‘புதுமைப்பித்தன்’ நூலக அரங்குத் திறப்பு விழா!

அரங்கத்தை சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனுக்கு பாராட்டு

செப்டம்பர் 2-ம் தேதி மாலை சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகக் கட்டடத்தில் புனரமைக்கப்பட்ட புதுமைப்பித்தன் பெயரிலான அரங்கு திறந்து வைக்கப்பட்டது.

இதனை திறந்து வைத்தவர் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

புதுமைப்பித்தன் பெயரிலான இந்த அரங்கை மிகக் குறுகிய காலத்தில் புனரமைத்து கொடுத்ததோடு அதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் சீரமைத்துக் கொடுத்தவர் வழக்கறிஞரும் சென்னை ராஜா அண்ணாமலை புறத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். – ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தலைவரும் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்சின் தலைவருமான முனைவர் குமார் ராஜேந்திரன்.

இந்த அரங்கை மிகச் சிறப்பாக சீரமைத்துக் கொடுத்த முனைவர் குமார் ராஜேந்திரனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெகுவாகப் பாராட்டினார்.

சென்னை மாநகர நூலக ஆணைக் குழுத் தலைவரான கவிஞர் மனுஷ்ய புத்திரனும் குமார் ராஜேந்திரன் அவர்களுடைய பங்களிப்பின் சிறப்பைப் பற்றி பேசினார்.

விழாவில் முனைவர் ராஜேந்திரனை வாழ்த்தி பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

விழாவில் பங்கேற்றுப் பேசிய எழுத்தாளரும் எமரால்டு பதிப்பக  உரிமையாளருமான ஒளிவண்ணன், சீரமைப்புப் பணியை பாராட்டினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய முனைவர் குமார் ராஜேந்திரன்,  தான் சென்னை ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை லெஜென்ட்சின் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நூலக ஆணைக்குழுத் தலைவரான கவிஞர் மனுஷ்யபுத்திரன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க இரண்டு மாதங்களில் இந்த அரங்கத்தை புனரமைத்துக் கொடுத்ததாகவும், இதேபோல் சென்னையில் உள்ள பல நூலகங்களை புனரமைத்துக் கொடுக்க உள்ளதாகவும் கூறினார்.

நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்ட நிலையில் கிடந்த அரங்கை புதுப்பித்து தற்காலத்துக்கு ஏற்றபடி நவீன வடிவத்தில் மாற்றியமைத்துக் கொடுத்த அந்த அரங்கில் இனி பரவலாக இலக்கியக் கூட்டங்கள் நடக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சென்னை மாநகருக்கு மத்தியில் இந்த மாதிரியான ஒரு அரங்கு புனரமைக்கப்பட்டிருப்பது இலக்கியவாதிகளுக்கு மட்டுமல்ல பலரையும் ஈர்க்கக்கூடிய ஒரு அம்சம்.

Comments (0)
Add Comment