ஊர் சுற்றி குறிப்புகள்:
சென்னை அண்ணாநகரில் உள்ள டவர் பூங்காவில் இரண்டு நாட்கள் நடந்த ஓவியக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டவர் சென்னை மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன்.
ஓவியக் கண்காட்சிக்கான அரங்குகள் அங்கு இருந்தாலும் அந்த அரங்குகளுக்காக தனித்தனியாக இரண்டாயிரம் ரூபாய் வரை வேண்டும் என்று கேட்டிருக்கிறார் ஒரு ஆளுங்கட்சி பிரமுகர்.
சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஆணையர் ராதாகிருஷ்ணனிடமே “எம்.எல்.ஏ.வுக்கும் கவுன்சிலருக்கும் பணம் தரவேண்டும் என்று வற்புறுத்தியிருக்கிறார்.
இதையொட்டி எரிச்சலடைந்த ராதாகிருஷ்ணன் அந்த ஆளுங்கட்சி பிரமுகர்கள் கேட்ட பணத்தை தானே தர முன்வருவதாக கோப்பட்டு பேசியிருக்கிறார்.
மேலே குறிப்பிட்ட மாநகராட்சி ஆணையிரிடமே லஞ்சம் கேட்ட நிகழ்வு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இம்மாதிரியான நிகழ்வுகள் சென்னை அண்ணாநகரில் மட்டுமல்ல தமிழகம் முழுக்க பல இடங்களில் பரவலாக நடக்கின்றன.
ஒரு தெருவில் ஒருவர் புது வீடு கட்டினால் கூட உள்ளுர் கவுன்சிலர்களுக்கு குறிப்பிட்ட பணத்தை லஞ்சமாக தர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இப்படி ஒவ்வொன்றிலும் மாநகராட்சி, நகராட்சி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கை நீட்டுவது பரவலாகிக் கொண்டிருக்கிறது.
இதைவிட சென்னையில் அண்மையில் நடந்த ஒரு கொடுமை பலரை அதிர்ச்சியடைய வைக்கும்.
சென்னை மாநகரம் எங்கும் பரவலாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்காக பல தெருக்கள், சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டிருக்கின்றன. இந்த பள்ளங்களை மூடுவதற்கு பல மாதங்கள் ஆகிவிடுகின்றன.
அந்தந்த பகுதிகளில் குடியிருப்பவர்களும் வியாபார நிறுவனங்களை நடத்துகிறவர்களும் இதனால் படாதபாடு பட வேண்டியிருக்கிறது.
தெருக்களில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் மூன்று, நான்கு மாதங்களுக்கு மேல் அப்படியே நீடித்திருப்பதும் தற்போது சகஜமாகிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் சென்னையின் மிக முக்கிய பகுதிகளில் ஒப்பந்தர் ஒருவர் தோண்டப்பட்ட பள்ளங்களை மூடுவதற்கு வீட்டு உரிமையாளர்களிடமும் கடைக்கார்களிடமும் பணம் கேட்டிருப்பது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்காகவா உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்டு மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு பகுதிகளிலும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் இப்படி ஆதிக்கம் செலுத்துவதால் ஏற்படும் கெட்ட பெயர் என்னவோ ஆளுங்கட்சிக்குத் தான் போய் சேர்ந்து கொண்டிருக்கிறது.
– யூகி