தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் விரிவாக்க திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் தொடங்கிவைத்தார்.
31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் பயில்கின்ற சுமார் 17 லட்சம் மாணவர்கள் இந்த காலை உணவுத் திட்டத்தின் மூலம் பயன் பெறுகிறார்கள்.
இந்நிலையில் இன்றைய (31.08.2023) தினமலர் நாளிதழில் தமிழக அரசின் காலை உணவுத் திட்டத்தை தரக்குறைவாக தலைப்பிட்டு விமர்சிக்கப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களில் பரவி மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
பலரும் கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில், கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
உழைக்க ஓர் இனம் – உண்டு கொழுக்க ஓர் இனம் என மனுவாதிகள் கோலோச்சிய காலத்தில் ‘எல்லார்க்கும் எல்லாம்’ எனச் சமூகநீதி காக்க உருவானதுதான் திராவிடப் பேரியக்கம்.
‘சூத்திரனுக்கு எதைக் கொடுத்தாலும் கல்வியை மட்டும் கொடுத்து விடாதே’ என்பதை நொறுக்கி, கல்விப்புரட்சியை உருவாக்கிய ஆட்சி திராவிட இயக்க ஆட்சி.
நிலவுக்குச் சந்திரயான் விடும் இந்தக் காலத்திலேயே சனாதனம் இப்படியொரு தலைப்புச் செய்தியைப் போடுமானால், நூறு ஆண்டுகளுக்கு முன் என்ன ஆட்டம் ஆடியிருக்கும்? எளியோர் நிலை எப்படி இருந்திருக்கும்? இன்னமும் அந்த வன்மம் மறையவேயில்லை! தினமனுவுக்கு எனது வன்மையான கண்டனங்கள்! எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளின் தினமலர் ஆசிரியர் கி. ராமசுப்புவும் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ்(டிவிட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி தமிழக அரசு அமல்படுத்தியுள்ள முன்னோடி திட்டமான காலை உணவுத்திட்டம் குறித்து, ஈரோடு – சேலம் ‘தினமலர்’ பதிப்பில் இன்று (ஆகஸ்டு 31) வெளியாகியிருக்கும் மிக அருவருக்கத்தக்க, வெட்கித் தலைகுனியக்கூடிய வகையிலான செய்திக்கும், கி. ராமசுப்பு அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளியாகி வரும் சென்னை, மதுரை, கோவை, புதுவை, நெல்லை, நாகர்கோவில் பதிப்புகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது.
ஈரோடு – சேலம் தினமலர் பதிப்பானது, திரு. சத்தியமூர்த்தி என்பவரை உரிமைதாரர், வெளியீட்டாளர் மற்றும் ஆசிரியராகக் கொண்டு, கடந்த 23 ஆண்டுகளாக தனித்து இயங்கி வருகிறது.
பள்ளி மாணவர்களுக்கான திட்டத்தின் உன்னத நோக்கத்தை புரிந்துகொள்ளாமல், மிகக் கீழ்த்தரமான பார்வையுடன் செய்தி வெளியிட்டிருக்கும் ஈரோடு – சேலம் தினமலர் பதிப்பினையும், அதற்கு காரணமான நபர்களையும் வன்மையாக கண்டிக்கிறோம்.
வழக்கு நிலுவையில் இருப்பதால் தினமலர் நாளிதழ் பெயர் ஒன்றாக இருப்பதை தவிர்க்க முடியவில்லை.
லட்சோப லட்சம் வாசகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையினைப் பெற்றிருக்கும் ‘தினமலர்’ பெயரிலேயே இப்படியொரு தரம்தாழ்ந்த செய்தியினை வெளியிட்டு, தினமலர் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தியிருக்கும் ஈரோடு- சேலம் பதிப்பின் நபர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் நிறுவனர் டி.வி. ராமசுப்பையர் குடும்பத்தைச் சேர்ந்த ஆர்.ஆர். கோபால்ஜி தலைமையில் திருச்சி, வேலூர் பதிப்புகள் இயங்கி வருகின்றன.
ஈரோடு – சேலம் தினமலர் பதிப்பின் நிர்வாகம் இதுபோன்ற சர்ச்சையில் சிக்குவது புதிதல்ல. 2016 தேர்தலின்போது, தாங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியதாகவும், திமுக பிரம்மாண்ட வெற்றி பெறும் என்றும் தேர்தலுக்கு 2 நாள் முன்னதாக முதல் பக்க செய்தி வெளியிட்டது.
அப்போது அந்த நாளிதழ்களை வாங்கி திமுகவினர் இலவசமாக விநியோகித்தனர். அந்த செய்திக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என அப்போதும் சென்னை தினமலர் விளக்கம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-நன்றி: வேல்ஸ் மீடியா