திரையரங்கில் கிளைவிடும் சாதி எந்த எல்லைக்குப் போகும்?

சாதிய மேட்டிமையைத் தூக்கிப் பிடித்துச் சக மனிதர்கள் மீது பகைமை பாராட்டும் மனங்களை எப்படி வகைப்படுத்துவது?

கோவில், தெரு, குளம், தண்ணீர்த்தொட்டி என்று சகல இடங்களிலும் சாதிய வன்மத்தைக் காண முடிகிறது.

நவீனத் தொழில்நுட்ப வசதிகள் பெருகி நிலவில் சந்திராயனை வெற்றிகரமாக அனுப்புமளவுக்கு நாம் மேம்பட்டிருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும், சாதியம் நம் மனங்களில் ஒட்டியிருக்கும் அழுக்கைப் போலிருக்கிறது.

கிராமங்களிலும், குறிப்பிட்ட நகர்ப்புறங்களிலும் சாதியம் இன்னமும் கோலாச்சிக் கொண்டிருக்கிறது அல்லது வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களுக்காக‍க் காத்திருக்கிறது.

தென் தமிழகத்தில் முன்பு நடந்த சில சாதி மோதல்களுக்குப் பின்னணியாக கோவில் இருந்திருக்கிறது.

திருவிழாவின் போது கிராமங்களில் நடத்தப்படும் நாடகங்களிலும், கலை நிகழ்ச்சிகளிலும் கூட மோதல்கள் உருவாகி வெளிப்பட்டிருக்கின்றன.

நாடகங்களில் எந்தச் சாதித்தலைவரைப் பற்றிய பாடலைப் பாடுவது என்பதில் கூட தகராறுகள் உருவாகியிருக்கின்றன.

அண்மையில் மாரி செல்வராஜ் இயக்கிய ‘மாமன்னன்’ படம் வெளிவந்ததை அடுத்தும் சாதியப் பெருமைகள் வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கின்றன.

தங்கள் விருப்பத்திற்கேற்ப கதாநாயகர்களைக் கொண்டாடுகிறார்கள் இல்லை என்றால் வில்லனைக் கொண்டாடுகிறார்கள்.

திரைப்படத்தில் மையமாக எதைச் சொல்ல வருகிறார்கள் என்பதை விட, திரைப்படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இருக்கும் பார்வையை ஒட்டியே அந்தத் திரைப்படம் புரிந்து கொள்ளப்படுகிறது. பெருமை பேசப்படுகிறது.

அண்மையில் ஓணம் பண்டிகையன்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பார்த்த ‘ஜே.சி.டேனியல்’ மலையாளத் தழுவல் திரைப்படம் – பார்வையாளர்களுக்கிடையே சாதிய மனோபாவம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்த முடியும் என்பதற்கு ஓர் உதாரணம்.

மலையாளத்தில் 2013-ல் செல்லுலாய்ட் என்ற பெயரிலும், தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு, 2014 ஆம் ஆண்டு ஜே.சி.டேனியல் என்ற பெயரிலும் வெளிவந்த இந்தப் படத்தை இயக்கியிருந்தவர் கமல். பிருதிவி ராஜ், சீனிவாசன் உள்ளிட்ட பலர்  இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

அகஸ்தீஸ்வரம் கேரளத்தோடு இணைந்திருந்த காலத்தில் வாழ்ந்த, மலையாளத்தில் முதல் திரைப்படத்தைப் படுசிரமங்களுக்கு இடையே எடுத்தவரான கே.சி. டேனியலின் வாழ்வைப் பற்றிப் பேசுகிறது இந்தப் படம்.

ஜே.சி.டேனியல்

திரைப்படம் என்கிற நவீனத் தொழில்நுட்பம் உலக நாடுகளில் பரவிக் கொண்டிருந்த போது, டேனியலுக்கு மலையாளத்தில் ஒரு திரைப்படத்தைத் தயாரித்து, இயக்க வேண்டும் என்ற ஆசை வந்திருக்கிறது.

தொழில்நுட்பத்தைச் சிரமங்களுக்கிடையில் கற்றிருக்கிறார்.

காமிரா உள்ளிட்ட சாதனங்களை வாங்கியிருக்கிறார். திருவனந்தபுரத்தில் முதலில் ஒரு ஸ்டூடியோவை அமைத்திருக்கிறார். இவ்வளவையும் தன்னுடைய நிலத்தை விற்று வாங்கியிருக்கிறார்.

‘விகத குமாரன்’ என்ற பெயரில் அந்த மௌனப்படத்தை இயக்கியிருக்கிறார். களரிப் பயிற்றுக் கலையை நன்றாக‍க் கற்ற அவரே அதில் நடித்திருக்கிறார்.

உடன் நடிக்க அப்போது யாரும் முன்வரவராத நிலையில், தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சமூகத்தைச் சேர்ந்த ரோசம்மாவை நடிக்க வைத்திருக்கிறார்.

