வியக்க வைத்த விநாயகன்!

‘சூப்பர் ஸ்டாருக்கே வில்லனா நடிச்சு கலக்கிட்டாரு’ என்பதே ‘ஜெயிலர்’ படம் பார்த்தவர்கள் விநாயகனுக்குத் தெரிவிக்கும் பாராட்டு.

தோற்றம், நடிப்பு, குரல் உச்சரிப்பு, உடல்மொழி என்று அந்தப் படத்தில் வர்மன் பாத்திரத்தில் ‘அக்மார்க்’ வில்லத்தனத்தை வெளிப்படுத்தி நம்மை வியக்க வைத்திருக்கிறார்.

முதன்முறையாக ஜெயிலரில் பார்த்தவர்களுக்கு, அவர் ஒரு புதுமுகம். ஆனால், தொடர்ந்து தமிழ் சினிமா பார்ப்பவர்களுக்கோ அல்லது மலையாளத்தில் வெளியாகும் படங்களைச் சிலாகிப்பவர்களுக்கோ, அவர் ஏற்கனவே அறிமுகமான முகம் தான்!

ஆரம்ப நாட்கள்!

‘பிளாக் மெர்க்குரி’ எனும் குழுவில் ஒரு நடனக்கலைஞராகத் தன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார் விநாயகன். பதின்ம வயதுகளில் ‘தீ’ கொப்பளிக்க நடனமாடுவதுதான் அவரது தனிப்பட்ட ஸ்டைல்.

அதைப் பார்த்து வியந்த மலையாள இயக்குனர் தம்பி கண்ணன்தானம், தான் இயக்கிய ’மாந்த்ரீகம்’ படத்தில் விநாயகனை நடிக்க வைத்தார்.

சில ஆண்டுகள் கழித்து ‘ஒண்ணமன்’, ‘வெள்ளித்திரா’, ‘இவர்’ என்று சில மலையாளப் படங்களில் நடித்தார். அந்த பாத்திரங்கள் எல்லாமே திரையில் சில நிமிடங்களே தோன்றுவதாக அமைந்தன.

அதேநேரத்தில் தமிழ், தெலுங்கு உட்படப் பிற மொழிகளில் நடிக்கிற சிறு வாய்ப்புகளையும் ஏற்கும் மனநிலையில் இருந்தார் விநாயகன். அப்படித்தான், 2005-ல் ராம்கோபால் வர்மா தயாரித்த ‘ஜேம்ஸ்’ படத்தில் நடித்தார்.

அதற்கடுத்த ஆண்டே, தமிழில் ‘திமிரு’ படத்தில் வில்லியாக நடித்த ஸ்ரேயா ரெட்டியின் அல்லக்கையாக தோன்றினார்.

‘அக்கா, முப்பத்து முக்கோடி தேவர்களும் மலர் தூவி வாழ்த்துறாங்களோ’ என்பது உட்பட ஸ்ரேயாவைப் புகழ்ந்து தள்ளுகிற வசனங்களைப் பேசியிருந்தார்.

அப்படியே, விஷாலைப் பார்த்து உச்சபட்சக் குரலில் ‘டேய்..’ என்று கத்தவும் செய்திருந்தார். அந்தப் படம் பார்த்த எவரும் விநாயகனை மறக்க முடியாது.

அப்படியிருந்தது அவரது பெர்பார்மன்ஸ். ஆனாலும் கூட, ’திமிரு’க்குப் பிறகு அவருக்குப் பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

மீண்டும் தருண்கோபியின் இயக்கத்தில் ’காளை’ படத்திலும், சரவணன் இயக்கிய ‘சிலம்பாட்டம்’ படத்திலும் நடித்தார். ’எல்லாம் அவன் செயல்’, ‘சிறுத்தை’ படங்களில் சிறு வேடங்களில் வந்து போனார்.

பரத் பாலாவின் ‘மரியான்’ படத்தில் குறிப்பிடத்தக்க வேடம் விநாயகனுக்குக் கிடைத்தது. ஆனால், ஏனோ அவரைத் தமிழ் திரையுலகம் பயன்படுத்திக் கொள்ளவே இல்லை.

கவனம் ஈர்த்த ‘கம்மாட்டிப்பாடம்’!

சிறியதும் பெரியதுமாகத் தொடர்ந்து மலையாளப் படங்களில் நடித்த விநாயகனுக்குப் பெரிய அளவில் கவனிப்பை வழங்கிய படம் ‘கம்மாட்டிப்பாடம்’. அதில், நாயகன் துல்கர் சல்மானுக்கு இணையான பாத்திரம் விநாயகனுக்கும் மணிகண்டனுக்கும் கிடைத்தது.

அதனால், தனது முந்தைய படங்களான ‘ஞான் ஸ்டீவ் லோபஸ்’, ‘அயோப்பிண்ட புஸ்தகம்’, ‘ஆடு’, ‘கலி’யை விடவும் பெரிய வரவேற்பைப் பெற்றார் விநாயகன். அதன்பிறகு, அவர் ஏற்கும் ஒவ்வொரு பாத்திரமும் கனம் மிக்கதாக மாறியது.

