ரொம்பவே சாதாரணமானதொரு கதையைக் கொண்டு நல்ல கமர்ஷியல் படத்தைத் தந்துவிடலாம். தமிழ், தெலுங்கு மொழிகளில் அப்படிப்பட்ட படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், மலையாளத் திரையுலகில் அது வெகு அரிதாகத்தான் நிகழும். அதனாலேயே தமிழ், தெலுங்கு படங்களைப் பார்க்கும் ரசிகர்கள் அங்கு அதிகம்.
அவர்களது ஏக்கங்களைப் போக்கும் வகையில் ‘கமர்ஷியல் ஆக்ஷன்’ படம் என்ற எண்ணத்தை அழுத்தமாக உருவாக்கியது ‘ஆர்டிஎக்ஸ்’ ட்ரெய்லர். சரி, படம் பார்த்து முடித்தபிறகும் அந்த எண்ணம் மாறாமல் இருக்கிறதா?
பரபரக்கும் பட்டாசுகள்!
ஆர்டிஎக்ஸ் என்றவுடன் வெடிபொருள் சம்பந்தப்பட்ட கதை என்று நினைத்துவிட வேண்டாம்.
ராபர்ட், டோனி, சேவியர் என்ற மூன்று பாத்திரங்களின் முதலெழுத்துதான் அப்படியொரு பெயருக்குக் காரணம்.
முழுத்திரைக்கதையும் அவர்கள் மூவரைத் தான் சுற்றி வருகிறது.
ராபர்ட்டும் டோனியும் சகோதரர்கள்; சேவியர் அவர்களது நண்பர். மூவருமே சேவியர் தந்தை ஆண்டனியிடம் கராத்தே பயின்றவர்கள்.
தற்காப்புக்கலைகளைக் கொண்டு மற்றவர்களிடம் வம்பு வளர்க்கக் கூடாது என்பது ஆண்டனி கற்றுத் தந்த பாடம்.
ஆனாலும், அவ்வப்போது ஏற்படும் வம்புகளில் சிக்கி அடிதடியில் இறங்குவதே மூவரின் வேலையாக இருக்கிறது.
பற்றவைத்த பட்டாசுகள் போலப் பரபரவென்று இளமையில் திரிந்த இவர்களை, ஒரு காதல் வெவ்வேறு திசைகளில் பயணிக்க வைக்கிறது.
கொச்சியிலுள்ள மகாராஜா காலனியைச் சேர்ந்தவர் மினி. ராபர்ட்டின் காதலி. அந்த பகுதியைச் சேர்ந்த சில மாணவர்கள் ராபர்ட்டும் மினியும் பழகுவதைக் கண்டு பொருமுகின்றனர்.
ஒரு பொருட்காட்சியில் மினி ஆடும்போது, ஒருவர் வம்பிழுக்கிறார். ராபர்ட் அதனைத் தட்டிக் கேட்க, அங்கு தகராறு உண்டாகிறது. அவர்கள் ராபர்ட்டைத் தாக்க, அங்கே டோனியும் சேவியரும் அவருக்கு அரணாக நிற்கின்றனர்.
அங்கு நடக்கும் களேபரத்தில் ஒருவரது கால்முறிவுக்குக் காரணமாகிறார் ராபர்ட். பொருட்காட்சி நடந்த இடமே சின்னபின்னமாகிறது.
அந்த நிகழ்வால், அவரது உயிருக்கு ஆபத்து எனும் நிலை உருவாகிறது. போலீஸ் பஞ்சாயத்து, பணம் பரிமாற்றத்திற்குப் பிறகே அந்த வழக்கு நீர்த்துப் போகிறது.
வேறு வழியில்லாமல், ராபர்ட் பெங்களூருக்கு அனுப்பப்படுகிறார். அந்த நிகழ்வு, மீண்டும் ஊர் திரும்பக் கூடாது எனும் எண்ணத்தை அவருக்குள் உண்டாக்குகிறது.
சில ஆண்டுகள் கழித்து, ராபர்ட் மீண்டும் ஊர் திரும்புகிறார். டோனி, அவரது மனைவி, குழந்தை, தாய் மற்றும் தந்தை என ஐவரையும் ஒரு கும்பல் வீடு புகுந்து தாக்கிய சம்பவமே அதன் பின்னணியில் இருக்கிறது.
அவர்களைத் தாக்கியது யார்? என்ன காரணம்? இந்த இரு கேள்விகளே மீண்டும் ஆர்டிஎக்ஸ் கூட்டணியை ஒன்றுபடுத்துகிறது. அதன்பிறகு என்ன நிகழ்கிறது என்று சொல்கிறது மீதி.
உண்மையைச் சொன்னால், ஆக்ஷன் காட்சிகளை புகுத்துவதற்கு இப்படியொரு சாதாரண கதையே போதும். ஆனால், மிகப்பொருத்தமான காட்சியாக்கம் இருந்தால் மட்டுமே ரசிகர்களின் வரவேற்பு கிட்டும். அதனைச் சாத்தியப்படுத்தி, தியேட்டர்களில் திருவிழாவை நிகழ்த்தியிருக்கிறது ‘ஆர்டிஎக்ஸ்’.
அசத்தும் ஆக்ஷன்!
இந்த கதையில் ராபர்ட்டாக ஷேன் நிகம், டோனியாக ஆண்டனி வர்கீஸ், சேவியராக நீரஜ் மாதவ், மினியாக மஹிமா நம்பியார், டோனியின் மனைவி சிமி ஆக ஐமா ரோஷ்மி செபாஸ்டியன், ஆண்டனியாக பாபு ஆண்டனி ஆகியோர் நடித்துள்ளனர்.
ராபர்ட் – டோனியின் பெற்றோராக லால், மாலா பார்வதி நடித்துள்ளனர். இன்னும் பைஜு, சுஜித் சங்கர், வில்லனின் நண்பர் குழாம் என்று பலர் இதில் நடித்துள்ளனர். வில்லனாக வரும் விஷ்ணு அகஸ்தியா மிரட்டல் நடிப்பைத் தந்துள்ளார்.
வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் படத்தில் எப்படிப்பட்ட நடிப்பை இதுவரை பார்த்து ரசித்திருக்கிறோமோ, அது அப்படியே ‘ஆர்டிஎக்ஸ்’ஸிலும் காணக் கிடைக்கும்.
அதுவே, இந்த நடிப்புக் கலைஞர்கள் ரசித்து ருசித்து பணியாற்றியதைச் சொல்லிவிடும்.
இவர்களுக்கு அடுத்தபடியாக நம் கவனம் கவர்வது சாம் சி.எஸ்ஸின் இசை. இதில் இடம்பெற்றுள்ள இரண்டு பாடல்கள் துள்ளலை உருவாக்கும் ரகம்.
ஆனால், அதனை மிகச்சுலபமாகத் தாண்டும் வகையில் முன்பாதியிலும் பின்பாதியிலும் ‘வெரைட்டி’யாக பின்னணி இசை கோர்வைகள் தந்து நம்மை உணர்வெழுச்சியில் திளைக்க வைத்திருக்கிறார் சாம்.
போலவே, அன்பறிவ் சகோதரர்கள் மற்றும் இர்பானின் ஆக்ஷன் கொரியோகிராபி ‘கூஸ்பம்ஸ்’ அனுபவங்களைத் தருகிறது.
அதற்கேற்ப திருவிழா பின்னணி, பயணிகள் படகு, மருத்துவமனை மற்றும் நெருக்கமான வீடுகள் கொண்ட குடியிருப்பில் ஆக்ஷன் காட்சிகள் அசத்தலாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
தொண்ணூறுகளின் நடுப்பகுதியில் நிகழ்வதாக, ‘ஆர்டிஎக்ஸ்’ கதையை வடித்திருக்கிறார் இயக்குனர் நஹாஸ் ஹிதாயத். அவரது எண்ணத்திற்குக் கச்சிதமாக உருவம் கொடுத்திருக்கிறது செடியன் பால் – கெவின் பால் தயாரிப்பு வடிவமைப்பு.
இயக்குனரின் கதைக்குத் தகுந்த வகையில், ஏற்கனவே நாம் ரசித்த பல திரைப்படங்களின் காட்சிகளை முன்மாதிரியாகக் கொண்டு திரைக்கதை வசனத்தை எழுதியிருக்கிறது ஆதர்ஷ் சுகுமாரன் – ஷபாஸ் ரஷீத் கூட்டணி.
அலெக்ஸ் ஜே.புல்லிக்கல்லின் ஒளிப்பதிவு ஓரிடத்தில் நிற்காமல் கதை நிகழும் களங்களில் சுற்றிச் சுழல்வதிலேயே கவனம் செலுத்தியிருக்கிறது. அதேநேரத்தில், அது நம் கண்களுக்கு அயர்ச்சியையும் தராத வகையில் அமைந்துள்ளது.
முன்பின்னாக நகரும் திரைக்கதைக்கு ஏற்ப சமான் சாக்கோவின் படத்தொகுப்பும் கச்சிதமாக அமைந்து, குழப்பமின்றி கதையைப் பார்வையாளர்கள் புரிந்துகொள்ள உதவியிருக்கிறது.
திருவிழா கோலம்!
வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேவாலய வளாகம், கண்களைக் கூசவைக்கும் விளக்கொளி, காதுகளை நிரப்பும் பேண்ட் இசை, வெடிக்கக் காத்திருக்கும் பட்டாசுகள், இவற்றுக்கு நடுவே கொண்டாட்ட மனநிலையுடன் திரியும் மக்கள் என்று ‘திருவிழா கோலத்துடன்’ தொடங்குகிறது ‘ஆர்டிஎக்ஸ்’ திரைக்கதை.
அதன்பிறகு, ஆக்ஷன் காட்சிகளுக்கான திரி பற்றவைக்கும் ஷாட்களில் எல்லாம் கைத்தட்டல்கள் காதைப் பிளக்கின்றன. அது போன்ற தருணங்கள் இந்த படத்தில் அதிகம்.
ஆனால், ஓணம் போன்ற விழாக்காலத்தில் மக்கள் ரசிப்பதற்கு ‘அடிதடி’ நிறைந்த ஆக்ஷன் காட்சிகள் தவிர்த்து வேறெதுவும் இல்லையா? அந்தக் கேள்வியைக் கேட்கும் பார்வையாளர்களை ‘ஆர்டிஎக்ஸ்’ நிச்சயம் திருப்திப்படுத்தாது.
அதேநேரத்தில், ’மல்டி ஹீரோ’ படமொன்றை பார்த்தும் ரசித்தும் கூக்குரல் எழுப்பிக் களிக்கக் காத்திருக்கும் ’கும்பல் மனநிலை’க்கு இப்படம் விருந்து படைக்கும்.
எண்பதுகளில் ஜெயன் காலத்திற்குப் பிறகு, இப்படிப்பட்ட காட்சியனுபவத்தைத் தரும் ஆக்ஷன் படங்கள் அவ்வப்போது மலையாளத்தில் வந்துகொண்டு தான் இருக்கின்றன.
அவை சலிப்பு தட்டும்போது, வேறு பக்கம் கவனத்தைத் திருப்புவது அங்குள்ள ரசிகர்களின் வழக்கம் என்று சொல்லப்படுவதுண்டு.
ஆனால், கேரளாவில் அந்த ரசனை அப்படியேதான் இருக்கிறது என்பதற்கு தமிழ், தெலுங்கு படங்களின் வெற்றிகளே சாட்சியாக விளங்குகின்றன.
‘கேஜிஎஃப்’பின் ’பான் இந்தியா’ வரவேற்புக்குப் பிறகு அப்படிப்பட்ட வெற்றிகளைத் தொடர்ந்து படைக்கத் துடிக்கின்றனர் மலையாளத் திரையுலகின் இளம் படைப்பாளிகள்.
டொவினோ தாமஸின் ‘தள்ளுமாலா’ அதில் கிளாஸ் ரகம் என்றால், ‘ஆர்டிஎக்ஸ்’ தருவது மாஸ் அனுபவம். அது மட்டுமே போதும் என்பவர்கள் தாராளமாக இந்த ’ஆக்ஷன் வாண வேடிக்கை’யை ரசிக்கலாம்!
– உதய் பாடகலிங்கம்