழ் மொழிக்கும் ஏற்பட்டது.

“சமஸ்கிருதம் எல்லா மொழிகளுக்கும் தாய் மொழியாயின், தமிழ் தந்தை மொழி” என்று சங்கராச்சாரியாரிடமே நேரடியாகச் சொன்ன ‘திருவருட்பா’ இயற்றிய வடலூர் ராமலிங்க அடிகள் என்று பலரின் குரல்கள் வைதீக மரபை எதிர்த்து எழுந்திருக்கின்றன.

அதே சமயம் தமிழ் மொழியின் மேன்மையையும் உயர்த்திப் பிடித்திருக்கின்றன.

“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதி அநாதியாம் அருட்பெருஞ் ஜோதி” என்று மிக எளிமையான மக்களுக்கான மொழியில் தன் கருத்தை முன்வைத்த வடலூர் ராமலிங்க அடிகள் இறுதிக் காலத்தில் பூட்டிய அறைக்குள் ஒளியைப் போல மறைய வேண்டியதாயிற்று.

தில்லை நடராசர் கோவிலுக்குள் அப்போது ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த வகுப்பைச் சேர்ந்த நந்தன் கோவிலுக்குள் நுழைந்து காணாமல் போக வேண்டியதாயிற்று.

அதே தில்லையில் 16 ஆம் நூற்றாண்டில் இதே கோவிலில் பெருமாள் வழிபாடு இல்லாமல் இருந்திருக்கிறது.

விஜயநகர மன்னரான அச்சுத ராயர் காலத்தில் மீண்டும் தில்லைக் கோவிலில் பெருமாளின் சிலை நிறுவப்படுகிறது. திருப்பணி நடக்கிறது. கருடத்தூண் நிர்மாணிக்கப்படுகிறது.

அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து அங்குள்ள தீட்சிதர்கள் குடும்பத்தைச் சேர்ந்த இருபது பேர் கோவில் மீது ஏறிக் குதித்துத் தற்கொலை செய்திருக்கிறார்கள். சில மாற்றங்களுக்குக் கூட இப்படிப்பட்ட எதிர்வினை.

இந்த நிகழ்வு பல நூல்களில் பதிவாகியிருக்கிறது. திருவரங்கம் கோவிலிலும் கோபுரத்தின் மீது ஏறித் தற்கொலைகள் நடந்திருப்பதைப் பதிவு செய்கிறது “கோயில் ஒழுகு” என்கிற நூல்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த தஞ்சைப் பெருவுடையார் கோவிலுக்குள் ஒரு கால கட்டத்தில் நுழைந்த அல்லது நுழைக்க வைக்கப்பட்ட வடமொழி, அண்மைக்காலம் வரை கருவறை மொழியாக தன்னுறுதியை நிலை நாட்ட முடிகிறது.

தமிழுக்கோ எதிர்ப்புக் குரல்கள் கூட்டாக எழுந்த பிறகே அரசின் அனுமதி கிடைக்கிறது.

சித்த மரபில் வந்த போகரின் சீடரான புலிப்பாணிச் சித்தரால் உருவாக்கப்பட்ட இன்றும் தமிழர்கள் பெருமளவில் பக்தர்கள் குவிகின்ற கோவிலான பழனியில் கருவறையில் உள்ள நவபாஷாணக் கலவையில் உருவான முருகன் சிலையை உருவாக்கியவர் புலிப்பாணி சாமிகள்.

அவரைத் தொடர்ந்து முருகன் சிலையை அர்ச்சித்து வழிபட்டு வந்த அவர்களுடைய வாரிசுகள் அதே கோவிலில் இருந்து திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் அகற்றப்பட்டு, இன்னொரு சமூகத்தினர் பழனி கோவிலுக்குள் நுழைக்கப்படுகிறார்கள்.

சில உரிமைகளோடும், அதற்கான தாமிரப்பட்டயத்தோடும் பழனி கோவிலை விட்டு வெளியேற்றப்படுகிறார்கள் சிலையை உருவாக்கிய புலிப்பாணி சாமிகளின் வாரிசுகள்.

தங்களுடைய முன்னோர்கள் உருவாக்கிய நவபாஷாண சிலை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சேதம் அடைந்ததாகச் சொல்லப்பட்டபோது, அவர்களுடைய முன்னோர்கள் உருவாக்கிய முருகன் சிலையைப் பார்வையிட கோவில் கருவறைக்குள் செல்லக்கூட அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
பக்தர்கள் வேண்டினால் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்பதே ‘அங்குள்ள நிலை.

தமிழ்க் கடவுளாகச் சொல்லப்படும் முருகனுக்கே இது தான் நிலைமை.
அறுபதுகளுக்குப் பிறகு மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் சாதாரண பக்தரான திருநாவுக்கரசர் என்பவர் தேவாரம், திருவாசகம் பாடல்களை மனப்பாடமாகப் பாடிக் கோவிலுக்குள் வலம் வந்திருக்கிறார். அதற்கும் எதிர்ப்பு.

கோவில் நிர்வாகம் சார்பில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிமன்றத்தில் அந்தப் பக்தர் தமிழில் பாடிக் கோவிலை வலம் வரக்கூடாது என்று இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருப்பது இன்னொரு உதாரணம்.

1920-ல் திருவையாறு தியாகராசர் கோவிலைக்கட்டிய தேவதாசி மரபில் வந்த நாகரத்தினம் என்பவர் அதே கோவிலுக்குள் பெண்களைப் பாட வைக்க முயற்சித்தபோது, பாட மறுப்புத் தெரிவிக்கப்பட்டது.

