உலகின் மென்மை மிக்க கைத்தறி ஆடை பெருமைக்குரியதாக மஸ்லீன் ஆடை இருக்கிறது.
ஈராக் நாட்டின் மோசூல் நகரில் இவ்வகை துணிகள் உற்பத்தி செய்யப்பட்டதால், மோசூல், பெயர் மருவி மஸ்லீன் என பெயர் பெற்றது என்கின்றனர்.
மிகவும் மென்மையான, கைகளால் நூற்கப்பட்ட நூலால் நெய்யப்பட்ட ஆரம்பகால மஸ்லீன் துணியானது வங்காளத்தில் டாக்காவைச் சுற்றியுள்ள பகுதியில் இருந்தே தயாராகி வந்தன.
17 மற்றும் 18ம் நூற்றாண்டுகளில் இந்தியாவிற்கு ஐரோப்பாவில் இருந்து மஸ்லீன் புடவைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
அதன்பின்பு இந்தியாவில் வங்க தேசத்தில் நெய்யப்பட்ட மஸ்லீன் புடவைகள் நம் நாட்டில் குஜராத்தில் தயாரிக்கப்பட்டு, இப்போது நம்மூர் திண்டுக்கல் மாவட்டத்தின் காந்தி கிராமத்திலும் கைத்தறி நெசவாளர்களால் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கோடை மற்றும் குளிர் காலங்களில் உடலின் சீதோஷ்ண நிலையைப்பாது காக்கும் திறன் கொண்டிருக்கிற இவ்வகை மஸ்லீன் புடவைகள், காந்தி கிராமம் அறக்கட்டளை மூலம் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுக்க அமோக வரவேற்பை அள்ளிக் கொண்டுள்ளது.
இயற்கை சாயம் மூலம் நூல்களுக்கு நிறம் ஏற்றி அவற்றை ராட்டை மூலம் நூல் கண்டுகளாக மாற்றி கைத்தறி நெசவாளர்கள் மூலம் நெசவு நெய்யப்படுவதால் எளிதில் மஸ்லீன் சேலைகள் கிழிந்து விடுவதில்லை.
காந்திகிராமம் கதர் அறக்கட்டளை இதற்கென பிரத்யேகமாக சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி, ஆத்தூர் பகுதிகளில் விளையக்கூடிய உயர் ரக பருத்தி நூல்களைக் கொண்டு 120 கவுண்ட் கொண்டு சேலை நெய்யப்படுவதால் இச்சேலைகளுக்கு தமிழகத்திலும் தனி மவுசு உண்டு.
சராசரியாக ஒரு நெசவாளி ஒரு புடவை நெய்ய 3 நாட்கள் ஆகிறது. மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இப்புடவைகளை விரும்பி அணிவாராம்.
அதன்பின்பு சோனியா காந்தி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல், ஜெயந்தி நடராஜன், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ. பொன்னம்மாள் என ‘மஸ்லீன் புடவைகள்’ மீது அதீத விருப்பம் கொண்டோரின் பட்டியல் நீள்கிறது.
காந்தி கிராமத்தில் தயாராகும் இப்புடவைகள், டெல்லியில் உள்ள காதி பவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
தொடக்க காலத்தில் ஒன்றிரண்டு வண்ணங்களில் தயாரிக்கப்பட்ட இந்த மஸ்லீன் புடவைகள், இப்போது பல வண்ணங்களில் தயாரிக்கப்படுகின்றன.
கல்லூரி மாணவிகள், மருத்துவர்கள், உயர் பதவியில் உள்ளவர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர் உட்பட பல்வேறு பணிகளில் இருக்கும் பெண்கள் விரும்பி அணியக் கூடிய புடவைகளாக கதர் மஸ்லீன் புடவைகள் உள்ளன.
இயற்கை சாயம் மூலம் நிறம் ஏற்றி, கைத்தறி மூலம் மஸ்லீன் புடவைகள் உற்பத்தி செய்யப்படுவதால் சராசரியாக ஒரு புடவை 10 முதல் 15 வருடம் வரை உழைக்கிறது.
தமிழகத்தில் பிரபலமான கல்லூரிகள் மற்றும் காந்திகிராமம் பல்கலைக் கழக ஆசிரியைகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்து இப்புடவைகளை 45 வருடங்களுக்கும் மேலாக ஒரு சீருடை போல அணிந்து வருகின்றனர்.
இந்நகரத்து நெசவாளர்களும் ஆர்டரின் பேரிலும் சிறப்பு வடிவத்துடனும் மஸ்லீன் புடவைகள் பொதுமக்கள் விரும்பும் டிசைன்ளை மற்றும் வண்ணங்களில் நெசவு நெய்து கொடுத்து வருகின்றனர்.
மஸ்லீன் புடவைகளை அணிபவர்களுக்கு குளிர்காலத்தில் இதமாகவும், கோடைக் காலத்தில் குளிர்ச்சியாகவும் இருப்பதால் சரும நோய்கள் அவர்களுக்கு வருவதில்லை. இதனால் பெண்கள் அதிகளவில் விரும்பி அணிகின்றனர்.
1990ல் ரூ.600 முதல் ரூ.700 வரை விற்கப்பட்ட கதர் மஸ்லீன் புடவைகள், இப்போது ரூ.2,500 முதல் ரூ.3,000 வரை விற்கப்படுகிறது. கல்லூரி மாணவிகள் மஸ்லீன் புடவைகள் வாங்கி சுடிதார் தைத்தும் அணிந்து கொள்கின்றனர்.
மஸ்லீன் புடவைகளின் சிறப்பம்சம் குறித்து காந்திகிராமம் சேவிகா சிரமம் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை ஜெயலட்சுமியிடம் பேசினோம்.
“தம்பித்தோட்டம் பள்ளியில் எங்களுடைய ஆசிரியைகள் மஸ்லீன் புடவைகளை நேர்த்தியாகக் கட்டி வருவதைப் பார்த்து மனதைப் பறிகொடுத்த நான், பள்ளி ஆசிரியையான பின்பும் தொடர்ந்து இந்தப் புடவைகளை (மஸ்லீன்) விரும்பி அணிந்து வருகிறேன்.
தொடர்ந்து 30 வருடங்களுக்கு மேலாக மஸ்லீன் புடவைகளை வாங்கிப் பயன்படுத்தி வருகிறேன்.
காந்தி கிராமத்திற்கு கல்வி கற்க வரும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மாணவிகள் அதிக அளவில் இந்தப் புடவைகளை வாங்கிச் செல்வது இதன் பெருமையை உணர்த்துகிறது.
காந்திகிராம கைத்தறி நெசவாளர்கள் கலை நுணுக்கத்துடன் தயாரிக்கும் இந்த கதர் மஸ்லீன் புடவைகள் வசதி குறைந்தவர்கள் தொடங்கி, செல்வந்தர்கள் வரையிலும் அனைவரும் அணியும் விதத்தில் தயாராவதும் இதன் சிறப்பாகும்…” என்கிறார்.
கட்டுரை: எஸ்.எஸ்.கண்ணன்
-நன்றி: தினகரன், பொங்கல் மலர் 2022.