யோகிபாபு நடிக்கும் படங்கள் எப்படியிருக்கும்? அவர் நகைச்சுவை நடிகராக, நாயகனாக, கதையின் மையப்புள்ளியாக நடிக்கும் படங்கள் என்று வகை பிரித்து, தனித்தனியாக ஒரு பதிலைச் சொல்ல முடியும்.
ஆனால், எல்லாவற்றிலும் அவரது ‘பஞ்ச்’ ஒன்லைனர்கள் இருக்குமென்று சத்தியம் செய்யலாம். அதனைச் சரிவரக் கையாண்ட படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
அதற்குப் பல உதாரணங்கள் உண்டு. யோகிபாபுவின் நகைச்சுவை எல்லை மீறும்போது, கதையின் போக்கையே நீர்த்துப் போக வைத்த சம்பவங்களும் உண்டு.
பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் யோகிபாபு, ரேச்சல் ரெபேக்கா, வீரா, அமித் பார்கவ், அப்துல் லீ உள்ளிட்ட பலர் நடித்துள்ள ’லக்கிமேன்’ பார்த்தபோது மேற்சொன்ன சிந்தனை எழுந்தது. அது ஏன்?
கார் வடிவில் வந்த அதிர்ஷ்டம்!
ஆனால், அவருக்கும் அதிர்ஷ்டத்திற்கும் வெகு தூரம். சிறு வயதில் இருந்தே, அப்படிப்பட்ட வார்த்தைகளைக் கேட்டு வளர்ந்ததுதான் அதற்குக் காரணம். அதுவே, அவரது வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் தீர்மானிப்பதாக இருக்கிறது.
மனைவி தெய்வானை மகளிர் சுய உதவிக் குழு மூலமாகக் கடன் வாங்கித் தொழில் தொடங்கும் திட்டம் ‘பணால்’ ஆகிறது. பள்ளியில் நடந்த ஓவியப் போட்டியில் மகன் வெற்றி பெற முடியாமல் போகிறது. அனைத்துக்கும் தனது அதிர்ஷ்டமின்மையே காரணம் என்றெண்ணுகிறார் முருகன்.
ஒருநாள், அந்த நிலை தலைகீழாகிறது. சிட்பண்ட் நிறுவனத்தில் நடந்த குலுக்கல் போட்டியில் முருகனுக்கு கார் பரிசாகக் கிடைக்கிறது. அன்றுதான், அவர் முதல்முறையாக தனக்கு ‘அதிர்ஷ்டம்’ வந்துவிட்டதாக நம்பத் தொடங்குகிறார். அதன் தொடர்ச்சியாக, வேலை செய்யும் நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளர் ஆகிறார். நிறைய கமிஷன் தொகை கிடைத்து வாழ்க்கை வசந்தமானதாக மாறுகிறது.
திடீரென்று அந்த கார் திருட்டு போக, முருகன் இடி விழுந்தது போல உணர்கிறார். அது தொடர்பாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கத் தயங்குகிறார். காரணம், சில நாட்களுக்கு முன்பாக காவல்துறையைச் சேர்ந்த சிவகுமார் (வீரா) உடன் ஏற்பட்ட ‘ஈகோ’ மோதல்.
தற்செயலாகச் சாலையில் காரை நிறுத்தியதில் தொடங்கும் அந்த முரண், ஆட்சியரிடம் சிவகுமார் குறித்து முருகன் புகார் தெரிவிப்பது வரை செல்கிறது. அந்த புள்ளியில், முருகனை எதிரியாக நினைக்கத் தொடங்குகிறார் சிவகுமார்.
அப்படிப்பட்டவர் முருகனின் கார் காணாமல் போன புகாரை அக்கறையுடன் விசாரிக்கத் தொடங்குகிறார். ஆனாலும், கார் கிடைப்பதாக இல்லை.
ஒருநாள் காரை திருடிய நபர்களிடம் இருந்து ‘மொபைல் அழைப்பு’ வருகிறது. ஒரு லட்சம் ரூபாய் தந்தால் காரை தந்துவிடுவதாகச் சொல்கின்றனர். வட்டிக்குக் கடன் வாங்கி அந்த தொகையைக் கொடுக்கிறார் முருகன். ஆனால், அப்போதும் ஏமாற்றமே மிஞ்சுகிறது.
இந்த தகவல்களை அறியும் சிவகுமார், போதைப்பொருள் வழக்கொன்றில் முருகனைக் கைது செய்கிறார்.