அந்தத் திரைப்படத்தில் உயர்சாதிப் பெண்ணாக நடிக்க வைத்திருக்கிறார். அதற்குப் பலர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையிலும், ஒருவழியாக திரைப்படத்தை எடுத்து முடித்து 1928 ஆம் ஆண்டு நவம்பர் 7 ஆம் தேதி திரையிட்டார். அதைப் பார்க்க அன்றைய வி.ஐ.பி.க்கள் வந்திருந்தனர்.

படம் திரையிடப்பட்டு படத்தில் ரோஸி என்ற ரோசம்மா வந்ததுமே பெரும் கலாட்டா ஆரம்பித்தது. படத்தை ஆவலோடு காண வந்திருந்த மலையாளப் படத்தின் முதல் கதாநாயகியான ரோஸியை விரட்டியடித்தார்கள். திரையங்களின் திரை கிழிக்கப்பட்டது. ரோஸியின் வீடு கொளுத்தப்பட்டது.

அவர்களின் கொந்தளிப்புக்குக் காரணம் – தாழ்த்தி வைக்கப்பட்டிருந்த சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் எப்படி உயர் சமூகத்துப் பெண்ணாக நடிக்கலாம் என்கிற வன்ம‍ம் தான்.

ரோஸி

அன்றைக்கு விரட்டியடிக்கப்பட்ட ரோஸியை அதற்குப் பிறகு காண முடியவில்லை.

மிகவும் பொருளாதார ரீதியாக‍க் கஷ்டப்பட்டு முதல் மலையாளத் திரைப்படத்தை எடுத்தவரான டேனியலை – அன்றைய சமூகம் திரைப்படம் என்கிற மக்கள் தொடர்புச் சாதனத்தை எதிர்கொண்ட விதம் நோக வைத்தது. மற்ற நகரங்களில் திரையிட்ட போதும் இதே பிரச்சினை.

புறக்கணிப்புக்குள்ளான நிலையில் மீண்டும் சொந்த ஊருக்குத் திரும்பி பல் டாக்டர் படிப்பை முடித்து பாளையங்கோட்டையில் பல் மருத்துவராகப் பணியாற்றினார்.

நிறைவாக இறுதிக் காலத்தை அகஸ்தீஸ்வரத்தில் வெறுமையோடு கழித்தார்.

திரைப்படத் தொழில்நுட்பம் வளர்ந்து அது பெரும் வணிகமாக மாறிவிட்ட நிலையிலும், டேனியலின் முதல் முயற்சி கண்டு கொள்ளப்படவில்லை.

பத்திரிகையாளரான சலங்காட் பாலகிருஷ்ண‍ன் மூலம் டேனியலின் அடையாளம் வெளியே தெரிந்திருக்கிறது.

முதுமைக் காலத்தில் டேனியலைச் சந்தித்த பத்திரிகையாளர் அவருக்கு பென்ஷன் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்தும், அவர் தமிழகப் பகுதியில் விசித்ததால் அவருக்கு பென்ஷனும் கிடைக்கவில்லை.

முதல் மலையாளப் படத்தைத் தயாரித்தவர் என்கிற குறைந்தபட்ச அங்கீகாரமும் கிடைக்காத நிலையில், 1975 ஆம் ஆண்டு டேனியல் மறைந்து போனார்.

அவர் மறைந்து பல ஆண்டுகள் கழித்து ஜே.சி. டேனியலின் பெயரில் விருதை அளிக்கிறது கேரள அரசு.

டேனியலின் வரலாறு திரைப்படமாகவும் வெளிவந்து காலங்கடந்த அங்கீகாரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

டேனியலாக பிருதிவி ராஜ் நடிக்க, பத்திரிகையாளராக சீனிவாசன் நடித்திருக்கிற இந்தப் படம் சில விருதுகளைப் பெற்றிருக்கிறது.

சாதீயம் அடர்ந்த சமூகத்திற்கிடையே மலையாளத்தில் ஒரு சமூகப்படத்தை எடுக்க முயற்சித்த டேனியலுக்கு அன்றைய சமூகம் தந்த எதிர்வினை இது தான்.

டேனியல் தயாரித்து இயக்கிய படத்தின் பிலிம் ரோல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், அந்த முதல் மலையாளத் திரைப்படத்தில் நடிக்க முன்வந்த ‘குற்றத்திற்காக’ ரோஸி என்கிற ரோசம்மா ஏன் வீடு தீயிட்டுக் கொளுத்தப்பட்ட நிலையில் ஊரைவிட்டு விரட்டப்பட்டார்?

அவர் நடித்த திரைப்படத்தை அவரையே பார்க்க விடாமல் விரட்டி அடித்துக் காணாமல் அடித்ததில் இன்றைக்குத் திரைப்படத்தைக் கொண்டாடும் அதே சமூகத்திற்குப் பங்கிருக்கிறதா இல்லையா?

– மணா

Comments (0)
Add Comment