தலைவருக்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் ஜானகி அம்மையார்!

– சென்னை பெருநகர முன்னாள் மேயர் சைதை துரைசாமி

நம்முடைய போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரிய இன்றும் நினைவில் இருக்கக்கூடிய அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு சிறப்பு மலருக்காக என்னுடைய நினைவில் உள்ளவற்றை, அதில் சிலவற்றை மட்டும் நான் இந்தத் தருணத்தில் பகிர்ந்து கொள்கிறேன்.

புரட்சித் தலைவர் அவர்களை நான் இராமாவரம் தோட்டத்தில் 1970-71-களில் சந்தித்த நாளிலிருந்து நான் அவர்களைப் பற்றி கேள்விப்பட்டது, பார்த்தது, அனுபவ ரீதியாக உணர்ந்ததைப் பகிர்ந்து கொள்கிறேன்.

அந்தக் காலத்தில் அங்கே இருந்த பாதுகாவலர்கள், குறிப்பாக கிருஷ்ணன் என்பவர் அன்று இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர். அவரை நீண்ட காலமாக நான் அறிந்த நாளிலிருந்து அவரைப் பார்த்திருக்கிறேன். தலைவரைப் பார்க்க அவரிடம் தான் சொல்லி அனுப்புவோம்.

இயக்கம் தொடங்கியதற்கு பின்னால் ஆறு மாத காலம் தலைமைக் கழக அலுவலகத்திற்கும், மாம்பலம் அலுவலகத்திற்கும், ராமாவரம் தோட்டத்திற்கும் சென்று வருகின்ற நெருக்கமான ஒரு வாய்ப்பை நான் பெற்றேன்.

அதாவது டிசம்பர் மாதத்திலிருந்து திண்டுக்கல் தேர்தல் வரை இந்த இடைப்பட்ட காலங்களில்.

அப்பொழுது தலைவர் என் மீது கொண்டிருக்கிற அக்கறையை ஜானகி அம்மாவிடத்தில் சொல்லி இருக்கிறார்.

அதனால் நான் இராமாவரத் தோட்டத்திற்குச் சென்றால் அங்கே கிருஷ்ணன் அவர்களும், சமையலர் மணி அவர்களும் என் மீது தனி அக்கறை கொண்டு கவனிப்பார்கள். இது தலைவரின் உத்தரவு என்று சொல்லுவார்கள்.

எனக்கு மிகவும் அந்த ஆச்சரியமாக இருக்கும். தோட்டத்தில் வழங்கப்படும் உணவு பிரமாதமாக இருக்கும். தலைவர் தோட்டத்தில் சாப்பிட்ட உணவுகள் எல்லாம் இன்றைக்கும் நினைவில் இருக்கத்தக்க வகையில் சிறப்பாக இருந்தது.

ஜானகி அம்மா அவர்களின் மேற்பார்வையில்தான்  உணவு பரிமாறப்படும் என்பதை நினைக்கின்ற பொழுது, இன்றும் அவர்களைப் பற்றிய அந்த மதிப்பும், மரியாதையும் பசுமையாக நீடித்துக் கொண்டே தான் இருக்கிறது.

புரட்சித்தலைவரின் மனிதாபிமான சிந்தனைகளை, எண்ணங்களை அப்படியே உள்வாங்கி அவர் எதை விரும்புகிறார் என்பதை நன்கு அறிந்து செயல்படுவார் ஜானகி அம்மா. தோட்டத்திற்கு யார் வந்தாலும் பசியுடன் சென்றுவிடக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறையுடன் இருந்தார்.

புரட்சித் தலைவருடைய கொள்கைக்கும், அவருடைய எண்ணத்திற்கும் வலிமை சேர்க்கின்ற வகையில் ராமாவரம் தோட்டத்தைப் பராமரித்தார்கள், பாதுகாத்தார்கள்.

எல்லோருக்கும் என்ன தேவை என்பதை புரிந்து உணர்ந்து, முறையாகக் கவனிக்க வேண்டும் என்ற உத்தரவையும் பிறப்பித்து புரட்சித்தலைவருக்குப் பெரும் புகழை சேர்த்தார்கள்.

