தற்கால வாழ்வியல் முறைக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியமான ஒன்று. ஆரோக்கியம் என்பது கேள்வி குறியாகிவிடும் இந்த சூழ்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரைப்படி ஆரோக்கியமாக இருப்பதற்கு தினமும் உடல் பயிற்சிகள் ஏதோ ஒன்று அவசியம்.
உடலும் மனமும் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியுடன் இருக்க யோகாசனங்கள் உதவுகின்றன. நவீன உலகத்தில் புதுமையுடன் வந்திருக்கிறது ஏரியல் யோகா.
ஏரியல் யோகா என்றால் என்ன?
இந்த யோகா ஜிம்னாஸ்டிக் மற்றும் யோகக்கலையில் இருந்து உருவானது.
1991 ஆம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டோபர் ஹாரிசன் என்பவரால் அறிமுகப்படுத்தப்பட்டாலும் தற்போது சில ஆண்டுகளாகத்தான் பிரபலமாக இருக்கிறது.
தரையில் பாய் அல்லது துணி விரித்து அதன் மேல் அமர்ந்து கொண்டு செய்வது பாரம்பரிய யோகா. துணியில் தொட்டில் கட்டி அதன் மேல் படுத்துக் கொண்டும் அந்தரத்தில் தொங்கியவாறு செய்வது ஏரியல் யோகா.
ஏரியல் யோகா அடிப்படை என்ன?
முதலில் உங்களுக்கு பாரம்பரிய யோகாசனம் தெரிந்திருக்க வேண்டும். ஏரியல் யோகாவை பொறுத்தவரை மேட் எதுவும் தேவையில்லை.
துணியை உத்திரத்தில் கட்டி அதன் மேல் தான் இந்தப் பயிற்சி கற்றுத்தரப்படும். ஒரு குழந்தையை தொட்டிலில் படுக்க வைப்பது போல் தான்.
பிறகு மெல்ல மெல்ல பயிற்சிகள் தொடங்கும் படுத்த நிலை, உட்கார்ந்த நிலை, நின்று கொண்டு, தலைகீழாக தொங்குவது போன்ற பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது.
இந்த பயிற்சியில் உடல் வலியோ, சோர்வோ தெரியாது. தூளியில் ஒரு வித அரவணைப்பை உங்களால் உணர முடியும். மனமும், உடலும் ஒரு குழந்தைபோல் மாறிவிடும்.
பாரம்பரிய யோகா மற்றும் ஏரியல் யோகா வித்தியாசம்?
இந்த கலையை நாம் எக்ஸ்பிரஸ் யோகா என்று செல்லலாம். தரையில் படுத்து கொண்டு செய்யும் யோகாவில் 45 நிமிடம் செய்தால் கிடைக்கக்கூடிய பலன்கள் இதில் 15 நிமிடம் செய்தால் கிடைத்து விடும்.
அடிப்படை யோகாசனம், மற்றும் உடற்பயிற்சிகள் தெரிந்திருக்க வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நினைப்பவர்களுக்கு உதவும்.
மேலும் தூக்கமின்மை, ஹார்மோன் பிரச்சனை இருப்பவர்கள், மன அழுத்தம் குறை பட்டு உடலும் மனமும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இந்த யோகா யார் தவிர்க்க வேண்டும்?
உயர் இரத்த அழுத்தம்,இதய பிரச்சனை, கர்ப்பிணிகள், மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். உடல் ரீதியான பிரச்சனையில் இருப்பவர்கள் நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
உடலை கட்டுக்கோப்பாகவும் இளமையுடன் வைத்துக் கொள்ள நினைப்பவர்களுக்கு வேர்வை சிந்தாமல், உடல் வலி இல்லாமல் இந்த பயிற்சியை கற்றுக் கொள்ளலாம்.
– யாழினி சோமு