நான் கருணாநிதி பேசுறேன்…!

கலைஞர்-100: பத்திரிகையாளர் பார்வையில் கலைஞர்
– மணா

*

காலை மணி ஐந்தரை வாக்கில் வீட்டுத் தொலைபேசி மணி அடித்து எடுத்தபோது எதிர்முனையில் கலைஞர்.

வியப்பாக இருந்தது. அன்று காலை நான் பணியாற்றி வந்த பிரபல வார இதழில் அவருடைய பேட்டி வெளியாகி இருந்தது.

“பேட்டி எடுத்ததைச் சிதைக்காமல் வெளியிட்டிருக்கீங்க. பெர்பெக்ட்டா இருக்கு… நல்லது… சந்திப்போம். இனி தயங்காம வாங்க’’ – சுருக்கமாகத் தந்தி அடிக்கிற மாதிரி ரத்தினச் சுருக்கமாகப் பேசி விட்டு வைத்துவிட்டார்.

அப்போது ‘முரசொலி’யில் பணியாற்றிக் கொண்டிருந்த மூத்த நண்பர் சின்னக்குத்தூசி தான் அவரைச் சந்தித்துப் பேட்டி எடுப்பதற்குக் காரணமாக இருந்தார்.

அதற்குப் பிறகு பல தடவைகள் அவரைச் சந்திக்க முடிந்திருக்கிறது. பேட்டிக்காக அவருடைய உதவியாளர் சண்முகநாதனைத் தொடர்பு கொண்டால் போதும். பெரும்பாலும் இரண்டு நாட்களுக்குள் அவரைச் சந்தித்து விடமுடியும் என்பது தான் சிறப்பு.

இரண்டு, மூன்று சந்திப்புகளுக்குப் பிறகு நெருக்கமான உணர்வுடன் பேச ஆரம்பித்தார். பேட்டிக்காகப் போகும்போது கால் மணி நேரம் வரை பொதுவான அரசியல் விஷயங்களை நம்பிக்கையுடன் பேசிவிட்டுப் பிறகு பேட்டிக்குத் தயார் ஆவதற்குள் சற்றே இறுக்கம் தளர்ந்த மனநிலைக்கு வந்திருப்பார்.

கேள்விகளுக்காக எடுத்துக் கொண்ட ‘ஹோம் ஒர்க்’கை மென்மையான புன்னகையுடன் ரசிப்பார். கேள்வியின் தொனிக்கேற்ப பொருத்தமான பதில் வரும்.

விமர்சனரீதியான கேள்வியைக் கேட்கும்போது கூட “இந்தக் கேள்வி வேண்டாமே..’’ என்ற பதிலை எப்போதும் சொன்னதில்லை. “பேட்டி காண வருகிறவர்கள் எடுத்துக் கொள்ளும் சிரத்தை, குரல், முகபாவம் கூட தகுந்த பதிலைச் சொல்வதற்கு ஊக்கப்படுத்துகிறது’’ என்றார் ஒருமுறை.

“கடுமையான கேள்வியைக் கூட மிக மென்மையான குரலில் கேட்கிறீர்கள்.. அதனால் கோப‍ப்பட முடியவில்லை’’ என்று சொல்லிவிட்டுச் சிரித்திருக்கிறார்.

சில சமயங்களில் பேட்டியின்போது ‘டேப் ரிக்கார்டரை’ப் பயன்படுத்தினாலும் “எழுதி முடிச்சதும் டைப் செட் பண்ணின காப்பியை வந்து என்கிட்டே காண்பிச்சுட்டுப் போயிடுங்க’’ என்றும் சொல்லியிருக்கிறார்.

கோபாலபுரம் வீட்டில் ஒருமுறை அவரிடம் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தபோது, தேசிய அரசியல் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது சட்டென்று பேச்சை நிறுத்தியவர் “நான் இப்போது சொன்னது தவறாகப் புரிந்து கொள்ற வித‍த்தில் அமைஞ்சிரும். அதனால் நீங்க டேப் பண்ணியிருந்தாலும், இது மட்டும் ஆப் தி ரிக்கார்டு.. என்ன? பேட்டி முடிஞ்சதும் எல்லாத்தையும் எழுதி எடுத்துட்டு நாளைக்குக் காலையில் வந்துருங்க’’ என்றார்.

அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த நேரம். மறுநாள் கையால் எழுதிய பேட்டியின் பிரதியை எடுத்துக் கொண்டு தலைமைச் செயலகத்தில் இருந்த அவருடைய அறைக்குப்போனதும் அமரச் சொன்னார்கள். சட்டமன்றத்திற்குள் இருந்த கலைஞருக்குத் தகவல் போய், கொஞ்ச நேரத்தில் அந்த அறைக்கு வந்தார்.

கையில் இருந்த பேட்டியைக் கவனமாகப் படித்தவர் பிரதியில் சில மாற்றங்களை விரைவாகச் செய்துவிட்டு “நான் சொன்ன பகுதியை சொன்னபடியே தவிர்த்திருக்கீங்க.. சரி.. கிளம்புறேன்’’ – சொல்லிவிட்டு மீண்டும் சட்டமன்றத்திற்குள் சென்றுவிட்டார்.

ஒரு பேட்டி வெளிவருவதற்கு அவர் காட்டிய அக்கறை ஆச்சர்யப்படுத்தியது.

“நாம செய்ற எந்த வேலையிலும் ஒரு பெர்பெக்சன்’’ இருக்கணும்னு எப்போதும் நினைப்பேன். இளம் வயசில் திருவாரூர்லே கட்சிக்கூட்டம் நடத்தறப்போ போஸ்டர்கள் கூட ஒட்டியிருக்கேன்.. அதிலேயும் ‘பெர்பெக்சன்’ பார்ப்பேன்.

அவ்வளவு நேர்த்தியா ஒட்டியிருப்பேன். நாடகம், சினிமா, அரசியல் எல்லாவற்றிலும் அதே இயல்போடு தான் இருந்திருக்கேன்’’ என்று சொன்னார் நான் எடுத்த பேட்டி ஒன்றில்.

தான் நம்பியவர்களின் கருத்துக்கு அவர் எந்த அளவுக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறார் என்பதற்கான உதாரணம் இந்தச் சம்பவம்.

தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடித்த நேரத்தில் தென் தமிழகத்தில் உள்ள ஒரு முக்கியமான கோவிலில் குண்டு வெடித்துப் பெரும் சர்ச்சை. விவாதங்கள் வலுத்து சந்தேகத்தின் பேரில் சிறுபான்மை சமூகத்தினர் சிலரைக் கைது செய்திருந்தார்கள்.

கைது செய்யப்பட்டவர்களைச் சிறைக்குச் சென்று பார்த்தபோதும், தெரிந்த காவல்துறை நண்பர்களிடமும் விசாரித்தபோது, குண்டு வெடிப்பின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருப்பது உறுதியானது.

மறுநாள் சென்னைக்கு வந்து திருவல்லிக்கேணி வல்லப அக்ராஹாரத்தில உள்ள மேன்ஷனில் தங்கியிருந்த நண்பர் சின்னக்குத்தூசியைப் பார்த்து குண்டு வெடிப்பின் பின்னணியைப் பற்றிச் சொன்னேன்.

சிறு பேப்பரில் அதைக் குறித்துக் கொண்டு “சட்டமன்றக் கூட்டம் துவங்குறதுக்குள்ளே இதை கலைஞர் கிட்டே சொல்லணும்.. சாயந்திரம் வாங்க’’ – சொல்லிவிட்டு அவர் கிளம்பியபோது காலை மணி எட்டு.

மதியத்திற்குள் காவில் குண்டு வெடிப்பு பற்றிச் சட்டமன்றத்தில் பேசிய முதல்வரான கலைஞர், “பின்னணியில் மத நோக்கம் இல்லை’’ என்று சொல்லிவிட்டு இது தொடர்பாக‍க் கைதானவர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவித்தார். இரண்டு காவல்துறை அதிகாரிகள் உடனடியாக மாற்றப் பட்டார்கள்.