‘பிரணய மீன்களுடே கடல்’, ‘தொட்டப்பன்’, ‘ட்ரான்ஸ்’, ‘ஆபரேஷன் ஜாவா’, ‘படா’, ‘ஒருத்தி’ என்று சமீப ஆண்டுகளில் வெளியான படங்களில் விநாயகனின் வெவ்வேறு முகங்களைக் காணலாம்.

அந்த அனுபவங்களின் துணையோடு, கடுமையைக் கொட்டும் ‘ஜெயிலர்’ படத்தின் வர்மன் பாத்திரத்தை ‘மனதிற்கினிய மதுரத்தை ருசிப்பது போல’ ரசித்துக் கையாண்டிருந்தார் விநாயகன்.

‘திமிரு’ படம் பார்த்தபோது எந்தளவுக்கு விநாயகனிடம் ‘ஓவர் ஆக்டிங்’ தெரிந்ததோ, அதற்கு நேரெதிராக மேற்சொன்ன எல்லா படங்களிலும் அவர் மிகச்சரியான அளவில் நடித்திருப்பார். அதுவே, அவருக்கு ‘ஜெயிலர்’ வாய்ப்பைத் தந்தது என்றும் சொல்லலாம்.

சரியான தேர்வு!

சாதாரண தோற்றம், ஏற்கும் பாத்திரத்திற்குத் தக்க உடல்மொழி, அவற்றோடு பொருந்துகிற குரல் தொனி என்று ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசம் காட்டுவது விநாயகன் ஸ்டைல்.

‘கம்மாட்டிப்பாடம்’ தந்த வரவேற்பும், அதன் வழியே ஊடகங்களால் உருவான பிம்பமும் அப்படியொரு நிலைக்கு அவரைத் தள்ளியிருக்கலாம். ஆனால், அதுவே அவர் தனது நடிப்பில் நுணுக்கங்களைக் கூட்ட வகை செய்திருக்கிறது. அதேநேரத்தில், மிக யதார்த்தமானதொரு நடிப்பையும் நாம் காணச் செய்கிறது.

நடனம், நடிப்பு மட்டுமல்லாமல் இசையும் விநாயகனுக்குப் பிடித்தமானது. சில மலையாளப் படங்களில் பின்னணி பாடியிருக்கிறார்.

‘கம்மாட்டிப்பாடம்’ படத்தில் ஒரு பாடலுக்கு இசை அமைத்திருக்கிறார்.

இந்த தகவல்கள் எல்லாமே, திரைத்துறையில் வெவ்வேறு பிரிவுகளில் பங்குபெற விரும்புகிற அவரது ஆர்வத்தைக் காட்டுகிறது.

அதனை முன்னிட்டாவது, ‘ஜெயிலர்’ படம் தந்த பிரமிப்பில் இனி எவரும் அது போன்ற பாத்திரங்களை விநாயகன் முன் பரப்பி வைக்கக் கூடாது. அவர் அதனை ஏற்பாரா மாட்டாரா என்பது தனிக்கதை.

காரணம், மக்களிடம் வரவேற்பைப் பெற்ற நடிகர், நடிகைகளை வெவ்வேறு விதமான பாத்திரங்களில் நடிக்க வைத்தால் மட்டுமே மக்களுக்கு சுவாரஸ்யம் கிடைக்கும். வேண்டுமானால், அந்த பாத்திரத்தில் நிறைந்திருந்த சுவைமிக்க அம்சங்களைக் கொஞ்சமாக நினைவூட்டலாம்.

இந்த இடத்தில் ‘விருமாண்டி’யில் வில்லனாக வந்த பசுபதியை ’மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில் முழுக்க நகைச்சுவை நடிகராக மாற்றிய கமல்ஹாசனின் முடிவினை மீண்டுமொரு முறை பாராட்ட வேண்டும்.

ஒப்பிடுதல் தேவையற்றது என்றபோதும், தற்போது கிடைத்துவரும் வரவேற்பும் வெவ்வேறு பாத்திரங்களில் மிளிர வேண்டிய நிர்ப்பந்தமும் விநாயகனை அப்படியொரு புள்ளியில் நிற்க வைத்துள்ளது.

ஆனால், அது பற்றியெல்லாம் துளியும் கவலைப்படாமல் வெவ்வேறு திசை நோக்கி நகரவே விரும்புவார் என்றே உள்மனம் சொல்கிறது.

இதுவரை நடித்த படங்களின் எண்ணிக்கையைப் பார்த்தாலே, அவர் சரியான தேர்வுக்காகக் காத்திருப்பவர் என்பதை உணர முடிகிறது.

‘ஜெயிலர்’ ஆடியோ விழாவில் ரஜினி பாராட்டியது போலவே, தற்போது சினிமா ரசிகர்களின் ’மனதிற்கினியவராக’ மாறிவிட்டார் விநாயகன்.

அந்த அன்புக்கும் ரசனைக்கும் மரியாதை தரும் வகையில், அவர் தொடர்ந்து தமிழ்ப் படங்களில் முகம் காட்ட வேண்டும்; அதற்கேற்ப, வேறுபட்ட பாத்திர வாய்ப்புகள் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.

– உதய் பாடகலிங்கம்

Comments (0)
Add Comment