– அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தி.மு.க. இளைஞர் அணிச் செயலாளரும், விளையாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, “சனாதனம் என்பது கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா போன்ற வைரஸ் கிருமி என்றும் அவற்றையெல்லாம் விரட்டாமல் முற்றிலுமாக ஒழித்துக் கட்ட வேண்டும். சனாதனத்தை ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணி” என்று தெரிவித்தார்.
சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும் என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு நாடு முழுக்க கடுமையான எதிர்ப்புகள், கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்தநிலையில், வழக்குரைஞரும், சமூக சேவகருமான வினித் ஜிண்டால் டெல்லி காவல்துறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், “இந்தியாவின் 80 சதவிகிதம் பேர் சனாதன தர்மத்தில் நாட்டம் கொண்டவர்கள்.
இவர்களை இனப்படுகொலை செய்யத் தூண்டும் வகையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு அமைந்துள்ளது. எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து உதயநிதி மீது இனக்கலவரத்தைத் தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது கருத்துக்கு எழுந்த எதிர்ப்புகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து விளக்கமளித்த அவர், “சனாதனம் பற்றி நான் பேசியது சரியானது தான். பா.ஜ.க.வினர் நான் பேசியதை திரித்து பேசி வருகின்றனர்.
இந்தியா கூட்டணி வலுப்பெற்று வருவதை திசை திருப்புவதற்காக தான் பா.ஜ.க.வினர் சனாதனம் குறித்த பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர்” என்றுக் கூறினார்.