அதன்பிறகு முருகன் வாழ்க்கை என்னவானது? சிவகுமாருக்கும் அவருக்குமான மோதல் சரியானதா என்று சொல்கிறது ‘லக்கிமேன்’. படத்தில் சிவகுமாரும் முருகனைப் போல நல்ல மனிதர் என்றே காட்டப்பட்டுள்ளது. இதுவே, இக்கதையை யதார்த்தமானதாக உணரச் செய்கிறது.
நல்லதொரு முயற்சி!
கதையின் நாயகனாக யோகிபாபு நடிக்கும் படங்கள் எல்லாம், சாதாரண மக்களால் வெகுவாக ரசிக்கப்படுகின்றன. அதிலொன்றாக, ‘லக்கிமேன்’ இடம்பெற வாய்ப்புகள் அதிகம்.
அதேநேரத்தில், தனது நகைச்சுவைக்கு மக்கள் சிரிப்பார்கள் என்ற காரணத்தை வைத்துக்கொண்டு சீரியசான காட்சிகளிலும் அவர் அடிக்கும் ‘லூட்டி’களை ஏற்றுக்கொள்ள கஷ்டமாக இருக்கிறது. அதனால், முழுக்கதையையும் மனதில் ஓட்டிப் பார்த்தபிறகே அப்படியொரு முடிவுக்கு அவர் வர வேண்டும்.
ரேச்சல் ரெபேக்காவின் இருப்பு மிக இயல்பானதாகத் தென்படுவதே, இப்படத்தின் பெரிய பலம். சாதாரணமான பெண்களை மிகச்சாதாரணமாகத் திரையில் அவர் பிரதிபலித்திருப்பது அபாரமான விஷயம்.
வீராவுக்கு இதில் வித்தியாசமான வேடமில்லை. ஆனால், கொஞ்சம் கூட எல்லை தாண்டாமல் அவர் அடக்கி வாசித்திருப்பதுதான் அப்பாத்திரத்தை ஏற்றுக்கொள்ள வகை செய்கிறது. அதேநேரத்தில், அவருக்கும் யோகிபாபு பாத்திரத்திற்குமான மோதல் காட்சிகள் வலுவாக இல்லை என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.
சுஹாசினி குமரன் இதில் வீராவின் ஜோடியாக வருகிறார். அழகாக நடிக்கும் அவர், தனது அதீத மேக்கப்பிலும் கொஞ்சம் கவனம் செலுத்தலாம்.
இன்னும் அமித் பார்கவ், ராகுல் தாத்தா, ஹலோ கந்தசாமி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். ‘இரும்புத்திரை’ அப்துல் லீ, இதில் யோகிபாபுவின் நண்பராக வந்து ஆங்காங்கே கலகலப்பூட்டுகிறார்.
ஒளிப்பதிவாளர் சந்தீப் கே.விஜய்யின் பணியானது, ஒவ்வொரு காட்சியையும் இயக்குனர் சொன்னாற்போலத் திரையில் வார்க்க உதவியிருக்கிறது.
அதனை அழகாகக் கோர்த்து நமக்குத் தந்திருக்கிறார் படத்தொகுப்பாளர் ஜி.மதன். ஆனால் யோகிபாபு மற்றும் வீராவுக்கு இடையிலான முரண் திரைக்கதையில் அழுத்தமாக வெளிப்படவில்லை என்பதை இயக்குனரிடம் வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார்.
உடைந்த பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டி, காய்ந்துபோன தேங்காய் நெற்றில் மனித உருவம், பொருட்களை அலங்காரத்துடன் அடுக்கி வைக்காத நடுத்தரக் குடும்பத்து வீடு என்று யோகிபாபு வசிப்பிடத்தைக் காட்டிய விதத்தில் அசர வைக்கிறது கலை இயக்குனர் சரவணன் வசந்தின் கலை வடிவமைப்பு.
ஷான் ரோல்டன் இசையில் கிளைமேக்ஸ் காட்சியின் போது வெளிப்படும் பின்னணி இசை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது. அதேபோல, ‘எதுதான் இங்க சந்தோஷம்’ பாடல் வெகுஎளிதாகத் திரையுடன் ஒன்ற வைக்கிறது.
‘கதை ஒரு வரிக் கதை’, ‘தொட்டு தழுவும் தென்றலே’ பாடல்கள் மெலடி தென்றலாக உள்ளது என்றால், ‘ராஜா ராஜா நாமதான் ராஜா’ பாடல் குதூகலமூட்டுவதாக அமைந்துள்ளது.
