நிலவின் மேற்பரப்பில் அதிகபட்ச வெப்பநிலை 70 டிகிரி செல்சியஸ்!

நிலவின் மேற்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் இந்திய விண்வெளி ஆய்வு மையம், ஜூலை 14-ஆம் தேதி எல்விஎம் மாக்-3 ராக்கெட் மூலம் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலம் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23ம் தேதி மாலை 6.04 மணியளவில் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இதன்மூலம் ரஷியா, அமெரிக்கா, சீனா நாடுகளுக்கு அடுத்தபடியாக நிலவின் மேற்பரப்பில் கட்டுப்பாட்டுடன் விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது.

மேலும் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.  

இதனையடுத்து சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றின் செயல்பாடுகளை தொடர்ந்து இஸ்ரோ வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் லேண்டர், ரோவர் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட இஸ்ரோ விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் தரையிறங்கிய வீடியோவையும் வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து நிலவின் தென் துருவத்தில் லேண்டர் நகர்ந்து செல்லும் புதிய விடியோவை நேற்று இஸ்ரோ வெளியிட்டது.

இந்நிலையில், சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், அது குறித்த தகவலை லேண்டர் அனுப்பியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தில் இறங்கிய லேண்டரில் சென்ற Chandra’s Surface Thermophysical Experiment கருவி வெப்பநிலை குறித்த ஆய்வுப் பணியை தொடங்கியுள்ளதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணின் வெப்பநிலையைின் சுயவிவரங்களை ஆய்வு செய்வதாகவும், நிலவின் மேற்பரப்பில் உள்ள மண்ணில் 10 செ.மீ ஆழம் வரை ஊடுருவி ஆராயக்கூடிய திறன் கொண்டதாகவும், வெப்பநிலை பரிசோதனை கருவியில் உள்ள 10 சென்சார் கருவிகள் வெப்பநிலையை தொடர்ந்து ஆய்வு செய்து வருவதாகவும், நிலவின் வெப்பநிலை மாற்றம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதனிடையே கிராஃபிக் விளக்கப்படம் பற்றி பேசிய இஸ்ரோ விஞ்ஞானி பி.எச்.எம் தாருகேஷா, ‘நிலவின் தென்துருவத்தில் மேற்பரப்பு வெப்பநிலை அதிகபட்சமாக 20 முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும் என நினைத்தோம். ஆனால், அது 70 டிகிரி செல்சியஸாக உள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பூமியின் மேற்பரப்புக்கும் அடிப்பகுதிக்கும் இடையிலான வெப்பநிலை வேறுபாடு 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை மட்டுமே இருக்கும். ஆனால், நிலவின் தென்துருவத்தில் இந்த வேறுபாடு சுமார் 50 டிகிரி செல்சியஸ் வரை உள்ளது. இந்தத் தரவுகள் நிலவு தொடர்பான கூடுதல் ஆய்வுக்குப் பெருந்துணையாக இருக்கும்’ என்றார்.

Comments (0)
Add Comment