தலைவருக்கு உதவியாளராக தோட்டத்தில் இருந்த சபாபதி, குண்டு கருப்பையா மகாலிங்கம், ஓட்டுநர் ராமசாமி, கதிரேசன் உள்பட அங்கே, பணியாற்றியவர்கள் தலைவரின் குறிப்பறிந்து செயல்படக் கூடியவர்களாகவும், எல்லோரிடமும் அன்பாகப் பழகக்கூடிய தன்மை கொண்டவர்களாகவும் இருந்தார்கள்.

தான் சொல்லுகின்ற காரியத்தையும் கூடத் தலைவரின் விருப்பப்படிதான் செய்ய வேண்டும் என விரும்புவார் ஜானகி அம்மா. அப்படியொரு மேம்பட்ட பண்பு கொண்டவர் அவர்.

அப்படிப்பட்ட ஜானகி அம்மா என் மீது நல்ல அன்பு கொண்டிருந்தார்கள். 1977-ம் ஆண்டு தேர்தல் வந்தது. அப்போது அந்தத் தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதியில் என்னை நிற்க வைப்பதற்காக எனக்கு சைதை என்ற அடைமொழியை கொடுத்திருந்தார் தலைவர்.

ஜானகி அம்மா முதல்வராக இருந்தபோது, “உங்களுக்கு அமைச்சர் பதவி வழங்க முடியாமல் போனதை எண்ணி வருந்துவதாக தலைவர் என்னிடம் ஒருமுறை கூறினார்” எனச் சொன்னார்கள்.

ஜானகி அம்மா தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி வந்தவர் அண்ணன் ஆர்.எம்.வீ அவர்கள்.

தலைவரின் மனைவி ஜானகி அம்மா தான் தலைவரின் எண்ணங்களை பிரதிபலிக்க முடியும் என்பதால், அவர் தான் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஜானகி அம்மா தான் அந்த இடத்திற்கு வர வேண்டும் என அழுத்தமாகச் சொன்னார்கள். இப்படி எல்லோராலும் முழுமனதோடு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டவர் ஜானகி அம்மா.

சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களை ஆதரித்தபோது அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், “உங்களுடைய அன்புக்குக் கட்டுப்பட்டு உங்களுடைய எண்ணத்தின்படி புரட்சித் தலைவரின் இயக்கத்தைக் காப்பாற்றுவதற்காக நான் உங்களது முடிவையும், ஆதரவையும் ஏற்று முதல்வராக செயல்பட ஒப்புக் கொள்கிறேன். ஏற்றுக் கொள்கிறேன்” என்றார்.

சிறிது காலம் அவர் தமிழக முதல்வராகப்  பதவி வகித்து விலகிய பிறகு கட்சியில் பிளவு ஏற்பட்டது.

அப்போது தலைவரின் மறைவிற்குப் பிறகும் கட்சி நீடித்து இருக்க வேண்டும் என்ற தலைவரின் விருப்பத்தை மனதில் கொண்டு, கட்சி பிளவுபட்டிருந்தால் அதிமுக இயக்கம் வீணாகிப் போய்விடும் என முடிவு செய்து பெருந்தன்மையோடு புரட்சித்தலைவி அம்மாவிடம் இயக்கத்தை ஒப்படைத்து இரட்டை இலைச் சின்னத்தை மீண்டும் கழகத்திற்குப் பெற்றுக் கொடுத்தார் ஜானகி அம்மா.

இன்றைக்கு இவ்வளவு பெரிய வெற்றியை பெற்ற கட்சியாக அதிமுக இருக்கிறது என்று சொன்னால், அது ஜானகி அம்மா அவர்களுடைய பெருந்தன்மையும், கருணையும், அவர்களுடைய தொலைநோக்குச் சிந்தனையும்தான் காரணம்.

புரட்சித் தலைவர் என்ன விரும்பினாரோ அதை நிறைவேற்ற வேண்டும் என்கிற அவரது முடிவு தான் கட்சியினுடைய இணைப்பு.

