அண்மையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இளம்வயதில் சிறுவர்கள் செய்யும் குற்றச்செயல்கள் ஊடகங்களில் வெளிவந்து பலரையும் அதிர வைத்திருக்கின்றன.
நாங்குநேரி பள்ளிக் கூடத்தில் மட்டுமல்ல அண்மையில் கரூரிலும் சக பள்ளி மாணவர்களை வீடு புகுந்து தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவனை பத்தொன்பது வயதான கல்லூரி மாணவர்களும், பதினான்கு, பதினேழு வயதான பள்ளி மாணவர்களும் சேர்ந்து தாக்கி இருக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதைப் போலவே சோதனையின்போது விசாரித்த காவலர் ஒருவரை நான்கு மாணவர்கள் சேர்ந்து தாக்குதல் நடத்தி அந்த காவலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். தாக்கிய மாணவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.
இதைப்போன்ற நிகழ்வுகள் முன்பு எப்போதும் இருந்ததைவிட அண்மைக் காலத்தில் அதிகமாகி இருக்கின்றன. இதற்கு காவலர்கள் தரப்பில் சொல்லக்கூடிய உறுத்தலான ஒரு காரணம் மாணவர்களிடையே பரவி இருக்கும் போதைப் பழக்கம்தான்.
டாஸ்மாக் போதை மட்டுமல்ல, கஞ்சா போன்ற போதைப் பொருட்களுக்கும் இளம் வயதிலேயே அவர்கள் அடிமையாகி இருக்கிறார்கள். அந்தளவிற்கு பள்ளி கல்லூரிகளைச் சுற்றிலும் போதைப் பொருட்கள் கிடைப்பதும் இயல்பான ஒன்றாகி இருக்கின்றது.
முன்னாள் காவல்துதறை டிஜிபியாக சைலேந்திரபாபு இருந்தபோது போதை வஸ்துகளை விற்பனை செய்த நூற்றுக்கணக்கான பேர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அதுகுறித்து எச்சரிக்கை உணர்வுடன் பேசியிருக்கிறார் சைலேந்திரபாபு.
பெற்றோர்களும், ஆசிரியர்களும் மாணவர்களின் நடத்தையில், பழக்கவழக்கத்தில் அக்கறை காட்ட வேண்டும் என்கின்ற வேண்டுகோள்கள் காவலர்கள் தரப்பிலிருந்து அடிக்கடி முன் வைக்கப்பட்டிருக்கின்றன.
ஒருபுறம் பள்ளி மாணவர்களுக்கு எவ்வளவோ சலுகைகளை அரசு வழங்குகிறது. மதிய உணவுடன் காலை உணவும் தற்போது சிறப்புத் திட்டமாக பரிமாறப்படுகிறது.
எல்லாம் சரிதான். ஆனால் மாணவர்கள் மத்தியில் வெகுவாக பரவியிருக்கிற அல்லது பரவி வருகின்ற போதைப் பொருட்கள் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவது எப்படி என்பதையும் அரசு தரப்பில் சிந்திக்க வேண்டும்.
எத்தனையோ பல விஷஙயங்களில் முன்னுதாரணமக இருக்கக்கூடிய நம்முடைய தமிழ்நாட்டில் ஏன் மாணவர்கள் சில பகுதிகளில் மாணவிகள் கூட டாஸ்மாக் போதைக்கு அடிமையாகி கிடக்கிறார்கள் என்பதை சற்று சீரியஸாக யோசிக்க வேண்டிய கட்டாயத்தில் அரசும் இருக்கிறது, பெற்றோர்களும் இருக்கிறார்கள். ஆசிரியர்களும் இருக்கிறார்கள்.
– யூகி