முற்றிலும் புதுமுகங்கள் நடித்த படங்களைப் பார்ப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. காரணம், பார்வையாளர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாது.
அதிலுள்ள தொழில்நுட்பக் கலைஞர்களும் பெரிதாக அறிமுகமாகாதவர்கள் எனும்போது இன்னும் நிலைமை மோசம். அதிலும், பதின்பருவத்துக் காதலைச் சொல்லும் படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.
ஆனால், அப்படி உருவாகும் படைப்பொன்று பெரிய வெற்றியைப் பெற்றால், அதில் சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் திரையுலகில் அடுத்தகட்டத்தை நோக்கி எளிதாக நகர்வார்கள். ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘துள்ளுவதோ இளமை’ என்று இதற்குப் பல உதாரணங்கள் உண்டு.
அப்படியொரு நம்பிக்கையைப் பலமாக உருவாக்கியது ‘ரங்கோலி’ பட ட்ரெய்லர். படம் முடிந்தபிறகும், அந்த நம்பிக்கை மிச்சமிருக்கிறதா?
ஒரு இளமைக் காதல்!
எந்தவித எதிர்பார்ப்புகளும் இல்லாமல் காதல் தோன்றும் காலமாக, ‘பதின் பருவம்’ கருதப்படுகிறது. ‘ரங்கோலி’யும் அப்படியொரு காதலையே முன்னிலைப்படுத்துகிறது.
அந்தப் பள்ளியில் கட்டணம் அதிகம் என்பதால், அதிகப்படியாகச் சம்பாதிப்பதற்கான முயற்சிகளில் இறங்குகிறது சத்யாவின் குடும்பம்.
சலவைத்தொழில் செய்துவரும் காந்தி, ஒரு ஹோட்டலில் ‘லாண்டரி ஆர்டர்’ பெற முயற்சிக்கிறார். அதற்காக, ஒருவரிடம் ஒண்ணரை லட்சம் ரூபாய் பணமும் கொடுக்கிறார்.
ஆனால், முறைகேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி, அந்த ஹோட்டல் ‘சீல்’ வைத்து மூடப்படுகிறது. தந்தையின் சலவைத்தொழிலுக்கு உதவியாக இருக்கச் சென்ற சகோதரி வேம்பு (அக்ஷயா), அந்த இடமே கதி என்று கிடக்கிறார். காளியம்மா வீட்டு வேலைகளுக்குச் செல்லத் தொடங்குகிறார். அதனால், அந்தக் குடும்பத்தின் இயல்பே சீர்குலைகிறது.
இன்னொருபுறம், சத்யாவைக் கேவலமாக நடத்துகிறது அந்த பள்ளிச்சூழல். சேர்ந்த முதல் நாளே, கௌதம் (ராகுல்) என்ற மாணவரோடு பிரச்சனை ஏற்படுகிறது.
அதன்பிறகு, அவர் ஒருதலையாகக் காதலிக்கும் பார்வதி என்ற பெண்ணை முன்வைத்து மற்றொரு பிரச்சனை எழுகிறது. ’செய்யக்கூடாது’ என்றால் ‘செய்வேன்’ என்று பிடிவாதம் பிடிக்கும் அந்தப் பருவம், சத்யாவின் மனதையும் மாற்றுகிறது. பார்வதி மீது காதல் வயப்படச் செய்கிறது. அதனால், அவரது படிப்பு கெடுகிறது.
ஒருநாள் பள்ளிக் கழிவறைச் சுவரில் பார்வதியைச் சத்யா காதலிப்பதாகச் சில வாசகங்கள் எழுதப்படுகின்றன.
அதனைப் பார்க்கும் பார்வதி, ‘இதை என்கிட்டயே நேரில் சொல்லியிருக்கலாமே’ என்று சொல்லி சத்யாவின் கன்னத்தில் அறைகிறார். கௌதமும் அவரது நண்பர்களும் சத்யாவை அடித்து துவைக்கின்றனர்.
அந்த சம்பவம், ஒட்டுமொத்தமாகச் சத்யாவின் பள்ளி வாழ்க்கையையே கபளீகரம் செய்யும் நிலையை உருவாக்குகிறது. சத்யாவைப் பள்ளியில் இருந்து முடிவெடுக்கிறார் தலைமையாசிரியர்.
ஆனாலும், தான் இனிமேல் எந்த பிரச்சனையிலும் ஈடுபட மாட்டேன் என்று உறுதியளித்து, அந்தப் பள்ளியிலேயே படிப்பைத் தொடர்கிறார் சத்யா.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, சத்யாவைக் கண்டாலே பார்வதிக்கு எரிச்சல் பொங்குகிறது. வீட்டில் தாய், தந்தை, சகோதரி யாரும் சத்யா உடன் சரிவரப் பேசுவதில்லை.
