சிரிப்பு. விலங்குகளிடமிருந்து, நம்மை வேறுபடுத்திக் காட்டும் விசித்திரம். தன்னை மேலும் அழகாக்கிக் கொள்ள முகம், வரைந்த சித்திரம்.
மனிதனிடமிருந்து, இன்னும் மனிதம் தொலைந்துவிடாதிருக்க, சிரிப்புதான் சிறந்த சாதனமாக விளங்குகிறது. சிரிப்புதான் மனிதனின் எண்ணத்தை விளக்குகிறது.
வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டுப் போகும். இது சிரிப்பின் மகத்துவம். மருத்துவம். சிந்தையைக் குளிர வைக்கிறது சிரிப்பு.
சிரமங்களை புதைத்து விடுகிறது சிரிப்பு. நட்பை விரிவாக்குகிறது சிரிப்பு. நன்மையை பெரிதாக்குகிறது சிரிப்பு. சிரிப்பு பலவகை. அதுதரும் பல்சுவை.
சிரிப்பதால் நோய்கள் நம்மை அண்டுவதில்லை என மருத்துவ விஞ்ஞானம் மார் தட்டி உரைக்கிறது. அப்படிப்பட்ட சிரிப்பை நமக்குத் தருபவர்கள் மருத்துவம் படிக்காத மருத்துவர்கள்.
அப்படிப்பட்ட ஒரு மருத்துவர்தான் திரையுலக மேதை, நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்கிற கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஒழுகினச்சேரியில் கடந்த 1908ம் ஆண்டு நவம்பர் 29ம் தேதி பிறந்த என்.எஸ். கிருஷ்ணன், சிறுவயதிலிருந்தே கலை ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார்.
சிறு வயதில் நாடக கொட்டகைகளில் சோடா விற்கும் சிறுவனாக தன் வாழ்க்கையை ஆரம்பித்த என்.எஸ். கிருஷ்ணன், பின்னர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார்.
வில்லுப்பாட்டு கலையைக் கற்று சொந்தமாக நாடக கம்பெனியை தொடங்கிய அவர், கால சுழற்சிக்கு ஏற்ப திரைப்படங்களில் கால் பதித்தார். 1936ம் ஆண்டு சதி லீலாவதி என்ற படத்தில் அறிமுகமாகி, அதன் தொடர்ச்சியாக 150 படங்களுக்கு மேல் நடித்தார்.
சிந்திக்க வைக்கும் சீர்திருத்த கருத்துகளை நகைச்சுவையுடன் கூறி மக்களை கவர்ந்த அவர், தன்னுடன் இணைந்து நடித்த மதுரத்தை திருமணம் செய்து கொண்டார்.
அறிவியல் கருத்துகளை, வெகுஜன மக்களின் மொழியிலேயே திரையில் நகைச்சுவை கலந்து வழங்கிய நாகரீக கோமாளி.
அந்த காலத்தில் புகழ்பெற்ற கதாநாயகனாக விளங்கிய தியாகராஜ பாகவதருடன் இணைந்து, லட்சுமி காந்தன் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டதால், கலைவாணரின் திரைவாழ்வு மாலை நேரத்து சூரியனாய் மங்கத் தொடங்கியது.
லண்டனில் நடைபெற்ற மேல்முறையீட்டு வழக்கில், என்.கே.டி.யும், என்.எஸ். கிருஷ்ணனும் விடுவிக்கப்பட்டனர். ஆனாலும், திரைவாழ்வில் பின்னர் இருவருக்கும் இறங்குமுகம்தான்.
தன் வருமானத்தின் பெரும் பகுதியை ஏழை-எளிய மக்களுக்கு வழங்கி, கொடை வள்ளலாகத் திகழ்ந்த கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன், 1957ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி தனது 49வது வயதில் காலமானார்.
வாழும்போது ஏழை மக்களுக்கு பணத்தை வாரியிறைத்து வள்ளலாகத் திகழ்ந்து மறைவின்போது, செல்வத்தை எல்லாம் இழந்திருந்தார், தமிழ்த் திரையுலகில் திருப்புமுனையை ஏற்படுத்திய தியாகி என்.எஸ். கிருஷ்ணன்.
(பழம்பெரும் திரைப்பட நடிகர் கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் நினைவு நாள் (ஆகஸ்ட் 30, 1957) இன்று)
✍️ லாரன்ஸ் விஜயன்