மாலை சின்னக்குத்தூசியைச் சந்தித்தபோது உற்சாகத்துடன் “கலைஞர் உங்களுக்கு நன்றி தெரிவிக்கச் சொன்னார்’’.

மெய்ப்பொருளை உணர்ந்ததும் கலைஞர் உடனடியாகச் செயல்பட்ட விதம் பிடித்திருந்தது.

பிரபலமானவர்களை அவரவர்களுடைய சொந்த ஊர்ப் பின்னணியோடு எழுதும் ‘நதிமூலம்’ என்ற தொடரை வார இதழில் நான் எழுதியபோது – கலைஞரைப் பற்றி எழுத திருவாரூருக்குப் போனேன்.

ஓடுவேய்ந்த அவருடைய வீடு, அருகில் குடியிருந்த சில உறவினர்கள், நண்பர்களைச் சந்தித்தேன். “நெஞ்சுக்கு நீதி’’ புத்தகத்தில் கலைஞரே தனது தலை அடிக்கடி மொட்டையடிக்கப்பட்ட கோவில்களில் தலைசிறந்த கோவிலாக‍க் கிண்டலுடன் குறிப்பிட்டிருந்த அங்காளம்மன் கோவிலுக்குப் போனேன்.

அவருடைய தாயாரின் சமாதி இருந்த காட்டூருக்கும் போனேன்.

திருவாரூக்கு வந்து அவர் படித்த பள்ளி வகுப்பறையில் “மு.க’’ என்ற இனிஷியலைச் சுவரில் கலைஞர் மாணவப் பருவத்திலேயே செதுக்கி வைத்ததையும், அவர் நடத்திய ‘மாணவர் மன்றம்’ இருந்த திண்ணையையும் பார்த்துவிட்டு, அவருடைய பால்யபாலய கால நண்பர்களையும் சந்தித்து எழுதிய கட்டுரைக்குப் பெரும் வரவேற்பு.

அதே தொடர் தனி நூலாக வெளிவந்தபோது ஐந்து பிரதிகளை எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டுக்குப் போனேன். உற்சாகமாக இருந்த அவரிடம் நூலில் இருந்த அவருடைய கட்டுரையை மீண்டும் படித்ததும் கூடுதல் உற்சாகமானார்.

“பெயரிலேயே மரியாதையை இணைத்துக் கொண்டிருக்கிற சின்னக் கிராம‍ம்’’ என்று துவங்கிய கட்டுரையைப படிக்கத் துவங்கியதும் அருகே வரச் சொன்னார்.

மெல்லத் தோளில் தட்டி “கட்டுரையை ஆரம்பிச்சுக்கிறது அருமையா இருக்குய்யா’’ சிரிப்புடன் பாராட்டியவர், நான் கையோடு கொண்டு போயிருந்த ஐந்து புத்தகப் பிரதிகளையும் கேட்டு வாங்கிக் கொண்ட அன்பான தருணம் அவரை நெருக்கமாக உணர வைத்தது.

(தொடரும்…)

03.09.2023 அன்று வெளியான முரசொலி இதழில் வெளிவந்த கட்டுரை.

குறிப்பு: கலைஞர் கருணாநிதி பற்றி மணா எழுதிய ‘கலைஞர் என்னும் மனிதர்’ என்ற நூல் கூடுதல் பக்கங்களுடன் பரிதி பதிப்பகம் மறுபதிப்பாக விரைவில் வெளியிட உள்ளது.

தொடர்புக்கு:  பரிதி பதிப்பகம்,
56சி | 128 பாரத கோவில் அருகில்,
ஜோலார்ப் பேட்டை,
திருப்பத்தூர் மாவட்டம்-635 851.
செல் : 72006 93200

Comments (0)
Add Comment