பள்ளியிலும் கௌதம் மற்றும் அவரது நண்பர்கள் உடனான மோதல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ’கழிவறைச் சுவரில் நான் எழுதவில்லை’ என்று சத்யா சொல்வதை எவருமே நம்புவதாக இல்லை. அந்த நரக வேதனையால் சத்யா மனம் உடைகிறார்.
அதன்பிறகு என்னவானது? அந்தப் பள்ளியில் சத்யா தொடர்ந்து படித்தாரா இல்லையா? பார்வதி அவரை நோக்கும் விதம் மாறியதா என்று சொல்கிறது ‘ரங்கோலி’யின் மீதி.
பதின் பருவத்திற்கான உணர்வுகளைக் கொண்டு கிளர்ச்சியூட்டாமல், ஒரு இளமையான காதல் கதையை மிகத்தரமாகத் திரையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் வாலி மோகன் தாஸ். அதுவே இப்படத்தின் பலம்.
அபாரமான அனுபவம்!
ஏ.எல்.விஜய் உறவினர் என்பதே ஹமரேஷின் இப்போதைய அடையாளம். ஆனால், ‘ரங்கோலி’யில் அவரது இருப்பு அதனை மறக்கடிக்கிறது. அவரைத் தனித்து உற்றுநோக்கச் செய்கிறது. அதற்குக் காரணமாக விளங்குகிறது அவரது நடிப்பு.
நாயகி பிரார்த்தனாவைத் திரையில் காணும்போது, ஒரு பதின்பருவத்து பெண்ணின் அப்பாவித்தனம், அலட்சியம், கோபம் மற்றும் காதலை நேருக்கு நேர் பார்க்கும் உணர்வெழுகிறது. அந்த வகையில், அவரது இருப்பு நேர்த்தியாக அமைந்துள்ளது.
நாயகனின் தந்தையாக வரும் முருகதாஸ், மிக இயல்பானதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
அவரது ஜோடியாக நடித்த சாய் ஸ்ரீ புதுமுகம் என்பதை நம்ப முடியவில்லை. வேம்புவாக நடித்த அக்ஷயாவுக்கு மேக்கப் அதிகம்; ஆனாலும், அவரது முகமும் உடல்வாகும் ஏனோ அந்த பாத்திரத்துடன் பொருந்தவில்லை.
கௌதம் ஆக வரும் ராகுல், அவரது நண்பர்களாக வருபவர்கள் அனைவருமே மிகச்சிறப்பாக நடித்துள்ளனர்.
குறிப்பாக, கண்ணாடி அணிந்து ‘பீட்டர்’ விடும் பாத்திரத்தை ஏற்றவர் ‘வில்லத்தனத்தில்’ அசத்தியிருக்கிறார். போலவே, நாயகியின் தோழியாக வரும் பெண்ணும் நம் மனம் கவர்கிறார்.
இந்தக் கதையில் ஹமரேஷின் நெருங்கிய நண்பர்களாக இரண்டு பேர் இடம்பெற்றுள்ளனர். இரு வேறு பள்ளிச்சூழலில், அவர்கள் காட்டப்பட்டிருப்பது கதையோடு இயல்பாகப் பொருந்துகிறது.
தமிழாசிரியராக வரும் அமித் பார்கவ், ரொம்பவே ‘ஹேண்ட்சம்’ ஆக திரையில் வந்து போகிறார். அதேநேரத்தில், மற்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கும் கூட சில பிரேம்களில் முக்கிய இடம் தரப்பட்டுள்ளது.
இவர்களைத் தாண்டி, முருகதாஸுக்கு கடன் கொடுப்பவராகவும் அவரது மனைவியாகவும் நடித்தவர்கள் நம்மை அண்ணாந்து பார்க்க வைக்கின்றனர்.
நடிப்புக்கலைஞர்கள் மிக இயல்பாகத் திரையில் தோன்றியிருப்பதுதான் ‘ரங்கோலி’யின் பலம். அதற்குத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பு காரணமாக விளங்குகிறது.
மருதநாயகத்தின் ஒளிப்பதிவு, ஹேண்டிகேமில் ஒரு வாழ்வை ஆவணப்படம் பிடித்தாற் போலிருக்கிறது. ஆனந்த் மணியின் கலை இயக்கம், ஒரு புதிய உலகை நம் கண் முன்னே காட்ட உதவியிருக்கிறது.
குறிப்பாக, சலவைத் தொழிலாளிகளின் வசிப்பிடத்தைக் காட்டியிருக்கும் விதம் ‘அடடா’ என்று சொல்ல வைத்திருக்கிறது.
