சூரியனில் உள்ள காந்தப் புயலை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற புதிய விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்துள்ளது.
இந்தியா சார்பில் முதன்முதலில் சூரியனைக் கண்காணித்து ஆய்வுசெய்ய அனுப்பப்படும் முதல் விண்கலம் என்ற பெருமையையும் ஆதித்யா எல்-1 விண்கலம் பெறுகிறது.
இதில் பெங்களூவில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் வடிவமைத்த 7 ஆய்வுக்கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளன.
பூமியில் சுமார் 15 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ‘லெக்ராஞ்சியன் பாயிண்ட் ஒன்’ என்னும் இடத்தில் இந்த விண்கலம் நிலை நிறுத்தப்பட்டு குறிப்பாக, சூரியனை நோக்கிய கோணத்தில் நிறுத்தப்படுகிறது.
இந்தக் கருவிகள் சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவை குறித்து ஆய்வுசெய்ய இருக்கிறது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்டுக்கான எரிபொருள் நிரப்பும் பணி நிறைவடைந்தது.
இதையடுத்து, ராக்கெட்டுக்கான இறுதிக்கட்டப் பணியான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று முற்பகல் 11.50 மணிக்கு தொடங்கியது. தொடர்ந்து ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள்களின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் மாதவன் நாயர் செய்தியாளர்களிடம் இன்று கூறும்போது, இந்த திட்டம் மிக முக்கியம் வாய்ந்தது. ஆதித்யா எல்-1 விண்கலம் லெக்ராஞ்சியன் முனை 1 பகுதியில் நிறுத்தப்படும்.
இந்த முனை பகுதியில் பூமி மற்றும் சூரியனின் ஈர்ப்பு விசை ரத்து செய்யப்படுகிறது. இதனால், குறைந்த எரிபொருளை கொண்டு, நாம் விண்கல பராமரிப்பு பணியை மேற்கொள்ளலாம்.
இதுதவிர, 24 மணிநேரமும் தொடர்ந்து கண்காணிப்பதும் சாத்தியப்படும். அந்த விண்கலத்தில் 7 உபகரணங்கள் வைக்கப்பட்டு உள்ளன.
வளிமண்டலம், பருவநிலை மாற்றம் பற்றிய படிப்புகள் உள்ளிட்டவற்றில் ஏற்படும் பல்வேறு காரண காரியங்களை விவரிப்பதற்கு, இந்தத் திட்டத்தில் இருந்து கிடைக்க கூடிய தரவுகள் உதவும் என கூறியுள்ளார்.