அத்துடன், தமிழிசையை அங்கு பாடிய தண்டபாணி தேசிகர் பாடி முடித்த பிறகும் கோவிலைக் கழுவித் தீட்டுக் கழித்ததும் இங்கு தமிழுக்கு நேர்ந்த அவலங்கள்.

“தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் இராமானுசன்” என்று இராமானுசர் நூற்றந்தாதியில் திருவங்கத் தமுதனாரும்,

“விதையாய் நற்றமிழை வித்தி, விதையாக என்
உள்ளத்தே நீ விதைத்தாய்” என்று திருமழிசை ஆழ்வாரும்,

“வேறொன்றும் நானறியேன்
வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன்” என்று நாதமுனிகள் உட்படப் பலரும் பாடிப் புகழ்ந்த அதே தமிழ்மொழியைத் தான் கோவிலுக்குள் பயன்படுத்த மறுக்கிற மொழியாக உருமாற்றியிருக்கிறார்கள் ஒரு பிரிவினர்.

இதே உணர்வின் நீட்சியாகத் தான் இப்போதும் தமிழக அரசின் அறநிலையத் துறையின் நிர்வாகப் பொறுப்பின் கீழ் இருக்கும் 3500 க்கும் மேற்பட்ட கோவில்களில் சமஸ்கிருத மொழியில் மட்டுமே அர்ச்சனை நடந்து கொண்டிருக்கிறது.

இந்த அவலத்தின் உச்ச நிலைதான் ‘தமிழ் மொழியை நீச பாஷை’ என்று குறிப்பிட்ட சாராரைச் சொல்ல வைத்திருக்கிறது.

கோவில் கருவறையில் வழிபாட்டுக்குரிய மொழியாக தமிழுக்கு இருக்கிற சிக்கல்களைக் குறித்து இதே நூலில், அதே சைவ சித்தாந்த மடங்கள் தமிழைக் கோவிலில் வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு உரிய முறையில் குரல் கொடுக்கவில்லை என்பதையும் ஆசிரியர் சொல்கிறார்.

உயர்சாதியாகச் சொல்லப்பட்ட ஒரு பிரிவினருக்கு எதிரான அடுத்த அடுக்கில் இருந்த சாதியினரால் உருவாக்கப்பட்ட சைவ மடங்கள் தமிழை வளர்க்கப் பாடுபட்டாலும், ஓலைச்சுவடிகளைச் சேகரித்துப் பாதுகாக்க உதவினாலும், மதம் மற்றும் சாதியக் கட்டுமானத்தின் இறுக்கமான பிடியிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவில்லை என்பதையும் குறிப்புணர்த்திச் சொல்கிறார்.

சிந்து சமவெளி நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் பற்றிய பேச்சுகள் எல்லாம் நாடாளுமன்றத்திலேயே கேட்கிற சம காலத்தில், சிந்து சமவெளி நாகரிகத்திற்கு முன்பே ஆதியில் திராவிட நாகரிகம் இருந்ததை, தற்போது ஆர்.பாலகிருஷணன், இ.ஆ.பெ. போன்றவர்கள் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் கருத்தை, இந்த நூல் வெளியான 2006-ம் ஆண்டு வாக்கிலேயே சொல்லியிருக்கிறார் தி.சு.நடராசன்.

தமிழ்ப்பரப்பின் தொன்மையையும், தமிழ் மொழியின் தொன்மையும் ஒரு சேர உணர்த்தும் நூலில் இவர் கையாளும் மொழி நடை லாவகமான மொழி நடை.

பொருளில் வேகம் இருந்தாலும், சொல்வதில் இங்கிதமான மொழி நடையுடன் சொல்லிச் செல்கிற இந்த நூல் – வைதிக மரபு சார்ந்த ஆய்வாளர்களுக்கு அறிவியல் மற்றும் வரலாற்றியல் சார்ந்த ஒளியைக் கொடுக்கும் நூல்.
நிறைவாக அவர் இந்த நூலில் இப்படிச் சொல்கிறார்.

“உணர்வு நிலைகளின் மீது ஆதிக்கம் செலுத்துவது, அதிகார அரசியல் ஆக்குவது, வணிக மயமாக்குவது என்ற நிலைகள், சமயங்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது”
உண்மை தான்.

அதிகார அரசியல் தமிழ் மொழி, பண்பாடு, தமிழக வாழ்வியலின் மேல் படர்ந்து ஆதிக்கம் செலுத்தும் இன்றைய சூழலில், தமிழின் தொன்மங்களுக்குப் பின்னிருக்கிற பல ‘வக்கணைகளை’, இனங்காட்டி நம் மரபின் வரலாற்றை காட்டிலோர் பொந்திடை கதகதக்கும் அக்னிக்குஞ்சைப் போன்ற இளம் வெப்பத்துடன் பதிவிட்டிருக்கிறது தி.சு.நடராசன் அவர்களின் இந்த நூல்.

தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கவனம் பெற வேண்டிய இந்த நூலில் இருந்து பெறும் வெளிச்சம் நாளைய மக்கள் சார் ஆய்வுகளுக்கு வழிகாட்டுவதாக இருக்கும்.

நன்றி : மார்ச் 1, 2022 அன்று வெளியான ‘நிலவெளி’ இதழ்

Comments (0)
Add Comment