தான் நன்றாக இருப்பதை விடக் கட்சி நன்றாக இருக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவார் ஜானகி அம்மா.

அந்தத் தாய் உள்ளத்தோடு அவர்கள் எடுத்த முடிவுதான் இன்றைக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கம் – மக்கள் மத்தியிலே இன்றைக்கும் தொடர்ந்து 50 ஆண்டுகளைக் கடந்து நீடித்து நிற்கக் காரணமாக அமைந்திருக்கிறது.

ஜானகி அம்மா தலைவரிடம் இருந்து கற்றுக்கொண்ட மிகப்பெரிய பண்புகளில் ஒன்று ஈகைக் குணம். பண்பு, பரிவு, பாசம் என்ற மனிதநேயச் சிந்தனைகளை உள்ளடக்கியவராக வாழ்ந்தார் ஜானகி அம்மா.

ஜானகி அம்மா அவர்களுடைய பெருந்தன்மை குறித்து இன்னொன்றையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

தான் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் வாங்கிய சென்னை லாயிட்ஸ் சாலையில் சத்யா திருமண மண்டபமாக இருந்த இன்றைய தலைமைக் கழகத்தை மிகப்பெரிய பெருந்தன்மையோடு கட்சிக்குத் தானமாகக் கொடுத்தார் ஜானகி அம்மா.

அவர் கடைசி வரையிலும் தான் தானமாகக் கொடுத்த அந்தச் சொத்தின் மீது எந்தவிதமான உரிமையும் கொண்டாடவில்லை.

இன்றைக்கு தலைமைக் கழகம் லாயிட்ஸ் சாலையில் கட்சி அலுவலகமாக இருக்கிறது என்றால் அது ஜானகி அம்மையார் கொடுத்த நன்கொடை. அது அவருடைய சொத்து.

இப்படிப் புரட்சித் தலைவரைப் போலவே தன்னால் இயன்ற பங்களிப்பை இந்த இயக்கத்திற்கும், மக்களுக்கும் செய்திருக்கிறார் ஜானகி அம்மா. புரட்சித் தலைவரின் மறைவுக்குப் பின்னால் அவர்களுடைய சேவை மனப்பான்மை மிகப்பெரிய அளவில் விரிந்து பரந்து இருந்தது.

எல்லாவிதமான சங்கடங்களையும், எல்லா விதமான துரோகச் செயல்களையும் கடைசி வரை மன்னித்து, அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஜானகி அம்மா தன்னுடைய சேவையை மட்டும் புரட்சித் தலைவர் பாதையில் முன்னிறுத்தி மனிதநேய சிந்தனைகளை மட்டுமே செயல்படுத்தி வந்தார்.

இராமாயணக் காவியத்தில் இருக்கின்ற ராமச்சந்திரனின் துணையான ஜானகி தேவி ஒரு வரலாற்றைப் படைத்ததுபோல, தமிழக வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மனிதராக வாழ்ந்த மனிதரில் புனிதரான புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு உற்ற வாழ்க்கைத் துணைவியாக இருந்தவர் ஜானகி அம்மா.

எம்.ஜி.ஆர். அவருடைய சுக துக்கங்களில் எல்லாம் ஈடுபாடு கொண்டு, அவரைத் தாய் போலக் கவனித்துக் கொண்டவர் ஜானகி அம்மா. புரட்சித்தலைவருக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்தார். அவரை தன் கண்ணிமை போலக் காத்தவர் அவர்.

இன்றைக்கு நூற்றாண்டை அடைந்தும் நம் நினைவுகளில் நிறைந்திருக்கிறார் என்றால் அதற்கு இந்த நூறாண்டுகளில் அவர் செய்த அர்பணிப்புதான் மிக முக்கிய காரணம்.

அதனால்தான் அன்று ஜானகி அம்மையாரை அருகில் இருந்து பார்த்தவர்கள், அவரைப்பற்றி உண்மை தெரிந்தவர்கள், அவருடைய பண்புகளை, பாசத்தைப் புரிந்தவர்கள், அவருடைய மனிதநேயச் சிந்தனையை உணர்ந்தவர்கள் என எல்லோரும் இன்றைக்கும் அவரைப் போற்றிப் பாராட்டிக் கொண்டிருக்கிறோம்.

