சர்ச்சையில் சிக்கும் இளம் நட்சத்திரங்கள்!

இப்போதெல்லாம் இளம் நட்சத்திரங்கள் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி, ஊடகங்களுக்கு தீனி போடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இவர்களில் பெரும்பாலானோர், தந்தையின் புகழ்வெளிச்சத்தை பற்றிக்கொண்டு சினிமாவில் எளிதாக நுழைந்து வெற்றி பெற்றவர்கள் என்பது விசேஷம்.

இந்தப் பட்டியலில் முதலிடம் பிடிப்பது, நடிகர் முத்துராமன் மகன் கார்த்திக். பாரதிராஜாவின் கையால் மோதிரக் குட்டு பட்டதால், முதல் படத்திலேயே கோடம்பாக்கத்தை பிரமிக்க வைத்தார்.

கால்ஷீட் சொதப்புவதில் இவருக்கு நிகர் இவரே. சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். அரசியலில் புகுந்த பின்னர், பொதுக்கூட்டங்களுக்கு வராமல் டிமிக்கி கொடுத்ததால், சோபிக்க முடியாமல் போய் விட்டார். இப்போது அவர் அரசியலில் இல்லை. படங்களும் குறைவாகவே உள்ளது.

கால்ஷீட் கோளாறுகள் செய்வதில் கார்த்திக் இடத்தைப் பிடித்துக்கொண்டவர், டி.ராஜேந்தரின் மகன் சிம்பு. இதனால் நீதிமன்றப் படிக்கட்டுகளில் அவ்வப்போது ஏறி இறங்கி வருகிறார்.

பழைய சம்பவங்களை கிளர வேண்டாம். சிம்புவின், புதிய விவகாரத்தைப் பார்க்கலாம்.

வேல்ஸ் தயாரிப்பு நிறுவனம், சென்னை உயர் நீதிமன்றத்தில் சிம்பு மீது வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

வேல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு இது:

“எங்கள் நிறுவனம் தயாரிக்க இருந்த ‘கொரோனா குமார்’ என்ற படத்தில் நடிப்பதாக நடிகர் சிம்பு என்ற சிலம்பரசனை ஒப்பந்தம் செய்தோம்.

அந்தப் படத்தில் நடிப்பதற்காக சிம்புவுக்கு முன்பணமாக நான்கரை கோடி ரூபாயை கடந்த 2021ம் ஆண்டு அளித்தோம்.

பணத்தை பெற்றுக்கொண்ட சிம்பு படப்பிடிக்கு வரவில்லை. எனவே, கொரோனா குமார் படத்தை முடித்து கொடுக்காமல் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என மனுவில் கூறி இருந்தார்கள்.

மனுவை விசாரித்த நீதிபதி, ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்த சிம்புவுக்கு உத்தரவிட்டார்.

விசாரணையை செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினத்திற்குள் ஒரு கோடி ரூபாய்க்கான உத்தரவாதத்தை செலுத்தவில்லை என்றால் வேறு படங்களில் நடிக்க சிம்புக்கு தடை விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

வரலட்சுமி

’சுப்ரீம் ஸ்டார்’ சரத்குமார் மகள் வரலட்சுமி பெரிய சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார். அதையும் விரிவாகப் பார்க்கலாம்.

பாகிஸ்தானில் இருந்து கடத்தி வரப்பட்ட 300 கிலோ ஹெராயின், ஐந்து
ஏ.கே-47 ரக துப்பாக்கிகள் மற்றும் 1000 தோட்டாக்கள் கேரளா மாநிலம் விழிஞ்சம் கடற்கரையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கடலோரப் பாதுகாப்புப் படையால் கைப்பற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக தேசியப் புலானாய்வு முகமை என அழைக்கப்படும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

கடத்தலில் ஈடுபட்டதாக முன்னாள் ராணுவ வீரர் ஆதிலிங்கம் என்பவர் கைது செய்யப்பட்டார்.

இவர் நடிகை வரலட்சுமியின் முன்னாள் மேனேஜர்.

இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு வரலட்சுமிக்கு தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பி உள்ளதாக சில ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியானது.

இது குறித்து வரலட்சுமி அளித்துள்ள தன்னிலை விளக்கம் இது:

’ஆதிலிங்கம் தொடர்பான வழக்கில் தேசியப் புலனாய்வு முகமை எனக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக வரும் செய்திகள் பொய்யானவை. உண்மை தன்மையற்றவை. அப்படி எந்த சம்மனும் எனக்கு அனுப்பப்படவில்லை. நேரில் ஆஜராக வேண்டும் என்ற எந்த கோரிக்கையும் வரவில்லை.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஃப்ரிலான்ஸ் மேலாளராக ஆதிலிங்கம் என்னிடம் பணியாற்றினார். இந்தக் காலக்கட்டத்தில் நான் மேலும் பல ப்ரீலான்ஸர்களுடன் ஒரே நேரத்தில் பணியாற்றினேன்.

பணியில் இருந்து ஆதிலிங்கம் சென்ற பின்பு இன்றுவரை அவருடன் எந்த பேச்சுவார்த்தையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. செய்திகளை நான் பார்க்கும்போது அதிர்ச்சியடைந்தேன்’’ என விளக்கம் கொடுத்துள்ளார்.

வரலட்சுமி, தன்னிலை விளக்கம் அளித்தாலும், என்.ஐ.ஏ. விளக்கம் அளித்தால் தான் உண்மை வெளிச்சத்துக்கு வரும்.

நடிகை சமந்தா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் சமந்தா. குறுகிய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் கொடிக்கட்டி பறந்து முன்னணி நடிகர்களுடன் நடித்தவர்.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா இப்போது அவரை விட்டுப் பிரிந்து விட்டார். சக தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் சமந்தா இப்போது நெருக்கமாக பழகி வருவதாகக் கூறப்படுகிறது.

தெலுங்கு படமான ’குஷி’யில் இருவரும் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் படுக்கையறைக் காட்சிகள் உள்ளன.

இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கவர்ச்சி உடை அணிந்து வந்த சமந்தாவை, விஜயதேவரகொண்டா, அலேக்காக தூக்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இப்போது சிகிச்சைகாக சமந்தா அமெரிக்கா சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தினமும் வீடியோ காலில் விஜய்தேவரகொண்டாவுடன் பேசி நட்பை வளர்த்து வருவதாக தெரிகிறது. இந்த நட்பு காதலாக மாறலாம் என தெலுங்கு பட உலகம் கிசுகிசுக்கிறது.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment