மத்திய அமைச்சர் பதவியைக் குறி வைக்கும் ஆளுநர்கள்!

தேசிய கட்சியில் மாநில அளவில் நிர்வாகிகளாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மத்திய அமைச்சர் நாற்காலியில் ஒருமுறையாவது அமர்ந்து விட வேண்டும் என்கிற பேராசை அடி மனதில் குடிகொண்டுள்ளது.

இந்த ஆசையில்தான் நாங்குநேரியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்த வசந்தகுமார் 2014 ஆம் ஆண்டு கன்னியாகுமரி எம்.பி. தொகுதியில் போட்டியிட்டார். ஜெயிக்கவும் செய்தார்.

ஆனால், வசந்தகுமாரின் துரதிருஷ்டம், அந்தத் தேர்தலில் அவரது கட்சியான காங்கிரஸ் தேசிய அளவில் தோற்றுப்போனது. இதனால் எம்.பி.பதவியை தக்கவைத்துக் கொண்டு எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்தார்.

வசந்தகுமார் அண்ணன் குமரி அனந்தனின் மகள் தமிழிசை சவுந்தராஜனுக்கும் மத்திய அமைச்சர் பதவியில் அமர முடியாமல் போனது. கடந்த மக்களவைத் தேர்தலில் அவர் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டார்.

ஆனால், திமுகவின் கனிமொழியிடம் தோற்றுப்போனார். வெற்றி பெற்றிருந்தால் மத்திய அமைச்சர் ஆகி இருப்பார்.

அந்த சமயத்தில் தமிழிசை, தமிழக பாஜக தலைவராக இருந்ததால், அவருக்கு ஆறுதல் பரிசாக தெலுங்கானா ஆளுநர் பொறுப்பு கிடைத்தது.

அண்மையில் வெளியான கருத்துக் கணிப்பில், மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக வெல்லும் என தெரிய வந்துள்ளது.

இதனால் பாஜக எம்.எல்.ஏ.க்கள் மட்டுமின்றி, மாநில ஆளுநர்களுக்கும் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டு மத்திய அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து விட வேண்டும் என ஆசை துளிர் விட்டுள்ளது.

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக ஏற்கனவே தெரிவித்திருந்தார். தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட அவர் இப்போது கன்னியாகுமரி தொகுதியை குறி வைத்துள்ளார்.

தனது சித்தப்பா வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்தை எதிர்த்து நிற்க போகிறார். இந்த வரிசையில் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும் இணைந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அவர், மூன்று முறை எம்.பி.யாக இருந்தவர். மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் நெருக்கமானவர்.

மனோஜ் சின்ஹா, காஷ்மீர் ஆளுநராக பொறுப்பேற்று மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அவர் பதவிக் காலத்தில் தீவிரவாதிகள் ஓரளவு ஒடுக்கப்பட்டனர்.

வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முன்பு போல் சினிமா படப்பிடிப்புகள் நடக்கின்றன.

தன்னால் இயன்ற சேவைகளை காஷ்மீருக்கு செய்து விட்டதாக கருதும் மனோஜ் சின்ஹா, மீண்டும் அரசியலில் ஈடுபடும் மனநிலைக்கு வந்துள்ளார்.

அண்மையில் ஸ்ரீநகரில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய அவர், “நான் ஜம்மு-காஷ்மீரில் பிறக்கவில்லை. இங்கேயே வசிக்கும் எண்ணமும் இல்லை. ஸ்ரீநகரில் இருந்து நான் செல்லப்போகிறேன்’’ என தனது அரசியல் ஆசையை சூசகமாக குறிப்பிட்டார்.

விரைவிலேயே மனோஜ் சின்ஹாவுக்கு பதிலாக காஷ்மீருக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட உள்ளார்.

மீண்டும் உத்தரபிரதேசம் செல்லும் சின்ஹா, மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழக எம்.எல்.ஏ.க்களை பொறுத்த வரை நெல்லை தொகுதி பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன், கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் நிற்க விருப்பம் தெரிவித்துள்ளனர்.

வெற்றி பெற்றால் இருவரில் ஒருவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும்.

கடந்த தேர்தலில் தமிழகத்தில் பாஜக ஒரு இடத்திலும் ஜெயிக்கவில்லை. எனினும் தமிழகத்தைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர், முருகன் ஆகியோர் தற்போது மத்திய அமைச்சர்களாக உள்ளனர்.

– பி.எம்.எம்.

Comments (0)
Add Comment