எம்.ஜி.ஆர். விருப்பப்படி அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். அவர்களின் பெயரில் அவர்களது பேரனான முனைவர்  குமார் ராஜேந்திரன் ஒரு மகளிர் கல்லூரியை தொடங்கி  எம்.ஜி.ஆருக்கும், ஜானகி அம்மாவுக்கும் சிறப்புச் செய்து கொண்டிருக்கிறார்.

இந்தக் கல்லூரியில் ஆண்டுதோறும் சுமார் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயிலுகின்ற வகையில் மிகப்பெரிய கல்வி நிறுவனத்தைச் சிறப்பாகச் செம்மையாக நடத்தி வருகிறார்.

இன்றைக்கு ஏழை எளியவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் என எல்லாத் தரப்பு மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் இடம் கொடுத்து, தரமான கல்வியைக் கொடுத்து, அன்னை ஜானகி எம்ஜிஆருடைய பெயர் நிலைத்து நிற்கின்ற வகையில் தலைமுறை தாண்டி இந்தக் கல்விப் பணியைச் செய்து வருகின்றார்.

அதை இந்த நேரத்தில் குறிப்பிடுவது மிக அவசியம் என்று கருதுகிறேன். இந்த நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவர்கள் இன்னும் அவர்களுடைய பெயரில் பல்வேறு விதமான கல்விச் சேவையை தொடருவார் என்று நம்புகிறேன்.

எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கல்லூரி என்பது சென்னையில் மட்டுமல்ல, தமிழகத்திலேயே ஒரு குறிப்பிட்ட கல்லூரியாக இடம் பெற்றிருப்பதும் அங்கே தரமான கல்வி வழங்கப்படுகிறது  என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

திருமதி ஜானகி அம்மாவின் நூற்றாண்டு தொடங்குகின்ற நேரத்தில் அவர்களுக்கு மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும்படியான புகழை இது சேர்த்திருக்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நல்ல துணையாக வாழ்ந்து, இன்றைக்கும் மக்களின் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிற புரட்சித் தலைவரின் மனைவி என்ற பெருமையையும், அவருடைய மனிதாபிமான சிந்தனைகளை உள்வாங்கி அவரைப் பராமரித்தார், பாதுகாத்தார் என்ற பெருமையும் இன்றைக்கு அவர் பெயரில் ஒரு  பெண்கள் கல்லூரியை உருவாக்கி  பெண்கள் சமூகத்திற்கு மிகப்பெரிய பயனைத் தருகின்ற வகையில் ஜானகி அம்மா அவர்களுக்கு ஒரு நீடித்த புகழையும் பெருமையும் ஏற்படுத்தி இருக்கிறார் குமார் ராஜேந்திரன்.

அவருடைய தாயார் திருமதி.லதா ராஜேந்திரன் அவர்களும், அவரது தந்தையார் மறைந்த  ராஜேந்திரன் அவர்களும் ஒரு பாதுகாப்பு அரணாக இருந்து அவருக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

புரட்சித் தலைவரின் எண்ணப்படியும், அன்னை ஜானகி அவர்களின் எண்ணப்படியும் இராமாவரம் தோட்டத்தில் இன்றைக்கு காது கேளாதோர், வாய்பேச முடியாதோருக்கான பள்ளியைச் சிறப்பாக நடத்தி அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த பன்முகத்தன்மைகளோடு, புரட்சித் தலைவருக்குப் பிறகும், அன்னை ஜானகி எம்.ஜி.ஆருக்குப்  பிறகும், அவர்களுடைய எண்ணத்தை, நோக்கத்தைச் செயல் வடிவமாக்கி வருகின்ற திருமதி. லதா ராஜேந்திரன் அவர்களையும், திரு. குமார் ராஜேந்திரன் அவர்களையும், அவரோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்ற அனைவரையும் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.

Comments (0)
Add Comment