ஒரு இயக்குனராக, பாலாஜி வேணுகோபாலுக்கு இது முதல் படம். ஆனால், அந்த எண்ணத்தை அவர் எங்குமே நம் முன்னே வைக்கவில்லை. அதேநேரத்தில், தனித்தனியாகப் பார்க்கையில் நன்றாக இருக்கும் காட்சிகளை ஒரே கோர்வையாகப் பார்க்கையில் ஏதோ ஒன்று விடுபட்ட எண்ணம் ஏற்படுகிறது. பின்பாதிக் காட்சிகளில் யோகிபாபு மற்றும் வீரா பாத்திரங்களை எப்படிக் கையாள்வது என்பதில் ஏற்பட்ட குழப்பம் அதற்குக் காரணமாக இருக்கலாம்.
அதேநேரத்தில், எளிமையான மனிதர்களின் வாழ்க்கையை முன்வைத்து ஒரு ‘பீல்குட்’ படம் தர வேண்டுமென்ற அவரது எண்ணத்தைப் புறந்தள்ள முடியாது.
முதலிடத்தைப் பெற்றிருக்கலாம்!
உண்மையைச் சொன்னால், இதனை ஆகச்சிறந்த ‘மெலோடிராமா’ வாக மாற்றியிருக்க முடியும். அது நிகழாமல் போனதில், கதையின் முக்கிய முடிச்சை அழுத்தமாகச் சொல்லாதது முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதாகப்பட்டது, ஒரு நல்லவனுக்கும் இன்னொரு நல்லவனுக்குமான மோதல் என்பது தவறான புரிதலால் மட்டுமே நிகழும். அதனை மிகச்சரியாகத் திரையில் வெளிப்படுத்தத் தவறியிருக்கிறார் இயக்குனர்.
போகிறபோக்கில் மிக மெலிதாகக் கதை சொல்வதென்பது எல்லா வகைமை திரைப்படங்களுக்கும் பொருந்திப் போகாது. முக்கியமாக, சாதாரண மனிதர்களின் வாழ்வைச் சொல்லும்போது அடிப்படை உணர்வுகளுக்குக் கூடுதல் முக்கியத்துவம் தர வேண்டும். போலவே, எந்நேரமும் ரௌத்திரத்தை முகத்தில் அப்பிக்கொண்டு திரிகிற வீரா பாத்திரத்திற்கான பின்புலத்தையும் விவரித்திருக்கலாம்.
அதனைச் செய்திருந்தால், ‘நேர்மைதான் மனிதனுக்கு முக்கியம்’ என்று சொல்லும் வீராவுக்கும், ‘சாதாரண மனிதர்கள் தான் சூப்பர் ஹீரோக்கள்’ என்று சொல்கிற யோகிபாபுவுக்குமான மோதலை இன்னும் ரசித்திருக்கலாம்.
மிகமுக்கியமாக, ‘யோகிபாபுவின் காமெடி ஒன்லைனர்கள்’ இந்த படத்தின் பின்பாதியில் கொஞ்சம் அதிகம். அதனைச் சரி செய்திருக்கலாம். மற்றபடி, ‘எங்க காமெடி பண்ண விடுறீங்க’ என்று போகிறபோக்கில் அவர் அடிக்கிற ‘டைமிங் பஞ்ச்’கள் நிஜமாகவே நம்மைச் சிரிக்க வைக்கின்றன.
நாயகனுக்கு அதிர்ஷ்டம் இருக்கிறதா இல்லையா என்ற விவாதம் தொடக்கத்தில் வரும் சில காட்சிகளோடு முற்றுப் பெற்றுவிடுகிறது; அதான்பிறகு, திரைக்கதையில் எங்குமே அது தொடரவில்லை.
ஊறுகாய் போன்று பயன்படுத்தப்பட்ட விஷயமொன்றைக் கையிலெடுத்துக்கொண்டு, ‘ஃபுல் மீல்ஸ்’ இதுவே என்ற தோற்றத்தை இயக்குனர் உண்டாக்க முயன்றது ஏனோ?
இது போன்ற சில குறைகளைக் கடந்துவிட்டால், சாதாரண மனிதர்களுக்கு வாழ்வின் ஒவ்வொரு கணமும் அதிர்ஷ்டகரமானதுதான் என்று சொல்லும் இந்த ‘லக்கிமேனை’ தாராளமாக ரசிக்கலாம் !
– உதய் பாடகலிங்கம்