சத்யநாராயணனின் படத்தொகுப்பு, திரையில் அருமையாகக் கதை சொல்ல உதவியிருக்கிறது. அதேநேரத்தில், சில இடங்களில் சில வசனங்களை ‘கட்’ செய்துவிட்டாரோ என்றும் எண்ண வைக்கிறது.
கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், அவையனைத்தும் படம் பார்த்து முடித்தபிறகு நாமாக உணர வேண்டிய விஷயங்களாக இயக்குனர் விட்டுவைத்திருக்கிறார் என்பது பிடிபடுகிறது.
இயக்குனர் வாலி மோகன் தாஸ் அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பையும் மிகத்திறம்பட ஒருங்கிணைத்திருக்கிறார். அதற்கேற்ப, திரைக்கதை வசனத்தை நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்.
இந்தக் கதையில், நாயகன் நாயகி இடையிலான காதல் எப்படிப்பட்டது என்பதை இயக்குனர் விளக்கவில்லை. அது சரியா தவறா என்பதை வசனங்களில் தெரிவிக்கவில்லை.
ஆனால், பதின்பருவத்து காதலை இந்தக்காலத்து மாணவ மாணவியர் எவ்வாறு கையாள வேண்டுமென்று குறிப்பால் உணர்த்தியிருக்கிறார். படத்தின் முடிவு நிச்சயம் அதனை உணர்த்தும்.
அது புரியாவிட்டால், இதுவும் ஒரு ‘துள்ளும் இளமைக் கதை’ ஆகி விடும்.
கொண்டாட வேண்டிய இசை!
‘ரங்கோலி’யில் பாடல்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் கேட்கும் ரகம். குறிப்பாக, ’ஏனோ உன் மேலே கண்’ பாடல் கேட்டவுடனே மனதோடு ஒட்டிக்கொள்கிறது. அந்த வகையில், கே.எஸ்.சத்யமூர்த்தியின் இசை இப்படத்தின் முகம் என்றே சொல்லலாம்.
போலவே, பல காட்சிகளில் மௌனத்திற்கு இடம் அளித்து வெகு அரிதாகப் பின்னணி இசை தந்திருக்கிறார் சுந்தரமூர்த்தி. அந்த இசை கூட, அக்காட்சியை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்வதாகவே அமைந்துள்ளது. இளமைக் காலத்தில் வெவ்வேறு உணர்வுகளுக்கு ஆட்படும் மனதின் பிரதிபலிப்பாகவே அவை இருப்பதை எப்படிப் பாராட்டுவதென்றே தெரியவில்லை. நிச்சயம் ‘ரங்கோலி’ சுந்தரமூர்த்தியைக் கொண்டாடச் செய்யும் ஒரு படைப்பாக இருக்கும்.
நடிப்பு மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பைத் தாண்டி, இந்த படத்தோடு நாம் ஒன்றச் செய்யும் ஒரு அம்சம் உள்ளது. அது, பதின்பருவத்துக் காதலைப் பொறுப்புணர்வுடன் திரையில் சொல்லியிருக்கும் விதம். ஏனென்றால், ‘வயசுக் கோளாறு’ என்று எதை வேண்டுமானாலும் காட்டிவிடும் வாய்ப்பிருந்தும் இயக்குனர் அதனைத் தவிர்த்திருப்பது பாராட்டுக்குரியது.
அதற்காக, இப்படம் முழுக்கவே ‘இளமைக் காதலை’ மட்டுமே சொல்வதாக எண்ணிவிட வேண்டாம். இக்கதையில் நாற்பதைத் தொட்ட ஒரு பெற்றோர் இடையிலான காதல் இடம்பெற்றுள்ளது; திருமண வயதை நெருங்கிய ஒரு இளம்பெண்ணின் சொல்லப்படாத காதலும் இதில் உண்டு. அதனை விளக்கும் காட்சிகள் ‘கட்’ செய்யப்பட்டிருப்பதை உணர முடிகிறது. இனிவரும் நாட்களில், அவை ‘நீக்கப்பட்ட காட்சி’களாக யூடியூப்பில் காணக் கிடைக்கலாம்.
மொத்தத்தில், படம் பார்த்து முடிந்ததும் நிறைவான உணர்வைப் பெறலாம். ஏன், நீங்கள் மென்மனதுடையவர் என்றால் கலங்கிய கண்களுடன் தியேட்டரை விட்டு வெளியே வரலாம். அப்படியொரு உணர்வுக்கு நம்மை ஆட்படுத்திய ‘ரங்கோலி’ இயக்குனர் வாலி மோகன் தாஸ் & டீமுக்கு வாழ்த்துகள்!
– உதய் பாடகலிங்கம்